The lament of Dhritarashtra! | Vana Parva - Section 234 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வம்)
துவைதவனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த ஓர் அந்தணர், திருதராஷ்டிரனிடம் சென்று பாண்டவர்களின் நிலையைக் குறித்துச் சொன்னது; பாண்டவர்களின் நிலையையும், அதற்கான காரணங்களையும் நினைத்து திருதராஷ்டிரன் புலம்பியது ...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, குளிர், கோடை, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றின் கடுமைத் தன்மைக்கு அக்கானகத்தில் முழுவதும் ஆட்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், துவைதம் என்ற பெயர் கொண்ட தடாகத்தோடு கூடிய வனத்தை அடைந்த பிறகு என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அத்தடாகத்திற்குப் பாண்டுவின் மகன்கள் வந்த பிறகு, மனிதர்கள் வசிக்காத ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்தனர். இனிமையான கானகத்திலும், எப்போதும் அழகாக இருக்கும் மலைகளிலும், அழகிய ஆறுகள் கொண்ட பள்ளத்தாக்குகளிலும் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்ட பிறகு, வேத கதைகள் அறிந்த பல மதிப்பிற்குரிய துறவிகள் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண அங்கே அடிக்கடி வந்து சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்}, வேதமறிந்த முனிவர்களால் எப்போதும் மதிக்கப்பட்டனர். ஒரு நாள், தனது பேச்சின் சக்திக்காக உலகத்தால் நன்கு அறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட அந்தணர் அந்தக் கௌரவ இளவரசர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தார். பாண்டவர்களுடன் சிறிது நேரம் பேசிய அவர், தனது விருப்பத்தின்படி விசித்திரவீரியனுடைய அரசமகனின் {திருதராஷ்டிரனின்} அரசவைக்குச் சென்றார்.
குருக்களின் தலைவனான அந்த முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால} உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்ட அந்த அந்தணர் தனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} கேட்டுக் கொண்டதற்கிணங்க, காற்றுக்கும் சூரியனுக்கும் தங்களை வெளிப்படுத்தி, மெலிந்து போய்க் கடும் துன்பத்தில் விழுந்திருக்கும் தர்மன் {யமன்}, பவனன் {வாயு}, இந்திரன் மற்றும் {அஸ்வினி} இரட்டையர்களின் மகன்களைக் குறித்துப் பேசினார். பிறகு அந்த அந்தணர், வீரர்களைக் கணவர்களாகக் கொண்டிருந்தும் துயரத்தில் மூழ்கி, முழுதும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} குறித்தும் பேசினார். அந்த அந்தணரின் வார்த்தைகளைக் கேட்ட விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, அரச பரம்பரையில் பிறந்து துன்பம் எனும் ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கும் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} நினைத்துத் துயரால் தாக்குண்டான். அனைத்தும் தனது சொந்தத் தவறால் நடந்தனவே என்று நினைத்து, தனது உள்ளார்ந்த ஆத்மா சோகத்தில் மூழ்கியதால், பெருமூச்சுவிட்டும் நடுங்கியும், பெரும் முயற்சியை மேற்கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான் {திருதராஷ்டிரன்}.
அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஐயோ, உண்மையானவனும், பக்திமானும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், ஒரு எதிரியும் இல்லாதவனும், முன்பு மென்மையான ரங்கு தோல்களாலான மெத்தைகளில் {ஹம்ஸதூளிகாசயனம்} படுத்தவனும், எனது மகன்களின் மூத்தவனுமான யுதிஷ்டிரன் இப்போது வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? ஐயோ, தினமும் காலையில் சூதர்களாலும் மாகதர்களாலும், பிற பாடகர்களாலும் இனிமையாகப் பாடப்பட்ட தன் புகழ் துதியைக் கேட்டு எழும்பிய, இந்திரனுக்கு நிகரான அந்தக் குருகுல இளவரசன் {யுதிஷ்டிரன்}, இப்போது, இரவின் சில மணிநேரத்தில் {விடியற்காலையில்} பறவைக்கூட்டங்களால் வெறுந்தரையில் இருந்து எழுவானே!
காற்றுக்கும் வெயிலுக்கும் உடலை வெளிப்படுத்தி, இளைத்துப் போய்க் கோபத்தால் நிறைந்திருக்கும் சிரமப்படத்தகாத விரிகோதரன் {பீமன்}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} முன்னிலையில் வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், புத்திசாலியுமான அர்ஜுனன், யுதிஷ்டிரனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைத்து இரவெல்லாம் உறங்கமாட்டானே! இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்}, கிருஷ்ணை, யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் துன்பத்தில் மூழ்கியிருப்பதைக் காணும் அர்ஜுனன், ஐயமின்றி, கடும் சக்தி கொண்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடி கோபத்தால் இரவெல்லாம் உறங்க மாட்டானே!
சொர்க்கத்தில் உள்ள அருளப்பட்ட இரு தேவர்களைப் போல இருக்கும் இரட்டையர்கள் {நகுலன் சகாதேவன் ஆகியோர்}, அருள் நிலைக்குத் தகுதியிருப்பினும், அறம் மற்றும் உண்மைக்குக் கட்டுப்பட்டு, (தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழிவாங்குவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு) விழிப்புடன் ஓய்வில்லாமல் தங்கள் இரவுகளைக் கழிப்பார்களே! வாயுத்தேவனின் பலத்திற்கு இணையான பலம் கொண்ட வாயு தேவனின் மகன் {பீமன்}, தனது அண்ணனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, பெருமூச்சுவிட்டபடி சந்தேகமற தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பான். அனைத்து போர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக இருப்பினும், அவன் {பீமன்} இப்போது, அறத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டுத் தரையில் அமைதியாகக் கிடக்கிறான். எனது பிள்ளைகளைக் கொல்ல நினைத்திருக்கும் அவன் நேரத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறான்.
ஏமாற்றுகரமாக யுதிஷ்டிரன் பகடையில் வீழ்த்தப்பட்ட போது, துச்சாசனன் பேசிய கொடும் வார்த்தைகள், விருகோதரனின் {பீமனின்} இதயத்தில் ஆழமாக மூழ்கி, எரிந்து கொண்டிருக்கும் வைக்கோல் கட்டு காய்ந்த விறகை உட்கொள்வது போல அவனை எரித்துக் கொண்டிருக்குமே! தர்மனின் மகன் எப்போதும் பாவ வழியில் செயல்படமாட்டான்; தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிவான்; ஆனால், நாடுகடத்தப்பட்ட வனவாழ்வின் விளைவாக, காற்றின் துணையோடு எரியும் காட்டுத்தீ போல, பீமனின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்குமே! வீரனான அவன் {பீமன்} அந்தக் கோபத்தினால் பிளக்கப்பட்டு, கைகளைப் பிசைந்து கொண்டு என் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் எரித்துவிடுவதைப் போல, மிகக் கோரமான சூடான பெருமூச்சை விட்டுக் கொண்டிருப்பானே! காண்டீவத்தைத் தாங்குபவனும் {அர்ஜுனனும்} விருகோதரனும் {பீமனும்} கோபப்படும்போது, யமனும் காலனும் போன்று, வஜ்ரங்களைப் போன்ற தங்கள் கணைகளைச் சிதறவிட்டு, எந்தத் தகுதி படைத்த எதிரியையும் கொன்று விடுவார்கள்.
ஐயோ, துரியோதனன், சகுனி, சூதனின் மகன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்ட துச்சாசனன் ஆகியோர், பகடை வழியாகப் பாண்டவர்களின் நாட்டைக் களவு செய்து, கொடூரமான அழிவின் குறியைக் கவனிக்காமல் தேனை மட்டும் காண்பதாக அல்லவா தெரிகிறது. சரியாகவோ, தவறாகவோ நடந்து கொண்ட மனிதன் தனது அச்செயலுக்கான கனியை {பலனை} எதிர்பார்க்கிறான். எனினும், அக்கனி {அந்தப் பலன்} அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தி, முழுமையாக அவனை முடக்கிவிடுகிறது. பின்பு அம்மனிதன் எப்படி விடுபடுவான்? நிலம் நன்கு உழப்பட்டு, அதில் விதைகளைத் தூவி, காலத்தில் {மழையின்} தேவன் {இந்திரன்} {மழையைப்} பொழிந்தாலும், அந்தப் பயிர் விளையாமல் போகலாம். இதைத்தான் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில், இங்கே எல்லாம் விதி சார்ந்தே நடக்கிறது என்கிறது பழமொழி; நான் நினைப்பதுபோல் அல்லாமல் இருந்தால் அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? {இதற்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?}
சூதாடியான சகுனி, எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும் பாண்டுவின் மகனிடம் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டான். எனது தீய மகன்களின் மேல் கொண்ட பாசத்தினால் நானும் அது போலவே நடந்து கொண்டேன். ஐயோ, இதன் காரணமாகவே குருக்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டதே! ஓ!, ஒருவேளை, தவிர்க்க முடியாத அது {அழிவு} நடந்து விடுமோ! உந்தப்பட்டாலும் இல்லையென்றாலும் காற்று நகர்ந்தே தீரும். கருவுற்ற பெண் பிரசவிக்கத்தான் செய்வாள். வைகறை {விடியல்} இருளை விலக்கத்தான் செய்யும். பகல் மாலையில் மறைந்துதான் போகும்! நம்மாலோ, பிறராலோ ஈட்டப்பட்டது எதுவாயினும் {எந்தப் பொருளாயினும்}, மனிதர்கள் அதைச் செலவு செய்தாலும், செய்யாவிட்டாலும், நேரம் வரும்போது, அந்த நமது உடைமைகள் நமக்குத் துன்பத்தைக் கொண்டு வருகின்றன. இருந்தும் ஏன் மக்கள் செல்வத்தை ஈட்டுவதில் இவ்வளவு ஆவலாக உள்ளனர்?
உண்மையில், எதை அடைந்தாலும், அது விதியின் பயன் என்றால், அது பிரிக்கப்படாதபடி சிறுகச் சிறுக இழக்காமல் உடனே வெளியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டாமா? அது பாதுகாக்கப்படாமல் இருந்தால் நூறு துண்டுகளாக உடைந்து போகுமே! {பிரிக்கப்படாமல், சிறிது சிறிதாகச் செலவாகாமல் பொருள் பாதுகாக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்} ஆனால், நமது உடைமைகளின் தன்மை எதுவாக இருந்தாலும், இவ்வுலகில் நமது செயல்களின் வினை தொலைந்து போவதில்லை. {செய்த வினை பலன் கொடுக்காமல் போவதில்லை}.
வனத்தில் இருந்து இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்ற அர்ஜுனனின் சக்தியைப் பாரும்! நால்வகைத் தெய்வீக ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த அவன் {அர்ஜுனன்}, மீண்டும் உலகத்திற்குத் திரும்பிவிட்டான்! மனித உருவத்தோடு சொர்க்கத்திற்குச் சென்ற எந்த மனிதன், மீண்டும் திரும்பி வர விரும்புவான்? காலத்தால் அடிக்கப்பட்டு, மரணத்திற்கு ஆட்பட்டிருக்கும் எண்ணற்ற குருக்களைக் {கௌரவர்களைக்} கண்ட காரணத்தாலேயே அவன் {அர்ஜுனன்} திரும்பியிருக்கிறான். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் திறன் பெற்ற அர்ஜுனனே வில்லாளி! அவன் கையாளும் வில்லான காண்டீவம், கடும் ஊக்கம் கொண்டது. இது தவிர, அவன் தனது தெய்வீக ஆயுதங்களையும் வைத்திருக்கிறான்! இந்த மூன்றின் {தெய்வீக ஆயுதங்கள், காண்டீவம், அர்ஜுனன்} சக்தியை யாரால் தாங்க முடியும்?" என்றான் {திருதராஷ்டிரன்}.
அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுபலனின் மகன் {சகுனி}, கர்ணனுடன் அமர்ந்திருந்த துரியோதனனிடம் சென்று, அனைத்தையும் தனிமையில் சொன்னான். துரியோதனன் சிறு புத்தி கொண்டிருந்தவன் ஆனாலும், அவன் கேட்டதை நினைத்து துயரத்தால் நிறைந்தான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.