Skanda Eulogy! | Vana Parva - Section 230d | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஸ்கந்தனின் பல்வேறு பெயர்களைக் குறித்து யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது; மார்க்கண்டேயர் ஸ்கந்தனின் வேறு பெயர்களுடன் சேர்த்து கந்தனை வழிபடும் துதியையும் சொன்னது...
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புகழத்தக்க நல்ல அந்தணரே, மூவுலகங்களிலும் பல்வேறு பெயர்களால் அந்த உயர் ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} கொண்டாடப் படுகிறான். நான் அந்தப் பெயர்களை அறிய விரும்புகிறேன்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த முனிவர்கள் கூட்டத்தில் அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} இப்படிப் பேசியதும், அந்த வணங்கத்தக்க உயர்ந்த தவத்தகுதி படைத்த மார்க்கண்டேயர், "ஆக்னேயன் (அக்னியின் மகன்), ஸ்கந்தன் (கைவிடப்பட்டவன்), தீப்தகீர்த்தி (சுடர்விட்டெரிபவன்), ஆனாமயன் (எப்போதும் ஆரோக்கியமாக இருப்பவன்), மயூரகேது (மயில் கொடி கொண்டவன்), தர்மாத்மன் (அறம்சார்ந்த ஆன்மா கொண்டவன்), பூதேசன் (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்), மஹிஷார்த்தனன் (மஹினைக் கொன்றவன்), காமஜித் (ஆசைகளை அடக்குபவன்), காமதன் (விருப்பங்களை நிறைவேற்றுபவன்), காந்தன் (அழகன்), சத்தியவாகு (உண்மை பேசுபவன்), புவனேஸ்வரன் (அண்டத்தின் தலைவன்), சிசு (குழந்தை), சீக்கிரன் (விரைவானவன்), சுச்சி (சுத்தமானவன்), சண்டன் (கடுமையானவன்), தீப்தவர்ணன் (பிரகாசமான நிறம் கொண்டவன்), சுபானன் (அழகிய முகம் கொண்டவன்), அமோகன் (கலங்கடிக்கப்பட முடியாதவன்), அனகன் (பாவமற்றவன்), ரௌத்ரன் (பயங்கரமானவன்), பிரியன் (விருப்பமானவன்), சந்திரானனன் (நிலவைப் போன்ற முகம் கொண்டவன்), தீப்தசஷ்டி (சுடர்விடும் ஈட்டியைத் {வேல்-ஐ) தாங்கியவன்), பரசாந்தாத்மன் (அமைதியான ஆன்மா கொண்டவன்), பதரகிரித் (நன்மை செய்வபவன்), குக்குடமோஹனன் (தீயவர்களுக்கும் அறையாக {புகலிடமாக} இருப்பவன்) (The chamber of even the wicked), ஷஷ்டிபிரியன் (ஷஷ்டிக்குப் பிடித்தமானவன்), பவித்ரன் (புனிதமானவன்), மாத்ருவத்ஸலன் (தாய்க்கு மரியாதையளிப்பவன்), கன்யாபர்திரன் (கன்னிகைகளைக் காப்பவன்), விபக்தன் (அண்டத்தைச் சிதறடிப்பவன்), ஸ்வாஹேயன் (சுவாகையின் புதல்வன்), ரேவதீசுதன் (ரேவதியின் புதல்வன்), பிரபு (தலைவன்), நேதன் (தலைவன்), விசாகன் (விசாகனால் வளர்க்கப்பட்டவன்), நைகமேயன் (வேதத்தில் இருந்து உதித்தவன்), சுதுஸ்சரன் (அமைதிப்படுத்த முடியாத கடுமையானவன்), சுவிரதன் (அற்புத நோன்புகள் கொண்டவன்), லலிதன் (அழகானவன்), பாலகக் கிரீடநகப்பிரியன் (பொம்மைகளை விரும்புபவன்), கசாரின் (வானத்தில் உலவுபவன்), பிரம்மச்சாரி (கற்புடையவன்), சூரன் (வீரம் கொண்டவன்), சரவணோத்பவன் (புதர்க்காட்டில் பிறந்தவன்), விஸ்வாமித்ரபிரியன் (விஸ்வாமித்திரருக்குப் பிடித்தமானவன்), தேவசேனாப்பிரியன் (தேவ சேனைக்குப் பிடித்தமானவன்), வாசுதேவப்பிரியன் (வாசுதேவனுக்குப் பிடித்தமானவன்), பிரியகிருத் (ஏற்புடையவற்றைச் செய்பவன்) என்பவையே கார்த்திகேயனின் {ஸ்கந்தனின்) தெய்வீகப் பெயர்களாகும். இதைத் திரும்பச் சொல்பவர்கள் சந்தேகமற புகழையும், செல்வத்தையும், முக்தியையும் அடைவார்கள்.
கந்தனின் பெயர்களை அடைப்புக்குறிகள் இல்லாமல் படிக்க விரும்புகிறவர்களுக்கு : ஆக்னேயன், ஸ்கந்தன், தீப்தகீர்த்தி, ஆனாமயன், மயூரகேது, தர்மாத்மன், பூதேசன், மஹிஷார்த்தனன், காமஜித், காமதன், காந்தன், சத்தியவாகு, புவனேஸ்வரன், சிசு, சீக்கிரன், சுச்சி, சண்டன், தீப்தவர்ணன், சுபானன், அமோகன், அனகன், ரௌத்ரன், பிரியன், சந்திரானனன், தீப்தசஷ்டி, பிரசாந்தாத்மன், பதரகிரித், குக்குடமோஹனன், ஷஷ்டிபிரியன், பவித்ரன், மாத்ருவத்ஸலன், கன்யாபர்திரன், விபக்தன், ஸ்வாஹேயன், ரேவதீசுதன், பிரபு, நேதன், விசாகன், நைகமேயன், சுதுஸ்சரன், சுவிரதன், லலிதன், பாலககிரீடநகப்பிரியன், கசாரின், பிரம்மச்சாரி, சூரன், சரவணோத்பவன், விஸ்வாமித்ரபிரியன், தேவசேனாப்பிரியன், வாசுதேவப்பிரியன், பிரியகிருத் {மொத்தம் 51 பெயர்கள்}
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு குலத்தின் வீரமிக்கக் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும் அந்த நிகரற்ற, பலமிக்க, ஆறுமுகம் கொண்ட, வீரமிக்கக் குஹனிடம், அவனது வேறு பெயர்களைக் கணக்கிட்டுச் சொல்லி, முறையான பக்தியோடு நான் இப்போது வேண்ட {வணங்கப்} போகிறேன். நீ அதைக் கேள் : பிரம்மனால் படைக்கப்பட்டு, பிரம்மனுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து பிரம்மம் குறித்த புதிர்களை அறிந்தவன் நீ. பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையான நீ பிரம்மசாயன் என்று அழைக்கப்படுகிறாய். பிரம்மத்தை விரும்புபவன் நீ, அந்தணர்களைப் போன்ற தவமுடையவன் நீ, பிரம்மத்தைக் குறித்த பெரும் புதிரை அறிந்தவன் நீ, பிராமணர்களுக்குத் தலைவன் நீயே. சுவாகா நீயே, சுவதையும் நீயே, புனிதமானவற்றிலும் புனிதமானவன் நீயே, நீ மந்திரங்களால் எழுப்பப்படுகிறாய். நீ ஆறு சுடர் கொண்ட நெருப்பாகக் கொண்டாடப்படுகிறாய்.
வருடம் நீயே, ஆறு காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பாதி (சந்திர) மாதங்கள் {பக்ஷங்கள்} {பிறைநாட்கள்} நீயே, பகல் மற்றும் திசைகள் நீயே. தாமரைக் கண் கொண்டவன் நீயே. அல்லி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே. நீ ஆயிரம் முகங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்டிருகிகறாய். அண்டத்தின் ஆட்சியாளன் நீயே, பெரிய காணிக்கை நீயே, தேவர்களையும் அசுரர்களையும் அசைய வைக்கும் ஆவி நீயே. படைகளின் பெரும் தலைவன் நீயே. பிரசண்டன் {சீற்றம் கொண்டவன்} நீயே, தலைவன் நீயே, பெரும் ஆசானும், எதிர்களை வீழ்த்துபவனும் நீயே. (பல உருவங்கள் கொண்ட) சஹஸ்ரபு, சஹஸ்ரதுஷ்டி (ஆயிரம் மடங்கு மனநிறைவு கொண்டவன்), சகஸ்ரபுகன் (அனைத்தையும் விழுங்குபவன்), சகஸ்ரபாதன் (ஆயிரம் கால்கள் கொண்டவன்) நீயே, பூமியும் நீயே. எண்ணற்ற உருவங்களையும், ஆயிரம் தலைகளையும், பெரும் பலத்தையும் நீ கொண்டிருக்கிறாய். உனது விருப்பத்தின் பேரிலேயே நீ கங்கை, சுவாகா, மஹி அல்லது கிருத்திகைகளுக்கு மகனாகத்தோன்றினாய்.
ஓ! ஆறுமுகத் தேவா {ஸ்கந்தா}, சேவலுடன் விளையாடிக் கொண்டு, பல்வேறு உருவங்களை உனது விருப்பத்திற்கு ஏற்ப ஏற்பவன் நீ. நீயே எல்லாக் காலங்களுக்கும் தக்ஷன், சோமன் {சந்திரன்}, மருதன், தர்மன், வாயு, மலைகளின் இளவரசன், இந்திரன் ஆவாய். பலமிக்கவன், நித்தியமானவற்றில் அதி நித்தியமானவன், தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன் நீ. உண்மையைத் {சத்தியத்தைத்} தழைக்க வைப்பது, திதியின் சந்ததியை (அசுரர்களை) அழிப்பது ஆகியவற்றைச் செய்பவன் நீயே. தேவர்களின் எதிரிகளை வீழ்த்துபவன் நீயே. நீயே அறத்தின் வடிவம். பெரியவனாகவும், நுட்பமானவனாகவும் நீயே இருக்கிறாய். அறச் செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும், பிரம்மத்தின் புதிர்களையும் அறிந்தவன் நீயே. ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அண்டத்தின் உயர் ஆன்மத் தலைவனே, இந்த முழுப் படைப்பும் உனது சக்தியால் நிரப்பப்பட்டுள்ளது. எனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு நான் உன்னை வழிபட்டேன். பனிரெண்டு கண்களும், பல கரங்களும் கொண்ட உன்னை நான் வணங்குகிறேன். மீதமுள்ள உனது குணங்கள் என் புரிதல் சக்திக்கு மீறியவையாக இருக்கின்றன {இதற்கு மேற்பட்ட உனது குணங்களை நான் அறியவில்லை}.
ஸ்கந்தனின் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையைக் கவனத்துடன் படிக்கும் அந்தணன், அல்லது அந்தணர்களுக்கு உரைப்பவன், அல்லது மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} சொல்லப்படும்போது கேட்பவன் ஆகியோர் செல்வம், நீண்ட வாழ்நாள், புகழ், குழந்தைகள், வெற்றி, செழிப்பு, மனநிறைவு, ஸ்கந்தனின் துணை ஆகியவற்றைப் பெறுவர்" என்றார் {மார்க்கண்டேயர்.}.
********* மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம் முற்றிற்று *********
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.