Skanda killed Mahisha! | Vana Parva - Section 230c | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; புறமுதுகிட்ட தேவர்களை உற்சாகமூட்டி மீண்டும் போரிடத்தூண்டிய இந்திரன்; தேவர்களின் கை ஓங்குவது; தானவப்படையில் மஹிஷன் முன்னணிக்கு வந்து தேவர்களைத் துன்புறுத்துவது; அசுரர்களின் கை ஓங்குவது; மஹிஷன் ருத்திரனிடமிருந்து தேரைப் பறிப்பது; பெரும் கோபம் கொண்ட ஸ்கந்தன் மஹிஷனைக் கொன்றது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன மகேஸ்வரன், அவனை {ஸ்கந்தனை} அரவணைத்து ஏற்று, பிறகு அவனை விடுவித்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அவன் {சிவன்} ஸ்கந்தனை விடுவித்த பிறகு, பல்வேறு வகையான சகுனங்கள் ஏற்பட்டு தேவர்களின் மன அமைதியைக் கெடுத்தன.
நட்சத்திரங்களுடன் கூடிய வானம் எரிந்து கொண்டிருந்தது. முழு அண்டமும் மொத்த குழப்பத்தில் இருந்தன. பூமி நடுங்கியபடி சடசடத்தது. முழு உலகமும் இருளில் மூழ்கியது. மதிக்கத்தக்க உமையுடன் இருந்த சங்கரன், தேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் இந்தப் பேரழிவைக் கண்டு மனக் கலக்கத்தை அடைந்தார்கள். அவர் இந்தக் குழப்ப நிலையில் இருந்த போது, அங்கே கடுமையும் பலமும் மிக்க ஒரு படை, பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு மேகத்திரள் போலவும், பாறைக்குவியல் போலவும் அவர்கள் முன்னிலையில் வந்தது.
பல்வேறு மொழிகளைப் பேசிய எண்ணிலடங்காதவர்களான அந்தப் பயங்கரமானவர்கள் {அசுரர்கள்}, சங்கரரும், தேவர்களும் நின்ற இடத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் எல்லாப்புறங்களில் இருந்தும் கணைகளையும், பாறைக் குவியல்களையும், கதாயுதங்களையும், சதாக்னிகளையும், பிராசங்களையும், பரிகங்களையும் தேவர்கள் படையின் மீது வீசினர். தேவர்களின் படை, அங்கு ஏற்பட்ட கணை மழையாலும், பயங்கர ஆயுதங்களின் பொழிவாலும் மொத்தமாகக் குழம்பிய நிலையில் இருந்தது. அவர்களுடைய {தேவர்களுடைய} வீரர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களை அறுத்துப் போட்டு, அந்தத் தானவர்கள் பெரும் அழிவை ஏற்படுத்தினர். தேவர்களின் துருப்புகள் எதிரியை நோக்கிப் புறமுதுகிடப் போவது போலவே தெரிந்தது. அசுரர்களால் கொல்லப்பட்ட பல பேர், எரியும் கானகத்தில் விழும் பெரிய மரங்களைப் போல விழுந்தனர்.
அந்தத் தேவலோகவாசிகள் தங்கள் உடலில் இருந்து தலைகள் பிரிக்கப்பட்ட நிலையில் விழுந்தனர். அந்த அஞ்சத்தக்க போரில், தலைமை தாங்க யாருமில்லாமல், அவர்கள் {தேவர்கள்} எதிரிகளால் {அசுரர்களால்} கொல்லப்பட்டார்கள். பின்பு, வலனைக் கொன்றவனான தேவன் புரந்தரன் {இந்திரன்}, அசுரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நிலையற்று இருக்கும் தேவர்களிடம், "வீரர்களே! அஞ்சாதீர்கள்! உங்கள் முயற்சிகள் வெல்லட்டும்! அனைவரும் ஆயுதங்களை எடுத்து ஆண்மையுடன் போராடுங்கள். இதற்கு மேல் நீங்கள் துரதிர்ஷ்டத்தை அடைய மாட்டீர்கள். பயங்கர உருவம் கொண்ட அந்தத் தீயவர்களை வீழ்த்துங்கள்" என்று சொன்னான்.
சக்ரனின் {இந்திரனின்} பேச்சைக் கேட்டுத் திரும்பிய தேவலோக வாசிகள், அவனது தலைமையில் திரண்டு, தானவர்களை நோக்கி விரைந்தனர். பிறகு முப்பத்து மூன்று கோடி தேவர்களும், பலமிக்க மருதர்களும், சத்யஸ்களும், வசுக்களும் பணிக்கு {போருக்குத்} திரும்பினர். அவர்கள் எய்த அம்புகள் தைத்தியர்கள், அவர்களது குதிரைகள் மற்றும் யானைகளின் உடலில் இருந்து பெரும்பகுதி குருதியை வெளியேற்றின. அவர்கள் அடித்த கணைகள் அனைத்தும், மலையின் பக்கவாட்டில் இருந்து விழும் பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் உடலைக் கடந்து தரையில் விழுந்தன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட தைத்தியர்கள் {அசுரர்கள்} சிதறிய மேகங்களைப் போலப் பக்கவாட்டில் விழுந்தனர்.
போர்க்களத்தில் தேவர்கள் தொடுத்த தாக்குதலாலும், பல ஆயுதங்களின் மழையாலும் தானவப்படை {அசுரப்படை} பெரும் துன்பத்துக்குள்ளாகி புறமுதுகிட்டது. பிறகு அனைத்து தேவர்களும் மகிழ்ச்சியாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்குவதற்குத் தயாராக இருந்தனர். தேவ இசைக்கருவிகள் பல்வேறு ஒலிகளில் இசைக்கப்பட்டன.. இரு தரப்புக்கும் அச்சத்தை ஏற்படுத்திய அந்த மோதல் இப்படியே நடந்தது. போர்க்களம் முழுவதும் இரத்தத்தாலும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் உடல்களாலும் நிறைந்திருந்தன. ஆனால் திடீரெனத் தேவர்களின் நிலை மீண்டும் மோசமானது. பயங்கரமான தானவர்கள் மீண்டும் தேவர்கள் படைக்குப் பெரும் அழிவைச் செய்தனர். அசுரர்களின் பேரிகைகளும் தூரிகைகளும் இசைத்தன. தானவத் தலைவர்கள் பயங்கரமாகப் போர் கர்ஜனை புரிந்தனர்.
பிறகு கைகளில் பெரும் பாறையைத் துக்கிக் கொண்டு ஒரு பலமிக்கத் தானவன், அந்தப் பயங்கரத் தைத்திய படையில் இருந்து வெளியே வந்தான். கருமேகங்களுக்குள்ளிருந்து வெளியே வரும் சூரியனைப் போல அவன் இருந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்கள் அவன் அந்தப் பாறையைத் தூக்கி வீசப்போவதைக் கண்டு குழப்பத்தால் ஓடினர். ஆனால் அந்த மஹிஷன் {Mahisha} அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்கள் மீது அந்த மலையை வீசினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அப்படி விழுந்த அந்தப் பெரும் பாறையால் தேவர்கள் படையில் பத்தாயிரம் {10000} போர்வீரர்கள் தரையில் நசுங்கி, தங்கள் கடைசி மூச்சை விட்டனர். மஹிஷனின் இச்செயல், தேவர்களின் இதயங்களில் பயங்கரத்தை உண்டாக்கியது. அவன் {மஹிஷன்} தனது தானவத் தொண்டர்களுடன் சேர்ந்து, மான்கூட்டத்தின் மேல் விழும் சிங்கத்தைப் போல அவர்கள் {தேவர்கள்} மீது விழுந்தான்.
முன்னேறி வரும் மஹிஷனைக் கண்ட இந்திரனும் பிற தேவர்களும் தங்கள் ஆயுதங்களையும், நிறங்களையும் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர். இதனால் மிகவும் கோபமடைந்த மஹிஷன், ருத்திரனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறினான். அதன் {தேரின்} அருகே சென்ற அவன் {மஹிஷன்} அதன் கம்பத்தைத் {ஏர்க்காலை} தனது கைகளால் பற்றினான். கோபத்துடன் இருந்த மஹிஷன் ருத்திரனின் தேரைப் பிடித்த போது, முழு உலகமும் முனகியது. பெரும் முனிவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். கருமேகங்களைப் போல இருந்த பெரும் உருவம் படைத்த தைத்தியர்கள், வெற்றி அவர்களுக்கு உறுதி என நினைத்து, மகிழ்ச்சியால் மூர்க்கத்தனம் கொண்டனர். அந்தப் புகழத்தக்க தேவன் (ருத்திரன்) அந்த அவல நிலையில் இருந்தாலும், போர்க்களத்தில் அந்த மஹிஷனைக் கொல்ல நினைக்கவில்லை; அந்தத் தீய மனம் கொண்ட அசுரனுக்கு {மஹிஷனுக்கு} மரண அடியை ஸ்கந்தன் கொடுப்பான் என்பதை நினைவுகூர்ந்தான்.
கடுமை நிறைந்த மஹிஷன், தான் அடைந்த பரிசு (ருத்திரனின் தேர்) குறித்துச் சிந்தித்துத் திருப்தியடைந்து, தேவர்களுக்குப் பெரும் அச்சத்தை ஊட்டி, தைத்தியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து பெரும் போர் கர்ஜனை செய்தான். தேவர்கள் பயத்துடன் இக்கட்டான நிலையில் இருந்த போது, கோபத்தால் எரிந்த பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, பிரம்மாண்டமான சூரியனைப் போல அவர்களை {தேவர்களை} மீட்க வந்தான். அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, ஒளிரும் செவ்வாடை பூண்டு, சிவப்பு மலர் மாலை தரித்திருந்தான். தங்கக் கவசம் பூண்டு, சிவப்பு நிறை குதிரைகளால் இழுக்கப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த தங்க நிறத் தேரில் சென்றான். அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட தைத்திய படை {அசுரப்படை} திடீரெனப் போர்க்களத்தில் சோர்வடைந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, மஹிஷனை அழிப்பதற்காகப் பிரகாசமான சக்தியை வெளியிட்டான். அந்த ஏவுகணை மஹிஷனின் தலையை அறுத்தது. அவன் {மஹிஷன்} தரையில் விழுந்து இறந்து போனான். மலையைப் போன்ற அவனது தலை, தரையில் விழுந்து, பதினாறு யோஜனை நீளமுள்ள வட குருக்களின் {உத்தரகுரு} நாட்டு நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் அந்த நுழைவாயில் வழியாக எளிதாகச் செல்கின்றனர்.
ஸ்கந்தன் மீண்டும் மீண்டும் தனது சக்தியை போர்க்களத்தில் வீசுவதையும், அது ஆயிரக்கணக்கான எதிரிப் படை வீரர்களைக் கொன்று, மீண்டும் அவனது கைகளுக்கே திரும்புவதையும் தேவர்களும் தானவர்களும் கண்டனர். மஹாசேனனின் {ஸ்கந்தனின்} கணைகளால் தாக்கப்பட்ட பயங்கரத் தானவர்கள் பெரும் எண்ணிக்கையில் கீழே விழுந்தபடியே இருந்தனர். பீதி அவர்களை ஆட்கொண்டது, ஸ்கந்தனின் தொண்டர்கள் அவர்களைக் கொல்லத் தொடங்கி, அவர்களை ஆயிரக்கணக்கில் தின்று, அவர்கள் இரத்தத்தைக் குடித்தனர். அவர்கள் குறுகிய காலத்திலேயே, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ, காட்டை அழிக்கும் நெருப்பைப் போலவோ, மேகங்களை விரட்டும் காற்றைப் போலவோ தானவர்களை அழித்து மகிழ்ந்தனர். இப்படியே புகழ்பெற்ற ஸ்கந்தன் தனது எதிரிகளை அழித்தான். அவனை {ஸ்கந்தனை} வாழ்த்த தேவர்கள் வந்தனர். தனது பங்குக்கு அவன் {ஸ்கந்தன்} மகேஸ்வரனுக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தினான். அந்தக் கிருத்திகையின் மகனின் {ஸ்கந்தனின்} பிரகாசம் சூரியனைப் போன்ற பிரம்மாண்டத்துடன் இருந்தது.
அந்த எதிரிகள், ஸ்கந்தனால் முழுமையாக வீழ்த்தப்பட்டு, மகேஸ்வரன் போர்க்களத்தை விட்டு அகன்ற போது, புரந்தரன் மஹாசேனனைத் {ஸ்கந்தனைத்} தழுவி கொண்டு, "பிரம்மனின் உதவியால் வெல்லப்பட முடியாதவனாக இருந்த இந்த மஹிஷனை நீ கொன்றுவிட்டாய். ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, தேவர்கள் அவனுக்கு {மஹிஷனுக்கு} புல்லைப் போல இருந்தனர். ஓ! பலமிக்க உறுப்புகள் {அங்கங்கள்} கொண்ட வீரா {ஸ்கந்தா}, தேவர்களுக்கு முள்ளாய் இருந்தவனை அகற்றிவிட்டாய். எங்களுடன் பகைமை பாராட்டி, முன்பு எங்களைத் துன்புறுத்திய, மஹிஷனின் வீரத்துக்கு இணையாக இருந்த, நூற்றுக்கணக்கான தானவர்களைப் போர்க்களத்தில் கொன்றாய். உனது தொண்டர்களும் நூற்றுக்கணக்கானவர்களை விழுங்கினர். ஓ! பலமிக்கவனே, உமையின் தலைவனைப் {சிவனைப்} போலவே நீயும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறாய். உனது முதல் சாதனையாக இந்த வெற்றி கொண்டாடப் படட்டும். மூவுலகங்களிலும் உனது புகழ் மங்காது. ஓ! வலுத்த கரங்கள் கொண்ட தேவனே {ஸ்கந்தா}, அனைத்து தேவர்களும் உனக்குத் தங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிப்பார்கள்.
இப்படி மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பேசிய சச்சியின் கணவன் {இந்திரன்}, முக்கண் தேவனின் (சிவனின்) அனுமதியோடு, தேவர்கள் புடை சூழ தனது இருப்பிடத்திற்குச் சென்றான். ருத்திரன் பத்திரவடத்திற்குத் திரும்பினான். தேவர்களும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பினர். ருத்திரன், தேவர்களிடம், "நீங்கள் எனக்கு அளித்தது போலவே, ஸ்கந்தனுக்கும் உங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிக்க வேண்டும்" என்றான். அக்னி தேவனின் அந்த மகன் {ஸ்கந்தன்}, ஒரே நாளில் தானவர்களைக் கொன்று, மூவுலகங்களையும் வென்று பெரும் முனிவர்களால் வழிபடப்பட்டான். ஸ்கந்தன் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையை உரிய கவனத்துடன் படிக்கும் அந்தணன், இவ்வுலகில் பெரும் செழிப்பை அடைந்து, அதன் பிறகு {அடுத்த உலகில்} ஸ்கந்தனின் துணையை அடைகிறான்." என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.