The march of the celestial army! | Vana Parva - Section 230b | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சிவன் தேரில் பார்வதியுடன் பத்திரவடம் சென்றது; இந்திரன் அவனுக்குப் பின்புறத்தில் சென்றது; கந்தன் வலதுசாரியாகச் சென்றது; இயற்கையில் உள்ள அனைத்தும் சிவனின் பின்னால் சென்றது; கந்தனிடம் சிவன் ஏழாவது படைப்பிரிவைக் காக்கும்படி சொன்னது; கந்தன் அதை ஏற்றது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அக்னி தேவனின் புகழத்தக்க மகன் {ஸ்கந்தன்} தேவர்கள் படைக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த ஹரன் (மகாதேவன்) பார்வதியுடன் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் பத்திரவடம் என்ற இடத்திற்குச் சென்றான். அவனது அற்புதமான தேர் {தேரோட்டியாக இருந்த} காலனால் செலுத்தப்பட்டு ஆயிரம் சிம்மங்களால் இழுக்கப்பட்டது. வெற்றிடத்தைக் கடந்து செல்லும் அவற்றைக் காண வானத்தையே விழுங்கிவிடுபவை போலத் தெரிந்தன. உலகங்களின் அசையும் பிரிவுகளில் உள்ள அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் பயங்கரத்தை {சிங்கங்கள்} உணர்த்தின. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த விலங்குகள் ஆகாயத்தில் விரைந்து கொண்டிருந்தன. அனைத்து விலங்குகளுக்கும் தலைவன் (மகாதேவன்), உமையுடன் தேரில் அமர்ந்து, இந்திரவில்லுடன் (வானவில்) கூடிய மேகத்தில் மின்னலோடு கூடிய சூரியனைப் போலப் பிரகாசித்தான். புகழத்தக்கவனான செல்வங்களின் தலைவன் {குபேரன்}, மனிதர்களின் முதுகில் அமர்ந்தபடியும், அவனது {குபேரனின்} தொண்டர்களான குஹ்யர்கள் அவனது {குபேரனின்} அழகிய புஷ்பக விமானத்திலும் {சிவனைத்} தொடர்ந்து சென்றனர்.
தேவர்கள் படைக்குத் தலைமையானவனும், வரங்களை அருள்பவனுமான மகாதேவனுக்குப் பின்புறத்தில் சக்ரனும் {இந்திரனும்} தனது யானையான ஐராவதத்தில் சென்றான். ஜம்பக யக்ஷன் மற்றும் பிற ராட்சதர்களையும் தொண்டர்களாகக் கொண்டவனும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தவனுமான பெரும் யக்ஷனான அமோகன் அந்தப் படையின் வலது சாரியில் இடம்பெற்றான். வசுக்கள் மற்றும் ருத்திரர்களோடு கூடிய, அற்புதப் போராற்றல் கொண்ட பல தேவர்களும் அப்படையின் வலதுசாரியில் {Right Wing} அணிவகுத்து சென்றனர்.
மரணத்தைத் துணையாகக் கொண்டிருக்கும் கோர உருவம் கொண்ட யமனும் {(தன்னை நூற்றுக்கணக்கான பயங்கர நோய்கள் பின்தொடர) அவனுடன் {சிவனுடன்} அணிவகுத்துச் சென்றான். அவனுக்குப் பின்னால் எடுத்துச் செல்லப்பட்ட, கூர்முனை கொண்ட பயங்கர ஆயுதமான நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவனின் திரிசூலம் விஜயம் என்று அழைக்கப்படுகிறது. புகழத்தக்க நீர்த் தேவனான வருணன், பயங்கரமான பாசத்தோடும் [1], எண்ணிலடங்கா நீர் விலங்குகளுடனும் மெதுவாகத் திரிசூலத்தோடு நடந்து வந்தான். ருத்திரனின் பட்டிசம் [2] கதை, உலக்கை, தண்டம் மற்றும் பிற அற்புதமான ஆயுதங்களால் சூழப்பட்டு விஜயம் என்ற திரிசூலத்தைப் பின்தொடர்ந்து சென்றது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பட்டிசம் ருத்திரனின் பிரகாசமான குடை மற்றும் பெரும் முனிவர்கள் சேவிக்கும் கமண்டலம் ஆகியவற்றால் தொடரப்பட்டது. இவை அனைத்தும் பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்னும் பிறரின் துணையோடு சென்றன. இவர்கள் அனைவருக்கும் பின்னால், தனது வெள்ளைத் தேரில், தேவர்களுக்குத் தனது சக்திகளை வெளிப்படுத்தும் வண்ணம் ருத்திரன் சென்றான்.
[1] ஒரு வகை ஏவுகணை என்கிறார் கங்குலி[2] ஒரு வகை ஆயுதம் என்கிறார் கங்குலி
ஆறுகள், தடாகங்கள், கடல்கள், அப்சரசுகள், முனிவர்கள், தேவர்கள், கந்தரவர்கள், பாம்புகள், விண்மீன்கள், கோள்கள், தேவர்களின் குழந்தைகள் ஆகியோரும் இன்னுப் பல பெண்களும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றனர். அழகான தோற்றம் கொண்ட அந்த மங்கையர் சுற்றிலும் பூக்களைத் தூவியபடியே சென்றனர். பினாகம் என்ற வில்லைத் தாங்கிச் சென்ற தேவனை (மகாதேவனை) வணங்கியபடி மேகங்களும் அணிவகுத்துச் சென்றன. அவற்றில் சில அவனது {சிவனின்} தலைக்கு மேலே வெண்குடையைப் பிடித்துச் சென்றன. அக்னியும் (நெருப்பு தேவனும்), வாயுவும் (காற்று தேவனும்) (அரச சின்னங்களான) வெண்சாமரம் வீசினர். அரசமுனிவர்கள் {ராஜரிஷிகள்} துணையுடன் மகத்தான இந்திரனும் பிற தேவர்களும், காளை சின்னம் கொண்ட தேவனின் {சிவனின்} புகழைப் பாடிக் கொண்டே அவனைத் தொடர்ந்து சென்றனர். கற்றோரால் படைக்கப்பட்ட அத்தனை வித்தைகளும் பார்வதியைத் தொடர்ந்து அவளுக்குப் பின்புறத்தில் தொடர்வது போலக் கௌரி, வித்யா, காந்தாரி, கேசினி, மித்திரை என்று அழைக்கப்பட்ட மங்கை ஆகிய அனைவரும் சாவித்திரியோடு சேர்ந்து அவளுக்குப் {பார்வதிக்குப்} பின்புறத்தில் சென்றார்கள்.
இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்குக் கீழ்ப்படிந்து பலதரப்பட்ட படைப்பிரிவுகளுக்கு உத்தரவுகளைக் கொண்டு சேர்க்கும் ராட்சச ஆவி, கொடியைத் தாங்கிக் கொண்டு படைக்கு முன்னணியில் சென்றான். சடலங்களை எரிக்கும் இடங்களில் எப்போதும் மும்முரமாக இருக்கும் ருத்திரனுக்கு நண்பனும், ராட்சசர்களில் முதன்மையானவனும், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமான பிங்களன் என்ற பெயர் கொண்டவன், ஒரு நேரம் படைக்கு முன்னணியில் சென்றும், அடுத்த நேரம் பின்னுக்கு வந்தும் கணிக்கமுடியாத அசைவுகளுடன் மகிழ்ச்சியாக அணிவகுத்துச் சென்றான்.
அறச்செயல்களைக் காணிக்கையாகக் கொடுத்தே ருத்திர தேவன் மனிதர்களால் வழிபடப்படுகிறான். அவன் சிவன் என்றும் அழைக்கப்படுகிறான். பினாகையைத் தாங்கி எங்கும் நிறைந்திருக்கும் அந்தத் தேவனே மகேஸ்வரன். அவன் பல வடிவங்களில் வழிபடப்படுகிறான்.
தேவர் படையின் தலைவனும், அந்தணர்களின் மரியாதைக்குரியவனுமான கிருத்திகையின் மகனும் {ஸ்கந்தன்}, தேவர் படையால் சூழப்பட்டு அந்தத் தேவாதி தேவனைத் தொடர்ந்து சென்றான். மகாதேவன் மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, "நீ கவனமாகத் தேவர்கள் படையின் ஏழாவது படைப்பிரிவினைக் {ஸ்கந்தத்தைக்} கட்டளையிடுவாயாக {காப்பாயாக}" என்ற கனம் நிறைந்த சொற்களால் சொன்னான்.
ஸ்கந்தன் {சிவனிடம்}, "என் தலைவா! {நான்} மிக நன்றாகக் {அந்தப் படைப்பிரிவைக்} காப்பேன்! நான் ஏழாவது படைப்பிரிவை வழிநடத்துவேன். இப்போது, வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதை விரைவாகச் சொல்லும்" என்றான்.
ருத்திரன் {ஸ்கந்தனிடம்}, "செயற்களத்தில் என்னை நீ எப்போதும் பார்க்கலாம். என்னை நோக்கிப் பார்த்து, எனக்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், நீ பெரும் நன்மையை அடைவாய்" என்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.