Why should be senses subdued? | Vana Parva - Section 210 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஐம்பூதங்களின் குணங்களையும், புலன்களை அடக்குவது, அடக்காமல் இருப்பது, மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கான காரணங்களைத் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷிட்ரனிடம்}தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி அறம்சார்ந்த வேடனால் {தர்மவியாதனால்} விசாரிக்கப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, மனதிற்கு மிகவும் திருப்தியைத் தரும் இந்தச் சொல்பொழிவை மீண்டும் தொடங்கினார். அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவனே, ஐந்து பெரும் அடிப்படைக் கூறுகள் {ஐம்பூதங்கள்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது; அந்த ஐந்தில் ஒன்றின் பண்புகளை {ஒவ்வொன்றையும் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கங்குலி any one of the five என்று தான் சொல்கிறார்} முழுமையாக எனக்கு விபரித்துச் சொல்" என்று கேட்டார். வேடன், "பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் {ஆகிய ஐந்தும்} ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகள் கொண்டவை. நான் அவற்றை உமக்கு விவரிக்கிறேன்.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, பூமிக்கு ஐந்து பண்புகள் இருக்கின்றன. நீர் நான்கும்,, நெருப்பு மூன்றும், காற்றும் ஆகாயமும் சேர்ந்து மூன்றும் {மூன்று பண்புகளையும்} கொண்டிருக்கின்றன. ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகிய ஐந்து பண்புகளும் பூமியிடம் இருக்கின்றன. ஓ! எளிய அந்தணரே {கௌசிகரே} ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகியவை {ஆகிய நான்கும்} நீரின் பண்புகள் என உமக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒலி, தொடு உணர்ச்சி, உருவம் ஆகிய மூன்று பண்புகளும் நெருப்புக்கு இருக்கின்றன. காற்றுக்கு ஒலி, தொடு உணர்ச்சி என்ற இருந்து பண்புகள் இருக்கின்றன. ஆகாயத்துக்கு ஒலி என்ற பண்பு இருக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஐம்பூதங்களில் உள்ளார்ந்து இருக்கும் இந்தப் பதினைந்து பண்புகளும், இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; ஓ அந்தணரே {கௌசிகரே} அவை சரியான கலவையில் இருக்கின்றன.
இந்த முழு அண்ட மும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்படும்போது, அந்தக் கால நிறைவில் ஒவ்வொரு உடலும், மற்றொரு உடலை எடுத்துக் கொள்கிறது. சரியான வரிசையில் அது எழுகிறது, சரியான வரிசையில் அது விழுகிறது {அழிகிறது}. அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் நிறைந்த உலகம், தற்போது உள்ள இந்த ஐந்து அடிப்படை பொருட்களால் {ஐம்பூதங்களால்} இயற்றப்பட்டுள்ளது. புலனுணர்வால் உணரக்கூடிய எதுவும் வியக்தம் (அறியத்தக்கது அல்லது புரிந்து கொள்ளக் கூடியது) என்று அழைக்கப்படுகிறது. புலன்களுக்கு எட்டாதவையும், அனுமானத்தின் மூலமாக மட்டும் காணக்கூடியவைகள் அவியக்தம் (வியக்தம் அல்லாதது) என்று அறியப்படுகிறது.
ஒலி, உருவம் முதலிய வெளிநிலைகளை முறையான இலக்கின்படி செய்து புலன்களைக் கட்டுப்படுத்திச் சுயபரிசோதனை எனும் ஒழுக்கத்தில் ஒரு படி ஈடுபடும் ஒருவன், {அப்படிச் சுயபரிசோதனை செய்யும்போது}, அண்டத்தில் வியாபித்துள்ள தனது சொந்த ஆவியையும் {ஆன்மாவையும்} மற்றும் தன்னைப் பிரதிபலிக்கும் அண்டத்தையும் காண்கிறான். தனது முந்தைய கர்மத்துடன் {வினையுடன்} தொடர்புடைய ஒருவன், எவ்வளவுதான் ஆன்ம ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவனது ஆன்மாவின் புறநிலை இருப்பை மட்டுமே அறிகிறான். ஆனால் சுற்றியிருக்கும் புற நிலைமைகளால் பாதிக்கப்படாத ஆன்மா கொண்ட மனிதன், அடிப்படை ஆவியான பிரம்மம் அதைக் {கர்மங்களின் தொடர்பை} கிரகிப்பதன் காரணமாக {அம்மனிதன்} தீமைகளுக்கு ஆட்படுவதில்லை.
மாயையின் ஆதிக்கத்தில் இருந்து ஒரு மனிதன் விடுபடும்போது, ஆன்மிக ஞானத்தின் சாரம் கொண்டவையும், ஆண்மை நிறைந்தவையுமான அவனது அறங்கள், ஆன்ம ஞானத்தின் பக்கம் திரும்பி, புலனறிவும் ஆற்றலுமுள்ள புத்திசாலியாக அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது. அத்தகைய மனிதன், தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} இல்லாத, தானே இருப்பதான {சுயம்புவான}, மாற்றம் இல்லாத, உடல் வடிவம் இல்லாத, ஒப்பிடமுடியாத எல்லாம் வல்ல அறிவார்ந்த ஆவியால், உருவம் கொடுக்கப்படுகிறான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நீர் இப்படி என்னை விசாரிப்பதே தன்னொழுக்கத்தினால் {சுய ஒழுக்கத்தினால்} மட்டுமே பெறக்கூடிய விளைவாகும். இந்தத் தன்னொழுக்கம், புலன்களை அடக்குவதால் மட்டுமே அடையப்படுகிறது. இதற்கு வேறு வழியில்லை. சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தே இருக்கிறது. கட்டுக்குள் வைக்கப்படும்போது அவை சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்; பழக்கப்படுத்தினால் {கட்டுப்படுத்தாவிட்டால்}, அவை நரகத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புலனடக்கமே ஆன்ம ஒளியை அடைவதற்கான உயர்ந்த வழிமுறையாகும். நமது புலன்களே, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கான வேராகவும் (காரணமாகவும்), ஆன்ம அழிவுக்கான வேராகவும் இருக்கிறது. அவற்றைப் பழக்கப்படுத்துவதால் {கட்டுப்படுத்தாமல் செயல்படவிட்டால்}, ஒரு மனிதன் சந்தேகமற தீயவற்றோடு தொடர்பு கொள்கிறான். அவற்றை அடக்கினால் அவன் முக்தியை அடைகிறான். சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், தன் இயல்பில் உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்களின் {அறிவுகளாக இருக்க வேண்டும்} மீது ஆதிக்கத்தை அடைந்தால், அவன் பாவத்தால் களங்கப்படுவதில்லை. மேலும் அதன் காரணமாகத் தீமைக்கு அவன் மீது எந்த அதிகாரமும் ஏற்படுவதில்லை. மனிதனின் உடல் தேராகவும், அவனது ஆன்மா தேரோட்டியாகவும், அவனது புலன்கள் குதிரைகளாகவும் ஒப்பிடப்படுகிறது. திறமையான கரங்கள் கொண்ட மனிதன், அமைதியான தேரோட்டியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட குதிரைகளைக் குழப்பமில்லாமல் செலுத்துகிறான்.
இயற்கையாக உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்கள் எனும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களைப் பொறுமையாக பற்றி ஓட்டுபவன் அற்புதமான தேரோட்டியாகக் கருதப்படுகிறான். நெடுஞ்சாலையில் செல்லும் ஆளுமைக்குட்படாத குதிரைகளைப் போல நமது புலன்கள் ஆகும்போது, நாம் அதன் கடிவாளத்தைப் பொறுமையாகப் பற்ற வேண்டும். பொறுமையால் மட்டுமே நாம் நிச்சயம் சிறந்ததைச் செய்ய முடியும். ஒரு மனிதனின் மனது, எந்த ஒரு புலனின் முரட்டு ஓட்டத்திலாவது மூழ்கினால், புயலின் போது உயர்ந்த சமுத்திரத்தில் தூக்கி வீசப்படும் கப்பல் போல ஆகி, அவன் தனது புத்தியை இழக்கிறான். மனிதர்கள், அந்த ஆறு பொருட்களால் கனிகளை அறுக்கலாம் {பலன்களை அனுபவிக்கலாம்} என்ற நம்பிக்கையில் மாயையால் ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் தெளிவான கருத்துகளால் கனிகளை அறுக்கும் ஆன்ம உள்பார்வை கொண்ட மனிதர்களால் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன" என்றான் {தர்மவியாதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.