Duryodhana entertained Durvasa! | Vana Parva - Section 260 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வம்)
பத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? நான் உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.
சில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்" என்று சொன்னார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ! அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்" என்று கோரினான் {துரியோதனன்}.
அதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.