Evil spirits! | Vana Parva - Section 229 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஏழு முனிவர்களின் மனைவியரை ஸ்கந்தன் அன்னையாக ஏற்றது; இந்திரன் விண்மீன் கூட்டத்தில் கிருத்திகைக்கான இடத்தைக் கோரியது; ஸ்கந்தன் அதற்கு அருளியது; வினதை உட்பட்ட தாய்மார் தீய ஆவிகளாகி குழந்தைகளைக் கொல்லும் வரத்தை ஸ்கந்தனிடம் கேட்டது; தீய ஆவிகளின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவியரும், மஹாசேனன் {ஸ்கந்தன்} நற்பேறு பெற்றதையும், தேவர்கள் படையின் தலைமை ஏற்றதையும் அறிந்து, அவனது {ஸ்கந்தனின்} இருப்பிடத்திற்கு வந்தனர். உயர்ந்த அறத்தகுதி படைத்த அந்த அறம்சார்ந்த மங்கையர் அந்த முனிவர்களால் கைவிடப்பட்டு இருந்தனர். தேவர்ப்படை தலைவனைச் சந்திப்பதில் காலந்தாழ்த்தாமல், அவனிடம் {முருகனிடம்} சென்று, "ஓ! மகனே, தேவர்களைப் போன்ற எங்கள் கணவர்களால் எந்தக் காரணமும் இன்றி நாங்கள் கைவிடப்பட்டோம். சில மனிதர்கள் நாங்கள் தான் உன்னைப் பெற்றதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்தக் கதையை உண்மை என்று நம்பிய அவர்கள் {எங்கள் கணவர்கள்} பெரிதும் கோபித்துக் கொண்டு, எங்கள் புனித இடங்களில் இருந்து எங்களை வெளியேற்றிவிட்டனர். இந்த அபகீர்த்தியில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா} நாங்கள் உன்னை எங்கள் மகனாகச் சுவீகரிக்க எண்ணுகிறோம். உனது ஆதரவை அடைந்தால் நித்திய அருளை அடைந்து பாதுகாப்பாக இருப்போம். இதைச் செய்து கடனைத் தீர்த்தவனாவாயாக" என்றனர்.
ஸ்கந்தன், "ஓ! குறையற்ற குணம் கொண்ட மங்கையரே, நீங்கள் எனது தாய்மாரே ஆவீர்கள். நான் உங்களது மகனே! நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அடைவீர்கள்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பின்பு சக்ரன் {இந்திரன்} ஸ்கந்தனிடம் ஏதோ சொல்ல விரும்ப, ஸ்கந்தன் அவனிடம் {இந்திரனிடம்}, "என்ன அது?" என்று கேட்டான். ஸ்கந்தனால் பேசச் சொல்லிக் கேட்டுக் கொள்ளப்பட்ட வாசவன் {இந்திரன்}, "ரோகிணியின் தங்கையான அபிஜித் என்ற மங்கை, அவளது {ரோகிணியின்} மூப்பில் பொறாமை கொண்டு, {தானே மூத்தவளாக வேண்டும் என்று எண்ணி} தவம் செய்யக் கானகம் சென்றிருக்கிறாள். இப்படி விழுந்த நட்சத்திரத்திற்கு {அபிஜித்துக்கு = உத்திராடம் நட்சத்திரத்திற்கு} ஒரு மாற்று கண்டு கண்டுபிடிக்க முடியாமல் இழப்புடன் நான் இருக்கிறேன். உனக்கு நற்பேறு உண்டாகட்டும். இந்தப் பெரும் விண்மீன் கூட்டத்தை (அந்தக் காலி இடத்தைப் பூர்த்திச் செய்ய) சரி செய்ய, பிரம்மனிடம் நீ ஆலோசனை செய்வாயாக. தனிஷ்டம் {அவிட்டம்} மற்றும் பிற விண்மீண்கள் பிரம்மனால் படைக்கப்பட்டது. ரோகிணியும் இதுபோன்ற ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாள்" என்றான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} ஆலோசனைப் படி வானத்தில் கிருத்திகைக்கு ஒரு இடம் ஒடுக்கப்பட்டது. அக்னியைத் தலைமையாகக் கொண்ட அந்த நட்சத்திரம் {கார்த்திகை} ஏழு தலைகளுடன் ஒளிர்கின்றது. வினதை என்பவள் ஸ்கந்தனிடம், "நீ எனக்கு மகனைப் போன்றவன். ஈமச்சடங்கில் எனக்குப் பிண்டம் அளிக்கத்தக்கவன். என் மகனே, நான் எப்போதும் உன்னுடனே வாழ விரும்புகிறேன்" என்றாள்.
ஸ்கந்தன், "அப்படியே ஆகட்டும்! அனைத்துப் புகழும் உங்களையே சாரட்டும்! தாயின் பாசத்தோடு என்னை வழிநடத்தி, உங்கள் மருமகளால் மதிக்கப்பட்டு என்னுடன் எப்போதும் வாழ்ந்து வாருங்கள்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்தப் பெரும் தாய்மார்கள் ஸ்கந்தனிடம், "கற்றோரால் எங்கள் அனைத்து உயிரினங்களின் தாய்மாராவோம். ஆனால், நாங்கள் உனது தாய்மாராக விரும்புகிறோம். எங்களைப் பெருமைப்படுத்துவாயாக" என்றனர்.
ஸ்கந்தன், "நீங்கள் அனைவரும் எனது தாய்களே. நான் உங்கள் மைந்தன். உங்களைத் திருப்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.
அதற்கு அந்தத் தாய்மார்கள், "பழங்காலத்தில் உலகத்திற்குத் தாய்மார்களாக அந்த (பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட) மங்கையர் நியமிக்கப்பட்டார்கள். ஓ! பெரும் தேவா {ஸ்கந்தா}, அவர்களிடம் இருந்து அந்தக் கண்ணியத்தைப் பறிமுதல் செய்து, அந்த இடத்தில் எங்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களை விட்டு உலக மக்கள் எங்களை வழிபட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். உன் நிமித்தமாக அவர்களால் {எங்கள் கணவர்கள் எங்கள் மீது கோபம் கொண்டு தள்ளி வைத்ததால} நாங்கள் இழந்த சந்ததியை எங்களுக்கு நீ மீட்டுத் தா" என்றனர்.
ஸ்கந்தன், "ஏற்கனவே ஒரு முறை கொடுக்கப்பட்டுவிட்டதை {உலக அன்னையர் என்ற கண்ணியத்தை} நீங்கள் அடைய முடியாது. ஆனால், நீங்கள் விரும்பினால், உங்களுக்கு வேறு வாரிசுகளை என்னால் தர முடியும்" என்றான். அதற்கு அந்தத் தாய்மார், "நாங்கள் உன்னுடன் வாழ்ந்து கொண்டே, பலதரப்பட்ட உருவங்களைக் கொண்டு, அந்தத் தாய்மார் {பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட அன்னையர்} மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் சந்ததிகளை உண்ணும் சக்தி பெற விரும்புகிறோம். நீ எங்களுக்கு இந்த உதவியைச் செய்வாயாக" என்றனர்.
ஸ்கந்தன், "என்னால் உங்களுக்குச் சந்ததியைத் தர முடியும். ஆனால், இப்போது நீங்கள் சொன்னது மிகவும் வலி மிகுந்த ஒன்றாகும். செழிப்படைவீர்களாக! அனைத்துப் புகழும் உங்களைச் சேரட்டும் மங்கையரே, நீங்கள் அவர்களுக்கு {அவர்களது சந்ததிகளுக்கு} உங்கள் பாதுகாப்பை அருளுங்கள்" என்றான்.
அதற்கு அந்தத் தாய், "ஓ! ஸ்கந்தா, நீ விரும்பியபடியே நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம். நீ செழிப்படைவாயாக? ஆனால், ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நாங்கள் எப்போதும் உன்னுடன் வாழ விரும்புகிறோம்" என்றனர்.
ஸ்கந்தன், "மனிதர்களின் குழந்தைகள், இளமை நிலையான பதினாறு வயதை அடையாத வரை, நீங்கள் உங்கள் பல்வேறு உருவங்களால் அவர்களைத் துன்புறுத்தலாம். அளவற்ற கடுமைநிறைந்த ஆவியை {என் சக்தியை} நானும் உங்களுக்கு வழங்குகிறேன். அதைக் கொண்டு நீங்கள் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு ஸ்கந்தனின் உடலில் இருந்து கடுமையும் பலமும் மிக்க ஒருவன், மனிதர்களின் சந்ததிகளை விழுங்கும் காரணத்திற்காக வந்தான். {அப்படி வந்தவன்}, பசியால் உணர்வற்றுத் தரையில் விழுந்தான். ஸ்கந்தனால் உத்தரவிடப்பட்ட அந்தத் தீய மேதை ஒரு பயங்கர உருவத்தை எடுத்தான். நல்ல அந்தணர்கள் மத்தியில் அவன் ஸ்கந்தாபஸ்மாரன் என்ற பெயரால் அறியப்படுகிறான். பெரும் பயங்கரம் கொண்ட வினதை சகுனி கோள் {கிரகம்} {தீமையின் ஆவி} என்று சொல்லப்படுகிறாள். பூதனா ராட்சசி என்று கற்றோரால் அழைக்கப்படுபவள் பூதனா என்ற கோளாகும் {பூதன கிரகமாகும்}. அருவருப்பான தோற்றமும், பார்ப்பதற்குக் கடுமையும் பயங்கரமும் நிறைந்த அந்தப் பிசாசமானவள், சீதபூதனை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தக் கடும்தோற்றம் கொண்ட ஆவியே {சீதபூதனையே} மங்கையரின் கருச்சிதைவுக்குக் காரணமாவாள். ரேவதி என்ற பெயராலும் அதிதி அறியப்படுகிறாள்; குழந்தைகளைத் துன்புறுத்தும், ரைவதம் என்று அழைக்கப்படும் பயங்கரமான கோள் அவளது {அதிதி [அ] ரேவதியின்} தீய ஆவியே ஆகும். தைத்தியர்களின் (அசுரர்களின்) தாயான திதி, முகமண்டிகை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தப் பயங்கரி சிறு குழந்தைகளின் இறைச்சியை மிகவும் விரும்புபவளாவாள்.
ஓ! கௌரவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனால் பெறப்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தீய ஆவிகளாவர். அவர்கள் கருப்பையில் உள்ள கருவை அழிப்பவர்களாவர். இவர்களே (குமாரர்களே) அந்த மங்கையருக்குக் கணவர்களாக அறியப்படுகிறார்கள். இந்தக் கொடுமையான ஆவிகளால், குழந்தைகள், எதிர்பாராத நேரத்தில் அபகரிக்கப்படுகிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மாட்டினத்தின் {மாடுகளின்} தாய் என்று அழைக்கப்படும் சுரபி {காமதேனு}, சகுனி என்றழைக்கப்படும் தீய ஆவியால் நன்கு விரட்டப்படுகிறாள் {சகுனி காமதேனுவை வாகனமாகக் கொண்டிருக்கிறான்}. அப்படி அவளின் {சுரபியின்} துணையுடன் அவன் {சகுனி}, பூமியில் உள்ள குழந்தைகளை விழுங்குகிறான். நாய்களுக்கெல்லாம் தாயான சரமாவும், கருவில் இருக்கும் மனிதர்களைக் {குழந்தைகளைக்} கொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாள். மரங்களனைத்துக்கும் தாயானாவள் கரஞ்ச {புங்கை [புன்கு]} மரத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதும் வரங்களைக் கொடுப்பவளாவும், நல்ல உருவமுள்ளவளாகவும், அனைத்து உயிரினங்களிடத்தில் தயை உள்ளவளாகவும் இருக்கின்றாள். எனவே, குழந்தைகளை விரும்பும் மனிதர்கள், கரஞ்ச {புங்கை} மரத்தில் அமர்ந்திருக்கும் அவளை வணங்குகிறார்கள்.
இந்தப் பதினெட்டு தீய ஆவிகளும் இறைச்சியையும், மதுவையும், அதே வகையான பிறவற்றையும் விரும்பி, பத்து நாட்களுக்கு {சூதிகா கிரகத்தில் = இறைச்சி & மது இருக்கும் இடத்தில்} தவிர்க்க முடியாமல் தங்குகின்றன. கத்ரு என்பவள் நுட்பமான உடல் கொண்டு கர்ப்பத்திற்குள் நுழைகிறாள். அங்கு அவள் {கத்ரு} கருவின் அழிவுக்குக் காரணமாகிறாள். அந்தத் {கருவுற்ற} தாய், நாகத்தை (பாம்பை) {அங்கக் குறைவுள்ள [அ] அங்கங்கள் சிதைந்த மனிதர்களான நாகர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்} பெற்றெடுக்கிறாள். கந்தர்வர்களின் தாய் கருவைக் கவர்ந்து செல்கிறாள். இதன்காரணமாக அந்த {கருவுற்ற} பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்சரசுகளின் தாய் கருவறையில் உள்ள கருவை அகற்றுகிறாள். இதன்காரணமாக, கற்றவர்கள் அந்தக் கருவை, வளர்ச்சி குறைந்த கரு என்கின்றனர். சிவப்புக் கடல் {லோஹிதம் [கடல்]} தேவனின் மகள் ஸ்கந்தனுக்கு அமுதூட்டியவள் என்று சொல்லப்படுகிறாள். கடம்ப மரங்களில் இவள் லோஹிதாயணி என்ற பெயரால் வழிபடப்படுகிறாள். ஆண்களிடம் ருத்திரன் என்ன செய்கிறானோ, அதே செயலையே பெண்களிடம் ஆர்யை செய்கிறாள். இவளே {ஆர்யை} அனைத்துக் குழந்தைகளின் தாயாவாள். அவர்களது {குழந்தைகளின்} நன்மைக்காகத் தனித்துவமாக இவளே {ஆர்யை} வழிபடப்படுகிறாள். நான் விவரித்திருக்கும் இவர்கள் இளம் குழந்தைகளின் விதிகளை ஆதிக்கம் செலுத்தும் தீய ஆவிகளாவர். குழந்தைகள் பதினாறு வயதை அடையும் வரை இந்த ஆவிகள், அவர்களுக்குத் தீமையும், அதன் பிறகு நன்மையும் செய்கின்றன.
நான் விவரித்திருக்கும் ஆண், பெண் ஆவிகளான இவர்கள் அனைவரும் மனிதர்களால் ஸ்கந்தனின் ஆவிகள் என்றே வகுக்கப்பட்டுள்ளனர். நெருப்பிலிடப்படும் காணிக்கைகள் {தகனபலிகள்}, உறுப்புகள்சுத்தம் {அங்கசுத்தம்}, தைலங்கள் {வாசனை திரவியங்கள்}, வேள்விகள், பிற காணிக்கைகள், குறிப்பாக ஸ்கந்தன் வழிபாடு ஆகியவை அவர்களின் {அந்த தீய ஆவிகளின்} கோபத்தைத் தணிக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் உரிய முறையில் மதிக்கப்பட்டு, வணங்கப்பட்டால், மனிதர்கள் விரும்பும் அனைத்து நன்மைகளையும், வீரத்தையும், நீண்ட வாழ்நாளையும் {ஆயுளையும்} அளிக்கிறார்கள். மகேஸ்வரனை வணங்கி, பதினாறு வருடம் கடந்த பிறகு, மனிதர்களின் {அந்தக் குழந்தைகளின்} விதியில் ஆதிக்கம் கொள்ளும் அந்த ஆவிகளின் இயல்புகளைச் நான் இப்போது சொல்கிறேன்.
உறங்கும்போதோ, விழித்த நிலையிலோ தேவர்களைக் காணும் ஒரு மனிதன் விரைவில் பைத்தியமாகிறான். எந்த ஆவியின் ஆதிக்கத்தால் இந்தப் பிரமைகள் நடக்கின்றனவோ அது தேவ ஆவி என்று அழைக்கப்படுகிறது. வசதியாக அமர்ந்திருக்கும்போதோ, படுக்கையில் கிடக்கும்போதோ இறந்த தனது மூதாதையர்களைக் காணும் ஒரு மனிதன், விரைவில் தனது அறிவை இழக்கிறான். இந்த அறிவுணரும் மாயைக்குக் காரணமான ஆவி மூதாதையர்களின் ஆவி என்று அழைக்கப்படுகிறது. சித்தர்களை அவமதிக்கும் ஒருவன், பதிலுக்கு அவர்களால் சபிக்கப்பட்டு, விரைவில் பைத்தியமாகிறான். இந்தத் தீய ஆதிக்கத்தைக் கொண்டுவரும் ஆவி சித்த ஆவி என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஆவியின் ஆதிக்கத்தால் ஒரு மனிதன் நறுமணத்தை உணர்ந்து, பல்வேறு சுவைகளை {நறுமணம் பரப்புகிற அல்லது சுவையான பொருட்கள் இல்லாத போதே} அறிந்து, வேதனையடைகிறானோ, அந்த ஆவி, ராட்சச ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் செயலால், தேவ இசைக்கலைஞர்கள் (கந்தர்வர்கள்), ஒரு மனிதனின் உடலமைப்புக்குள் தன் இருப்பைக் கலந்து வெகு விரைவில் பைத்தியம் பிடிக்க வைக்கிறதோ அந்த ஆவி கந்தர்வ ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் ஆதிக்கத்தால் மனிதர்கள் பிசாசுகளால் எப்போதும் வேதனையடைகிறார்களோ அந்த ஆவி பைசாச ஆவி என்று அழைக்கப்படுகிறது. ஒரு விபத்தின் காரணமாக மனிதனின் உடலமைப்புக்குள் நுழைந்து, அம்மனிதனை உணர்வை இழக்கச்செய்யும் ஆவி, யக்ஷ ஆவி என்று அழைக்கப்படுகிறது.
தீமைகளின் காரணமாக அறம் பிறழ் மனம் கொண்ட ஒரு மனிதன் தனது உணர்வுகளை இழந்து, குறுகிய காலத்தில் பைத்தியக்காரன் ஆவான். அவனது நோயை சாத்திரங்கள் பரிந்துரைக்கும் முறைகளின் படி குணப்படுத்த வேண்டும். குழப்பம், பயம், அருவருப்பான காட்சிகளைக் காணுதல் ஆகியவற்றாலும் ஒரு மனிதன் பைத்தியமாகிறான். மனதை அமைதிப்படுத்துவதிலேயே அவர்களுக்கான தீர்வு இருக்கிறது. ஆவிகளில் சில விளையாட்டிலும், சில உண்பதிலும், சில காமத்திலும் விருப்பம் கொண்டிருக்கும். இப்படி ஆவிகளில் மூன்று வகுப்புகள் உள்ளன. மூன்று இலக்கத்துடன் சேர்த்து பத்து வயது {110 வயது என்று நினைக்கிறேன்} {70 வயது என்றும் வேறு உரை கண்டிருக்கிறேன்} {ஆங்கிலத்தில் Until men attain the age of three score and ten என்று கங்குலி சொல்கிறார்} ஆகும்வரை மனிதர்கள் இந்தத் தீய ஆவிகளின் ஆதிக்கம் வேதனைப்படுத்தும். பின்னர்ப் புலன்றிவாற்றலுள்ளவர்களைத் தாக்கும் தீய ஆவியாகக் காய்ச்சல் மட்டுமே இருக்கிறது. புலன்களை அடக்கியவர்கள், சுயக்கட்டுப்பாடு உடையவர்கள், சுத்தமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள், தெய்வத்துக்கு அஞ்சுபவர்கள், சோம்பலற்றவர்கள், களங்கம் இல்லாதவர்கள் ஆகியோரை எப்போதுமே இத்தீய ஆவிகள் தவிர்த்து விடுகின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் விதிகளை உருவாக்கும் தீய ஆவிகளைக் குறித்து உனக்கு விவரித்துவிட்டேன். மகேஸ்வரனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உங்களுக்கு அவர்கள் {அந்தத் தீய ஆவிகள்} மூலம் தொந்தரவே ஏற்படாது" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.