Skanda is a son of Siva! | Vana Parva - Section 230a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சுவாகாவை அக்னியுடன் இணைத்த ஸ்கந்தன்; ஸ்கந்தனின் தந்தை சிவன் என்று பிரம்மன் ஸ்கந்தனிடம் சொன்னது; சிவனால் பெறப்பட்ட மிஞ்சிகையும், மிஞ்சிகனும்; ஆவிகளை வழிபட வேண்டியதற்கான தேவைகள்; குஹன் அமர்ந்திருந்த அந்த மலையின் அழகு ...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தன் {அந்த அன்னையருக்கு} இந்தச் சக்திகளை எல்லாம் அளித்த போது, சுவாகா அவன் முன் தோன்றி, "இயற்கையாகவே {உண்மையில்} நீ எனது மகன். நீ எனக்கு அற்புதமான மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றாள்.
ஸ்கந்தன், "எந்த மாதிரியான மகிழ்ச்சியை நீ விரும்புகிறாய்?" என்று கேட்டான்.
சுவாகா {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தக்ஷனின் அன்புக்குரிய மகளான சுவாகா என்ற பெயர் கொண்டவள் ஆவேன்; எனது இளமையில் நான் ஹுதாசனனிடம் (அக்னி தேவன்) காதல் கொண்டேன். ஆனால், என் மகனே, அந்தத் தேவன் {அக்னி தேவன்} எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவருடையே (அவரது மனைவியாக) எப்போதும் வாழ விரும்புகிறேன்" என்றாள்.
ஸ்கந்தன் {சுவாகாவிடம்}, "மங்கையே, இந்த நாளில் இருந்து, அறத்தின் பாதையில் இருந்து வழுவாத நல்லவர்கள், தங்கள் தேவர்கள், மூதாதையர் ஆகியோருக்கு அந்தணர்கள் உதவியுடனும் சுத்திகரிக்கும் மந்திரங்களுடனும் காணிக்கைகள் அளிக்கும்போது, சுவாகா என்ற பெயரை இணைத்துச் சொல்லியே (அக்னி மூலமாக) அக்காணிக்கைகளை அளிப்பார்கள். அற்புதமான மங்கையே, இப்படி நீ எப்போதும் நெருப்பு தேவனான அக்னியுடன் இணைந்து வாழ்வாய்" என்றான் {ஸ்கந்தன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படி ஸ்கந்தனால் மதிப்புடன் சொல்லப்பட்ட சுவாகா மிகவும் திருப்தியடைந்தாள்; தனது கணவனான பாவகனோடு (அக்னி தேவனோடு) சேர்ந்து, அவளும் அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} பதில் மரியாதை செய்தாள்.
பிறகு, அனைத்து உயிர்களுக்கும் தலைவனான பிரம்மன், மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, "நீ சென்று, திரிபுரனை வீழ்த்திய உன் தந்தையான மகாதேவனைச் சந்திப்பாயாக. ருத்திரன் {சிவன்}, (நெருப்பு தேவனான) அக்னியுடனும், உமை சுவாகாவுடனும் ஒன்றிணைந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்காக யாராலும் வெல்லமுடியாத உன்னை உருவாக்கக் கூடினர். உயர் ஆன்ம ருத்திரனின் உயிரணு, உமையின் இனப்பெருக்க உறுப்புக்குள் விடப்பட்டு, இந்த மலையின் மேல் வீசப்பட்டது. அதனால் மிஞ்சிகை, மிஞ்சிகன் ஆகியோர் உண்டாக்கினர். அதில் {உயிரணுவில்} ஒரு பகுதி இரத்தக் கடலுக்குள் {லோஹித சமுத்திரம்} விழுந்தது, மற்றொரு பகுதி சூரியக் கதிருக்குள்ளும், மற்றொன்று பூமியிலும் விழுந்து ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்படி விழுந்த அவை இறைச்சியில் வாழும் கோர வடிவம் கொண்ட உனது தொண்டர்கள் ஆகினர் எனக் கற்றோர் ஞாபகம் கொள்கின்றனர்" என்றான் {பிரம்மன்}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன உயர் ஆன்ம மஹாசேனன் தந்தையிடம் அன்பு கொண்டு, தன் தந்தையான மகேஸ்வரனை வழிபட்டான்."
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள், இந்த ஐந்து வகை ஆவிகளைச் சூரிய காந்தி பூவைக் {Sun flower}, {எருக்கம்பூ என்றும் சொல்லப்படுகிறது} கொண்டு வழிபட வேண்டும். நோய்களைத் தணிக்க அவற்றை {அந்த ஆவிகளை} வழிபட வேண்டும். சிறு குழந்தைகளின் நன்மையில் விருப்பம் கொண்ட மனிதர்கள், ருத்திரனால் பெறப்பட்ட மிஞ்சிகை, மிஞ்சிகன் என்ற இரட்டையரை வழிபட வேண்டும். தாங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், மனித இறைச்சியில் வாழும், மரங்களில் உண்டாகியிருக்கும் அந்தப் பெண் ஆவிகளை வணங்க வேண்டும். இப்படி அனைத்துப் பிசாசங்களும் எண்ணிலடங்கா வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது, ஸ்கந்தனுடைய மணிகள் மற்றும் கொடிகளின் தோற்ற மூலத்தைக் கேள். வைஜெயந்தி என்ற பெயர் கொண்ட இரு மணிகளை ஐராவதன் (இந்திரனின் யானை) கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. சக்ரன் {இந்திரன்} அவற்றைக் கொண்டு வந்து குஹனிடம் கொடுத்தான். அவற்றில் ஒன்றை விசாகன் எடுத்துக் கொண்டான். ஸ்கந்தன் மற்றொன்றை எடுத்துக் கொண்டான். கார்த்திகேயன் {ஸ்கந்தன்} மற்றும் விசாகனின் கொடிகள் சிவப்பு வண்ணத்தால் ஆனவை. அந்தப் பலமிக்கத் தேவனான மஹாசேனன் தேவர்களால் கொடுக்கப்பட்ட பொம்மைகளால் திருப்தியடைந்தான். தேவர்கள் படைகள், பிசாசங்களால் சூழப்பட்டு, அந்தப் பொன்மலையில் அமர்ந்திருந்த அவன் செழிப்பின் ஆடம்பரத்தால் அற்புதமாகக் காணப்பட்டான். அற்புதமான குகைகள் நிறைந்ததும், சூரியக் கதிர்களால் ஒளிர்வதுமான மந்தர மலையைப் போலவே, அற்புதமான காடுகள் கொண்ட அந்த மலையும், அவனது {ஸ்கந்தனின்} துணையால் அற்புதமாகத் தெரிந்தது.
சந்தான வனங்கள், கரவீர வனங்கள், பாரிஜாத வனங்கள், செல்வரத்தை மற்றும் அசோக மரங்கள் அடர்ந்த வனங்கள், கடம்ப மரங்கள் அடர்ந்த சோலைகள், தெய்வீக மான்கூட்டங்கள், தெய்வீகப் பறவைக்கூட்டங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த வெண்மலை {ஸ்வேத மலை} பிரகாசித்துக் கொண்டிருந்தது. இசைக்கருவிகளின் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டிருந்த மேகங்களின் உருமல், கலங்கிய கடலின் முணுமுணுப்பு போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தெய்வீக கந்தர்வர்களும் அப்சரசுகளும் ஆடத் தொடங்கினர். அனைத்து உயிர்களின் மகிழ்ச்சியாலும் அங்கே பெருத்த இன்ப ஒலி எழுந்தது. இந்திரன் உட்பட முழு உலகும் அந்த வெண்மலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. மக்கள் அனைவரும் திருப்தி கொண்ட பார்வைகளுடன் ஸ்கந்தனை நோக்கினர். அப்படிச் செய்வதால் அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.