Krishna set out! | Vana Parva - Section 233 | Mahabharata In Tamil
(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)
சத்தியபாமா திரௌபதியிடம் அவளது பிள்ளைகளின் நலம் குறித்துச் சொன்னது; கிருஷ்ணனும் சத்தியபாமாவும் தங்கள் நகருக்குக் கிளம்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் மதுவைக் கொன்றவனான {மதுசூதனான} கேசவன் {கிருஷ்ணன்}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகன்களுடனும், மார்க்கண்டேயரின் தலைமையிலான அந்தணர்களுடனும் பல்வேறு ஏற்புடைய கதைகளைப் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் ஏறி சத்தியபாமாவை அழைத்தான்.
துருபதன் மகளை {திரௌபதியை} அணைத்துக் கொண்ட சத்தியபாமா, அவளிடம் {திரௌபதியிடம்} மனப்பூர்வமான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள். அவள் {சத்தியபாமா}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும்! தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ! கரிய கண்களையுடையவளே {திரௌபதி}, இது போன்ற நிலையையும், மங்களக்குறிகளையும் கொண்ட நீ நீண்ட நாட்களுக்குத் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது. அனைத்து முட்களில் இருந்தும் விடுபட்டு, உனது கணவர்களுடன் நீ இந்த உலகை அமைதியாக அனுபவிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, திருதராஷ்டரன் மகன்கள் கொல்லப்பட்டு, அவர்களின் விரோதச் செயல்களுக்கான பழிதீர்க்கப்பட்ட பிறகு, இந்தப் பூமி யுதிஷ்டிரரால் ஆளப்படுவதை நீ நிச்சயம் காண்பாய். {வனவாசம் ஏற்று} நாட்டைவிட்டு வெளியேறும் வழியில் உன்னைக் கண்டு, கர்வத்தால் அறிவிழந்து சிரித்த கௌரவர்களின் மனைவியர், ஆதரவற்று விரக்தியுடன் இழிந்த நிலையை அடைவதை நீ விரைவில் காண்பாய். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ துன்பத்திலிருந்த போது உனக்குத் தீங்கிழைத்தவர்கள் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள். யுதிஷ்டிரருக்குப் பிறந்த பிரதிவிந்தியன், பீமருக்குப் பிறந்த சுதசோமன், அர்ஜுனருக்குப் பிறந்த ஸ்ருதகர்மா, நகுலருக்குப் பிறந்த சதாநீகன், சகதேவனுக்குப் பிறந்த ஸ்ருதசேனன் ஆகிய உன் மகன்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அபிமன்யுவைப் போலவே அவர்கள் அனைவரும் துவாராவதியில் {துவாரகையில்} இன்பமாகத் தங்கியிருக்கின்றனர்.
சுபத்திரையும் மகிழ்ச்சியாகத் தன் முழு ஆன்மாவோடு, உன்னைப் போலவே அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள். அவர்களைக் கண்டு உன்னைப் போலவே மகிழ்கிறாள். உண்மையில் அவர்களது துயரங்களில் துக்கப்பட்டு, மகிழ்ச்சியில் இன்பமும் கொள்கிறாள். பிரதியும்னனின் அன்னையும் {ருக்மிணியும்} அவர்களிடம் முழு ஆன்மாவோடு அன்பு செலுத்துகிறாள். தனது மகன்களான பானு மற்றும் பிறருடன் கேசவரும் {கிருஷ்ணரும்}, அவர்களைச் சிறந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். எனது மாமியார் {தேவகி} அவர்களை உண்ண வைத்து, உடுத்தி எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். ராமரும் {பலராமர்}, மற்றும் பிறரும் சேர்ந்த அந்தகர்களும், விருஷ்ணிகளும் அவர்களைப் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஓ! அழகிய மங்கையே {திரௌபதி}, பிரத்யும்னனிடம் அவர்கள் எப்படிப் பாசம் கொண்டிருக்கிறார்களோ அதற்குச் சமமாக உன் பிள்ளைகளிடமும் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஏற்றுக் கொள்ளும் வகையில், உண்மையான மனப்பூர்வமான வார்த்தைகளைப் பேசிய சத்தியபாமா வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேருக்குச் செல்ல விரும்பினாள். பிறகு அந்தக் கிருஷ்ணனின் மனைவி {சத்தியபாமா}, பாண்டவர்களின் ராணியை {திரௌபதியை} வலம் வந்தாள். இப்படிச் செய்த அழகிய சத்தியபாமா கிருஷ்ணனின் தேரில் ஏறினாள். திரௌபதிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவளைக்கண்டு சிரித்த யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, {தன்னைத் தொடர்ந்து வந்த} பாண்டவர்களைத் திரும்பி செல்லச் செய்து, (தனது தேரில் பூட்டப்பட்டிருந்த) வேகமான குதிரைகளில் தனது சொந்த நகரத்திற்குக் {துவாரகைக்குக்} கிளம்பினான்.
*********திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம் முற்றிற்று*********
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.