The devotion of Draupadi! | Vana Parva - Section 231 | Mahabharata In Tamil
(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம்)
கணவனை வசப்படுத்தும் உத்தியை திரௌபதியிடம் சத்தியபாமா கேட்பது; அதற்கு பதிலுரைக்கும் திரௌபதி கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களின் அறத்தைச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களும், பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, திரௌபதியும், சத்தியபாமாவும் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். வசதியாக அமர்ந்த பிறகு, அந்த இரு மங்கையரும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்பமாகச் சிரித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, எப்போதும் ஒருவருக்கொருவர் இனிமையாகப் பேசும் அந்த இரு மங்கையரும், சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டபடியால், குருக்கள், யதுக்கள் சம்பந்தமான கதைகளில் இருந்து இனிமையான கதைகளைப் பேசத் தொடங்கினர். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான மனைவியும், சதராஜித்தின் மகளும், மெல்லிடையாளுமான சத்தியபாமா, தனிமையில் திரௌபதியிடம், "ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, பலமும் அழகும் கொண்டு, லோகபாலர்களைப் போல இருக்கும் வீரர்களான பாண்டுவின் மகன்களை, நீ எந்த நடையைக் கொண்டு ஆள்கிறாய்? அழகானவளே {திரௌபதி}, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குக் கீழ்ப்படிந்து, உன்னிடம் எப்போதும் கோபம் கொள்ளாமல் இருப்பது எவ்வாறு? ஓ! அழகான அம்சங்கள் கொண்டவளே {திரௌபதி}, சந்தேகமற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உனக்கு எப்போதும் அடங்கியே நடக்கிறார்கள். மேலும், நீ சொல்வதைச் செய்ய எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, இதற்கான காரணத்தை எனக்குச் சொல். இது நடப்பது நோன்புகள் பயில்வதாலா? தவத்தாலா? மந்திர ஆற்றலாலா? (பருவத்தில்) குளிக்கும்போது மருந்து கொடுக்கப்படுவதாலா? அறிவியல் திறமையாலா? {வித்தையின் சக்தியாலா?}, இளமையான தோற்றத்தின் ஆதிக்கத்தாலா? குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிப்பதாலா? ஹோமத்தாலா? கண் மை {அஞ்சனம்} மற்றும் பிற மருந்துகள் பூசுவதாலா? ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, எந்த அருளப்பட்ட மங்களமான பொருளால், ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கிருஷ்ணர் எனக்கு எப்போது கீழ்ப்படிந்து நடப்பார் என்பதை இப்போது எனக்குச் சொல்" என்று கேட்டாள் {சத்தியபாமா}.
கொண்டாடப்படும் அந்தச் சத்தியபாமா இப்படிச் சொல்லி முடித்ததும், கற்புடையவளான துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} அவளுக்குப் பதிலளித்தாள்.
அவள் {திரௌபதி}, "ஓ! சத்தியபாமா, தீ மங்கையரின் நடைகளைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மங்கையே {சத்தியபாமா}, தீய பெண்கள் தொடர்ந்து செய்து வரும் காரியங்களுக்கு நான் எப்படி உனக்குப் பதில் கூற முடியும்? புத்திசாலியும், கிருஷ்ணனுக்குப் பிடித்த மனைவியுமான நீ என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதோ, என்னைச் சந்தேகிப்பதோ உனக்குத் தகாது. தனது மனைவி மந்திரங்களுக்கும் மருந்துகளுக்கும் அடிமையானவள் என்பதை ஒரு கணவன் அறியும்போது, அவளைத் தனது படுக்கை அறையில் பதுங்கியிருக்கும் பாம்பாகக் கண்டு, அந்த நேரத்தில் இருந்து அஞ்சத் தொடங்குவான். அச்சத்தால் வாடும் ஒரு மனிதன் மனஅமைதியுடன் இருக்க முடியுமா? மனஅமைதியில்லாத மனிதன் மகிழ்ச்சியை அடைவது எவ்வாறு? ஒரு கணவன் தன் மனைவியின் மந்திரங்கள் மூலம் ஒருபோதும் அவளுக்குக் கீழ்ப்படிய மாட்டான்.
அவள் {திரௌபதி}, "ஓ! சத்தியபாமா, தீ மங்கையரின் நடைகளைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மங்கையே {சத்தியபாமா}, தீய பெண்கள் தொடர்ந்து செய்து வரும் காரியங்களுக்கு நான் எப்படி உனக்குப் பதில் கூற முடியும்? புத்திசாலியும், கிருஷ்ணனுக்குப் பிடித்த மனைவியுமான நீ என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதோ, என்னைச் சந்தேகிப்பதோ உனக்குத் தகாது. தனது மனைவி மந்திரங்களுக்கும் மருந்துகளுக்கும் அடிமையானவள் என்பதை ஒரு கணவன் அறியும்போது, அவளைத் தனது படுக்கை அறையில் பதுங்கியிருக்கும் பாம்பாகக் கண்டு, அந்த நேரத்தில் இருந்து அஞ்சத் தொடங்குவான். அச்சத்தால் வாடும் ஒரு மனிதன் மனஅமைதியுடன் இருக்க முடியுமா? மனஅமைதியில்லாத மனிதன் மகிழ்ச்சியை அடைவது எவ்வாறு? ஒரு கணவன் தன் மனைவியின் மந்திரங்கள் மூலம் ஒருபோதும் அவளுக்குக் கீழ்ப்படிய மாட்டான்.
வலிநிறைந்த நோய்களை எதிரிகள் அனுப்புகிறார்கள் என்று நாம் கேள்வி படுகிறோம். உண்மையில் பிறரைக் கொல்ல விரும்புபவர்கள், வழக்கமான பரிசுகளின் வடிவில் நஞ்சை அனுப்புகின்றனர். அதை வாங்கும் மனிதன் அதிலிருக்கும் தூள்களை நாவாலோ, தோலாலோ தொட்டு, விரைவாக உயிரை இழக்கின்றனர். மனிதர்களின், விரைவீக்கம், தொழுநோய், மூப்பு, ஆண்மையற்ற தன்மை, அறியாமை, குருட்டுத்தனம், செவிட்டுத்தனம் ஆகியவற்றுக்குச் சில நேரங்களில் பெண்கள் காரணமாக இருக்கின்றனர். எப்போதும் பாவத்தின் பாதியில் நடக்கும் இந்தத் தீய பெண்கள், சில நேரங்களில் தங்கள் கணவர்களுக்குக் காயமும் {தீங்கும்} ஏற்படுத்துகின்றனர். ஆனால், ஒரு மனைவியானவள், சிறு காயத்தைக் கூடத் தனது தலைவனுக்கு ஏற்படுத்தக் கூடாது.
ஓ! சிறப்புமிக்க மங்கையே {சத்தியபாமா}, உயர் ஆன்மா கொண்டவர்களான {மகாத்மாக்களான} பாண்டுவின் மகன்களிடம் நான் எந்த மாதிரியான நடத்தையை மேற்கொள்கிறேன் என்று இப்போது கேள். கர்வத்தைப் புறந்தள்ளி, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நான் எப்போதும் பாண்டுவின் மகன்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறேன். பொறாமையைத் தடுத்து, நான் செய்யும் சேவைகளால் தாழ்ந்த உணர்வை அடையாமல், இதயத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் எனது கணவர்களுக்காக நான் காத்திருக்கிறேன். இதய உணர்வுகளைப் பிரதிபலிக்கும்படி பார்க்கவோ, அமரவோ அல்லது முறைகேடாக நடக்கவோ, தீமையும், பொய்மையும் பேசவோ எப்போதும் அஞ்சி, சூரியனையும் நெருப்பையும் போன்று பிரகாசிக்கும் பலமிக்க வீரர்களும், சந்திரனைப் போன்ற அழகானவர்களும், கடும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டவர்களும், பார்வையாலேயே எதிரிகளைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவர்களுமான பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குச் {பாண்டவர்களுக்குச்} சேவை செய்து வருகிறேன். {என்றாள் திரௌபதி}
தேவனோ, மனிதனோ, கந்தர்வனோ, இளைஞனோ, நன்கு அலங்கரிக்கப்பட்டவனோ, செல்வந்தனோ, அழகுள்ளவனோ, எப்படிப்பட்டவனாக இருப்பினும் {அந்நியனை} எனது இதயம் விரும்பாது. எனது கணவன் நீராடாமல், உணவருந்தாமல், உறங்காமல் இருக்கும் வரை நானும் நீராடாமல், உண்ணாமல், உறங்காமல் இருக்கிறேன். உண்மையில், எங்கள் பணியாட்கள் நீராடி, உண்டு, உறங்கும் வரை நான் எதையும் மேற்கொள்வதில்லை. களத்திலிருந்தோ, வனத்திலிருந்தோ, நகரத்திலிருந்தோ கணவன் திரும்பி வரும்போது, நான் விரைவாக எழுந்து அவரை வணங்கி நீரும் இருக்கையும் கொடுக்கிறேன். வீட்டையும், வீட்டுப் பொருட்களையும், உண்ணப் போகும் உணவையும் நான் எப்போதும் நன்கு வரிசைப்படுத்திச் சுத்தமாக வைத்திருப்பேன். கவனமாக அரிசியை வைத்திருந்து, சரியான நேரத்தில் உணவைப் படைப்பேன்.
கோபம் நிறைந்த அல்லது எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய பேச்சை நான் எப்போதும் பேசுவதில்லை. தீய பெண்களின் நடத்தையை நான் எப்போதும் மேற்கொள்வதில்லை. சோம்பலைத் தூரமாகத் தள்ளி வைத்து, எப்போதும் ஏற்புடையதையே நான் செய்கிறேன். வேடிக்கையின் போது தவிர நான் மற்ற நேரங்களில் சிரிப்பதில்லை. வீட்டு வாயிலில் நான் அதிக நேரம் நிற்பதில்லை. இயற்கையின் அழைப்புகளுக்குப் பதில் சொல்லும் {காலைக்கடன்கள் செலுத்தும்} இடங்களிலோ, வீட்டோடு இணைந்திருக்கும் இன்பத்தோட்டங்களிலோ நான் நீண்ட நேரம் இருப்பதில்லை. சத்தம் போட்டு சிரிப்பதையோ, அதிகமாக ஆர்வம் கொள்வதையோ, குற்றம் நேர வழிவகுக்கும் அனைத்தையும் நான் எப்போதும் தவிர்க்கிறேன். உண்மையில், ஓ! சத்தியபாமா, நான் எப்போதும் எனது தலைவர்களுக்காக {கணவர்களுக்காகக்} காத்திருக்கிறேன். எனது தலைவர்களிடம் இருந்து பிரிவு என்பது எனக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல.
எந்த உறவினருக்காகவாவது எனது கணவர் வீட்டை விட்டுச் செல்லும்போது, நான் மலர்களையும், அனைத்து வகை நறுமணத் தைலங்களையும் துறந்து தவம் செய்ய ஆரம்பிக்கிறேன்.எனது கணவர் குடிக்காததை, உண்ணாததை, மகிழாததை நானும் எப்போதும் துறக்கிறேன். ஓ! அழகான மங்கையே {சத்தியபாமா}, ஆபரணங்கள் பூண்டு, எனக்குச் சொல்லப்பட்டுள்ள உபதேசத்தின் படி என்னை அடக்கிக் கொண்டு, எப்போதும் எனது தலைவரின் நன்மையையே அர்ப்பணிப்புடன் நாடுகிறேன். உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிச்சையிடுதல், தேவர்களின் வழிபாடுகளில் செய்யப்படும் காணிக்கை, இறந்தவர்களுக்கான காணிக்கை, மங்களகரமான நாட்களில் உணவைச் சமைத்து மூதாதையருக்கும், மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பது, எங்களது மரியாதைக்குரியவர்களுக்குச் சேவை, எனது கடமைகளென நான் கருதும் அனைத்தையும் எனது மாமியார் {குந்தி} எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளபடி, இரவு பகல் பாராது, எந்த வகையான சோம்பலும் கொள்ளாது, நிறைவேற்றி வருகிறேன். பணிவு மற்றும் ஏற்கப்பட்ட விதிகளை முழு இதயத்தோடு ஏற்றுக் கொண்ட நான், அறத்தைக் கடைப்பிடித்து, பணிவும், உண்மையும் நிரம்பி இருக்கும் எனது தலைவர்களை, ஒரு சிறு அசைவில் கோபம் கொள்ளும் நஞ்சுநிரம்பிய பாம்புகளைப் போலக் கருதி, எப்போதும் அவர்களுக்குச் சேவை செய்து வருகிறேன். கணவனை மதிப்பதை அடிப்படையாகக் கொண்டதே பெண்களின் நிலைத்த அறமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
கணவனே மனைவியின் தேவன். அவனே அவளது புகலிடம். உண்மையில், அவனைத் தவிர வேறு என்ற புகலிடமும் அவளுக்குக் கிடையாது. அப்படியிருக்கும்போது, ஒரு மனைவியால் எப்படித் தனது தலைவனுக்குத் தீங்கிழைக்க முடியும்? உறங்குவதிலோ, உண்பதிலோ, ஒரு மனிதரைப் புகழ்வதிலோ, நான் எப்போதும் எனது தலைவனின் விருப்பங்களுக்கு எதிராக நடக்க மாட்டேன். எப்போதும் எனது கணவர்களின் வழிகாட்டுதலின்படி, நான் எனது மாமியாரை எப்போதும் நான் இகழ்ந்து பேச மாட்டேன். ஓ அருளப்பட்ட மங்கையே {சத்தியபாமா}, என் விடாமுயற்சி, என் சுறுசுறுப்பு, மூத்தோர்களுக்குப் பணிவுடன் நான் செய்யும் பணி ஆகியவற்றாலேயே எனது கணவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள்.
வீரர்களைப் பெற்றவளும், உண்மை பேசுபவளும், வணங்கத்தக்கவளுமான குந்திக்கு, தினமும் உணவு, பானம் மற்றும் உடைகள் கொடுத்து நானே தனிப்பட்ட முறையில் பணி செய்கிறேன். உணவு மற்றும் உடை விஷயத்தில் நான் எனது விருப்பங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. பொறுமையில் பூமிக்கு சமமான அந்த இளவரசியை {குந்தியை} நான் எப்போதும் வார்த்தைகளால் கடிந்து கொண்டதில்லை.
முன்பெல்லாம், யுதிஷ்டிரரின் அரண்மனையில் எட்டாயிரம் {8000} அந்தணர்கள் தங்கத்தட்டுகளில் உண்பார்கள். இல்லற வாழ்வு வாழும் ஸ்நாதக வகை அந்தணர்கள் எண்பதாயிரம் {80,000} பேருக்கு, ஒவ்வொருவரும் முப்பது பணிப்பெண்களை நியமித்துக் கவனித்தார் யுதிஷ்டிரர். இது தவிர, உயிர்விதை மேல்நோக்கிய பத்தாயிரம் யதிக்கள் தங்கத்தட்டுகளில் தங்கள் உணவை அருந்தினார்கள். வேதத்தை உச்சரிக்கும் அந்த அந்தணர்கள் அனைவருக்கும் நான் உணவு, பானம், விஸ்வதேவனுக்குப் {ரிக் வேத தேவன்} படைக்கப்பட்ட பகுதி போக மீந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்து அவர்களை [1] வழிபட்டு வந்தேன்.
[1] மூலத்தில் இருக்கும் சொல் "அக்கிரஹாரம்" ஆகும். இங்கே நீலகண்டர், "விஸ்வதேவர்களுக்குப் படைக்கப்பட்டது போக மீந்திருந்த குவியலில் இருந்து முதலில் எடுக்கப்பட்ட பண்டம்" என்கிறார். இங்கே திரௌபதி சொல்ல வருவது என்னவென்றால், தான் எப்போதும் முதலில் எடுக்கப்பட்ட உணவையே அந்தணர்களுக்குக் கவனத்துடன் கொடுத்தாகச் சொல்கிறாள். அதாவது வேறு யாரும் பயன்படுத்துவதற்கு முன்னரே கொடுத்ததாகச் சொல்கிறாள். என்கிறார் கங்குலி.
குந்தியின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரர்} கைகளில் தங்க ஆரங்களும், கழுத்தில் தங்க ஆபரணங்களும், விலையுயர்ந்த பூமாலைகளும், தங்க நகைகளும் பூண்டு, மேனியில் சந்தனம் பூசியிருந்த நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} பணிப்பெண்களைக் கொண்டிருந்தார். நகைகளாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் பாடுவதிலும், ஆடுவதிலும் திறன் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். ஓ! மங்கையே {சத்தியபாமா}, நான் அந்தப் பெண்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் குணங்களையும் அறிவேன். அவர்கள் யார், அவர்கள் என்னவாக {எந்தப் பணியில்} இருந்தார்கள், அவர்கள் எதைச் செய்யவில்லை என்பதையெல்லாம் நான் அறிவேன்.
குந்தியின் புத்திசாலி மகன் {யுதிஷ்டிரர்}, கைகளில் தங்கத்தட்டுகளுடன் தினமும் விருந்தினர்களை உபசரிக்கும் நூறாயிரம் {1,00,000} பணிப்பெண்களையும் கொண்டிருந்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தில் வாழ்ந்த போது, நூறாயிரம் {1,00,000} குதிரைகளும், நூறாயிரம் {1,00,000} யானைகளும் அவரைத் தொடர்ந்து செல்லும். யுதிஷ்டிரர் இந்த உலகை ஆண்டபோது அவர் கொண்டிருந்தவைதான் இவையனைத்தும். இருப்பினும், ஓ! மங்கையே {சத்தியபாமா}, இவற்றின் எண்ணிக்கை, இவர்களுக்கான விதிகள், ஆகியவற்றை நிர்ணயித்தவள் நான்தான். அவர்களது குறைகள் அனைத்தையும் கேட்க வேண்டியவளும் நான்தான். உண்மையில், அந்த மாளிகையில் இருந்த பணிப்பெண்கள் மற்றும் பிற வகைச் சேவகர்கள், அரச நிறுவனத்துக்குள் இருந்த மாடு ஆடு மேய்ப்பவர்கள் ஆகிய அனைவரும் என்ன செய்தார்கள், என்ன செய்ய வில்லை என்பதை நான் அறிவேன்.
ஓ! அருளப்பட்ட சிறப்புமிக்க மங்கையே {சத்தியபாமா}, மன்னரின் வரவு மற்றும் செலவுகளையும், அவர்களது மொத்த செல்வத்தையும் பாண்டவர்களுக்கு மத்தியில் நான் மட்டுமே அறிவேன். பாரதர்களின் காளைகளான அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களால் உணவளிக்கப்பட வேண்டியவர்களைக் கவனிக்கும் சுமையை என்மீது வைத்துவிட்டு, ஓ! அழகான முகம் கொண்டவளே {சத்தியபாமா}, என்னை மதித்தனர். தீய இதயம் கொண்டவர்களால் தாங்க முடியாத பெரும் பாரமான இந்தச் சுமையை, எனது வசதிகளைத் துறந்து, அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் நான் பகலும் இரவும் சுமந்தேன். என் கணவர்கள் அறம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது, எப்போதும் நிறைந்திருக்கும் வருணனின் கொள்கலனைப் போல இருக்கும் அவர்களது வற்றாத கருவூலத்தை நான் நிர்வகித்தேன். முதலில் எழுந்து, கடைசியாகப் படுக்கைக்குச் செல்வதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! சத்தியபாமா, இதுவே எப்போதும் என் கணவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. கணவர்களை எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும் இந்தப் பெரிய கலையை நான் எப்போதும் அறிந்து வைத்திருக்கிறேன். எப்போதுமே நான் தீய பெண்களின் பழக்கங்களைக் கைக்கொண்டதில்லை. நான் அவற்றைக் கைக்கொள்ள எப்போதும் விரும்பியதுமில்லை" என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணை {திரௌபதி} உதிர்த்த அறம் நிரம்பிய இவ்வார்த்தைகளைக் கேட்ட சத்தியபாமா, முதலில் அறம்சார்ந்த பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} வணங்கி, பிறகு, "ஓ! பாஞ்சால இளவரசியே, ஓ! யக்ஞசேனன் மகளே {திரௌபதியே}, நண்பர்களுக்கு மத்தியில் வேடிக்கையான உரையாடல்கள் திட்டமிடப்படாமல் இயல்பாகவே எழுகின்றன. நான் தவறிழைத்துவிட்டேன், மன்னிப்பாயாக!" என்றாள் {சத்தியபாமா}."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.