The advice of Draupadi! | Vana Parva - Section 232 | Mahabharata In Tamil
(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)
கணவனிடம் எப்படி நடந்து கொண்டால், அவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்தவனாக இருப்பான் எனத் திரௌபதி சத்தியபாமாவுக்குச் சொன்னது...
திரௌபதி {சத்தியபாமாவிடம்} சொன்னாள், "கணவரின் இதயத்தை ஈர்ப்பதற்கான சூழ்ச்சியற்ற வழியை நான் இப்போது உனக்குக் குறிப்பிடுவேன். அன்பிற்குரிய தோழியே {சத்தியபாமா}, அதைக் கைக்கொள்வதன் மூலம், நீ மற்ற பெண்களிடம் இருந்து உனது தலைவனை ஈர்த்துக் கொள்வாய். ஓ! சத்தியபாமா, தேவலோகத்தையும் சேர்த்து அனைத்து உலகிலும், கணவனுக்கு நிகரான வேறு தேவன் {தெய்வம்} கிடையாது. அவர் {கணவர்} உன்னிடம் திருப்தியடையும்போது, நீ (உனது கணவரிடம் இருந்து) விரும்பிய பொருட்களையெல்லாம் அடைவாய். அவர் {கணவர்} கோபப்படும்போது, அது அத்தனையும் இழப்பாய். வாரிசையும், மகிழ்வுண்டாக்கும் பல்வேறு பொருட்களையும் கணவரிடம் இருந்தே ஒரு மனைவி பெறுகிறாள். உனது கணவரின் மூலமே நீ அழகிய படுக்கைகளையும், இருக்கைகளையும், ஆடைகளையும், மாலைகளையும், நறுமணப்பொருட்களையும், பெரும் புகழையும், அதன் பிறகு சொர்க்கத்தையும் அடைவாய். எளிதான வழிகளில் யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. உண்மையில் கற்புள்ள பெண், இன்பத்தைத் துன்பத்துடனே பெறுகிறாள்.
எப்போதும் கிருஷ்ணனை நட்புடன் புகழ்ந்து உடல் பாடுகளை விரும்பி ஏற்றுக் கொள். அழகிய இருக்கைகளையும், அற்புதமான மாலைகளையும், பல்வேறு நறுமணப் பொருட்களையும், உடனடி சேவையையும் கொடுத்து, இவ்வழியில் நடந்தாயேயானால், அவர் {கிருஷ்ணன்} "நான் இவளால் உண்மையாகவே விரும்பப்படுகிறேன்" என்று எண்ணி உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார். வாயிலில் உனது தலைவரின் குரலைக் கேட்டதும், உனது இருக்கையில் இருந்து எழுந்து, அறையில் தயாராக நீ இருக்க வேண்டும். அவர் அந்த அறைக்குள் நுழைவதை நீ கண்டதும், உடனடியாக அவருக்கு அமர ஒரு இருக்கையைக் கொடுத்து, கால்கழுவ நீரைக் கொடுக்க வேண்டும். அவர் பணிப்பெண்ணிடம் எதையாவது செய்யச்சொன்னாலும், நீயே எழுந்து, அதை நீயே செய்வாயாக. உனது இந்த மனநிலையையும், முழு இதயத்தோடு நீ அவரை வணங்குகிறாய் என்பதையும் கிருஷ்ணன் அறியட்டும்.
ஓ! சத்தியபாமா, உனது தலைவர் எதைப் பேசினாலும், அது ரகசியமாக இல்லாவிட்டாலும் கூட, அதை யாரிடமும் பிதற்றிக் கொண்டிருக்கக்கூடாது. உனது சக்காளத்திகளில் {கிருஷ்ணனின் மற்ற மனைவியர்) யாராவது குறித்து வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினால், அவர் அது குறித்து உன்னிடம் எரிச்சலடையக்கூடும். உனது தலைவரிடம் அன்புடனும், அர்ப்பணிப்புடனும் இருந்து அவரின் நன்மையை விரும்பும் எவருக்கும் உனது சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி உணவு கொடுப்பாயாக. இருப்பினும், உனது தலைவரிடம் பகைமை பாராட்டுவர்கள், அவருக்குத் தீங்கிழைக்க நினைப்போர் ஆகியோர் வஞ்சகத்துக்கு அடிமையாக இருப்பதால் அவர்களிடம் இருந்து இருந்து நீ தள்ளி இருக்க வேண்டும். மனிதர்களின் முன்னிலையில், அனைத்து உற்சாகங்களையும், கவனக்குறைவுகளையும் புறந்தள்ளி, அமைதியாக இருப்பதன் மூலம் உனது நாட்டங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். உன் மைந்தர்களான பிரத்யும்னன் மற்றும் சாம்பனுடன் கூடத் தங்கவோ அல்லது தனியாக உரையாடவோ செய்யாதே.
உயர்ந்த பிறப்புப் பிறந்தவர்கள், பாவமற்றவர்கள், தங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் ஆகிய பெண்மணிகளிடம் மட்டுமே நீ சேர வேண்டும். கோபம் நிறைந்த, குடிக்கு அடிமையான, பெருந்தீனிக்கார, திருட்டுத்தனமுள்ள, தீய, பகை மேலிட்ட பெண்களிடம் இருந்து நீ எப்போதும் ஒதுங்கி இருக்க வேண்டும். இது போன்ற நடத்தையே மரியாதைக்குரியதும், செழிப்பை உண்டாக்குவதுமாகும். அது பகைமையைச் சமன் செய்யும் திறன் பெறும் போது, அது சொர்க்கத்திற்குக் கூட வழிவகுக்கும். எனவே, விலையுயர்ந்த மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்து, அற்புதமான தைலங்களை மேனியில் பூசிக்கொண்டு உனது கணவரை நீ வழிபடுவாயாக" என்றாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.