Ashtakapala rites! | Vana Parva - Section 220 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பரதன், பானு, பிருகத்பானு, மனு, ஆகிய நெருப்புகளின் சந்ததிகளையும், அக்னிகளுக்குள் ஏற்படும் தொடர்புகளால் விளையும் தோஷங்களை நிவர்த்தி செய்ய அஷ்டகபாலச் சடங்கு செய்வது ஆகியவற்றையும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பரதன் என்று அழைக்கப்பட்ட நெருப்பு, தவத்தின் கடும் விதிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவனது நெருப்புக்கு புஷ்டிமதி என்று மற்றொரு பெயரும் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் புஷ்டியைக் (வளர்ச்சியைக்) கொடுப்பதால் அவன் திருப்தி அடைகிறான். அதன் காரணமாகவே அவன் பரதன் (அல்லது பேணிக் காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். சிவன் என்ற பெயர் கொண்ட மற்றொரு நெருப்பானவன், சக்தி (இயற்கை சக்திகளின் தலைமை தெய்வம்) வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். துயரத்தில் சிக்கியிருக்கும் அனைத்து உயிர்களையும், துன்பங்களில் இருந்து விடுவிப்பதால் அவன் சிவன் (நல்லதைக் கொடுப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். பெரும் தவச் செல்வத்தை தபஸ் பெற்றிருந்ததால் {தபன் என்று அழைக்கலாம்}, அதை {தவச்செல்வத்தை} அடைவதற்காகப் புரந்தரன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மகன் பிறந்தான். ஊஷ்மா என்ற இன்னொரு மகனும் பிறந்தான். இந்த நெருப்பு {ஊஷ்மா} அனைத்துப் பொருட்களின் ஆவியிலும் {vapour உஷ்ணமாக} காணப்படுகிறது. மேலும் மூன்றாவதாக மனு என்ற மகன் பிறந்தான். அவன் பிரஜாபதியாக அதிகாரம் செய்தான்.
பிறகு, வேதங்களைக் கற்ற அந்தணர்கள், சம்பு என்ற நெருப்பின் {நான்காவது புதல்வனின்} சுரண்டல்களைப் பேசுகின்றனர். அதன்பிறகு பிரகாசமான ஆவஸ்த்தியன் என்ற நெருப்பைக் {ஐந்தாவது மகன்} குறித்து அந்தணர்கள் பேசுகின்றனர். இப்படியே தபன், தங்கம் போன்ற பிரகாசமுடைய ஐந்து நெருப்புகளைப் படைத்தான். இவர்கள் அனைவரும் வேள்விகளில் அளிக்கப்படும் சோம பானத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். (ஒரு பகலின் உழைப்புக்குப் பிறகு) களைத்துப் போன சூரிய தேவன், பிரசந்த நெருப்பாக அறியப்படுகிறான். அவனே பூமியில் உள்ள பயங்கரமான அசுரர்களையும், இன்னும் பலவகைப்பட்ட பிற உயிரினங்களையும் படைத்தவனாவான். அங்கிரசும், தபனின் மகனான பானுவைப் பிரஜாபதியாகப் படைத்தான். வேதங்களைக் கற்ற அந்தணர்களால் அவன் {பானு}, பிருகத்பானு (பெரும் பானு) என்றும் அழைக்கப்படுகிறான். பானு சுப்ரஜா என்பவளையும், பிருகத்பானு சூரியனின் மகளையும் திருமணம் செய்தனர். அவர்கள் ஆறு மகன்களைப் பெற்றனர்; அவர்களது சந்ததியைக் குறித்துக் கேள்.
பலவீனமானவர்களுக்குப் பலத்தைக் கொடுப்பவன் பலதன் (பலத்தைக் கொடுப்பவன்) என்ற நெருப்பாவான். அவன் பானுவின் முதல் மகனாவான். அனைத்து கூறுகளும் {சக்திகளும்} அமைதியான நிலையில் இருக்கும்போது பயங்கரமாகத் தெரியும் மற்றுமொரு நெருப்பு மஞ்சுமான் {மன்யுமான்} என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் இரண்டாவது மகனாவான். தர்சா மற்றும் பௌர்ணமஸ்யா வேள்விகளின் யாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாகத் தெளிந்த நெய் காணிக்கையாகத் தரப்படுகிறதோ, அவன் இவ்வுலகில விஷ்ணு (பானுவின் மூன்றாவது மகன்) என்று அறியப்படுகிறான். அவன் அங்கிரஸ் என்றும் திருத்திமான் என்றும் அழைக்கப்படுகிறான். ஆக்கிரயணம் என்ற காணிக்கை, இந்திரனுடன் சேர்ந்து யாருக்கு அளிக்கப்படுகிறதோ அவன் ஆக்கிரயணன் நெருப்பு என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் (நாலாவது) மகனாவான். அக்கிரஹன் பானுவின் ஐந்தாவது மகனாவான். சாதுர்மாஸ்ய (நான்கு மாத) சடங்குகளின் தினமும் காணிக்கைகளின் ஊற்றாக இருப்பவன் அவனே {ஆக்கிரஹன்}. ஸ்துபன் என்பவன் பானுவின் ஆறாவது மகனாவான்.
பானு என்ற பெயரால் அறியப்படும் மனுவின் மற்றுமொரு {மூன்றாவது} மனைவியின் பெயர் நிசை. அவள் {ரோஹிணி என்கிற} ஒரு மகளையும், இரண்டு அக்னிசோமன்களையும் {என்ற இரு மகன்களையும்}, மேலும் ஐந்து பிற அக்னி தேவர்களையும் பெற்றெடுத்தாள். மேக தேவர்களுடன் {மேகங்களின் தேவர்களுடன்} சேர்த்து முதல் காணிக்கையால் மரியாதை செய்யப்படும் பிரகாசமிக்க நெருப்பு {அக்னி} தேவன் வைஸ்வானரன் என்று அழைக்கப்படுகிறான். உலகங்கள் அனைத்துக்கும் தலைவன் என்று அழைக்கப்படும் மற்றுமொரு நெருப்பு விஸ்வபதி என்று அழைக்கப்படுகிறான். அவன் மனுவின் இரண்டாவது மகனாவான். மனுவின் மகள், சுவிஷ்டகிருத் என்று அழைக்கப்படுகிறாள். அவளுக்குச் செலுத்தப்படும் காணிக்கையால் ஒருவன் பெரும் தகுதிகளை அடைவதால் அவளுக்கு அப்பெயர் ஏற்பட்டது. அவள் ஹிரண்யகசியுவின் மகளாக இருப்பினும், தனது தீச்செயல்களால் அவள் அவனுக்கே {ஹிரண்யகசிபுவுக்கே} மனைவியானாள். இருப்பினும் அவள் பிரஜாபதிகளில் ஒருவராக இருக்கிறாள். உடலுக்கு அசைவைக் கொடுத்து, அனைத்து உயிர்களின் உயிர்க்காற்றை இருக்கையாகக் கொண்ட மற்றொரு நெருப்பு சன்னிஹிதன் என்று அழைக்கப்படுகிறான். ஒலி மற்றும் உருவம் சம்பந்தமான நமது கருத்துகளுக்கு அவனே காரணமாவான். நெருப்புக்கு ஆதரவாக இருந்து, கருப்பு வெள்ளை கறைகளால் குறிக்கப்படும் தெய்வீக ஆவி, பாவமற்றவனாக இருப்பினும், விரும்பிய கர்மத்தை சாதிப்பவனாக இருக்கிறான். அவனை ஞானம் கொண்டோர் கபில நெருப்பாகவும் பெரும் முனிவரகாவும் கருதுகின்றனர். அவனே சாங்கிய யோக முறையைத் தோற்றுவித்தவனாவான்.
எந்த நெருப்பின் மூலம், உலகின் பிற உயிரினங்கள் செய்யும் விசித்திரமான சடங்கில் ஆக்கிரம் என்று அழைக்கப்படும் தங்கள் காணிக்கைகளை அடிப்படை ஆவிகளானவர்கள் பெறுகிறார்களோ, அந்த நெருப்பானவன் அக்கிரணி என்று அழைக்கப்படுகிறான். அக்னி ஹோத்ர சடங்குகளுக்குக் குறைபாடுகளால் அழிவு ஏற்படும்போது அதைக் களைய உண்டான இந்தப் பிற பிரகாசமான நெருப்புகள் உலகில் புகழுடன் இருக்கின்றனர். காற்றின் செயலால் இந்த நெருப்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தெற்கு நெருப்பு {தக்ஷிணாக்னி} மற்ற இரண்டு நெருப்புகளுடன் {கார்ஹபதத்தோடும், ஆஹவனீயத்தோடும்} தொடர்பு கொண்டால், விதி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தங்கள் இடத்தில் இருக்கும் நெருப்புகளான நிவேசம், தேவாக்னி என்ற நெருப்புடன் தொடர்பு கொண்டால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும்.
நிலைத்த நெருப்பானது, தனது மாதாந்திர காலத்தில் ஒரு பெண்ணால் தொடப்பட்டால், அந்தத் தோஷத்தைக் களைய, தஸ்யுமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். அக்னிஹோத்திர சடங்குகள் செய்யப்படும் போது, எந்த உயிரினத்தின் இறப்பைப் பற்றிப் பேசினாலோ, விலங்குகள் இறந்தாலோ, சுரபிமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்து அந்தத் தோஷம் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும். நோயால் துன்புறும் அந்தணன், மூன்று இரவுகள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்க முடியாவிட்டால், வடக்கு நெருப்பை {உத்திராக்னியை} மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து அதைத் திருத்த வேண்டும். தர்சத்தையும், பௌர்ணமாஸ்ய சடங்குகளையும் செய்தவன், பதிகிருத் நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து நிவர்த்திச் செய்து கொள்ள வேண்டும். படுக்கையறையில் இருக்கும் நெருப்புக்கும், நிலைத்தப் புனித நெருப்புக்கும் தொடர்புண்டானால், அக்னிமான் நெருப்பை மதித்து அஷ்டகபாலச் சடங்குகளைச் செய்து அது நிவர்த்திச் செய்யப்பட வேண்டும்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.