Mudgala declined heaven! | Vana Parva - Section 259 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது...
தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, "ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.
தேவர்கள், சத்யசுகள், வைஸ்வசுகள், பெரும் தவசிகள், யமன்கள், தர்மர்கள், கந்தர்வர்கள் மற்றும் அப்சரசுகளுக்குச் சொந்தமான, விரும்பிய அனைத்துப் பொருட்களையும் வழங்கவல்ல, அழகான, பளபளப்பான மற்றும் பிரகாசமான உலகங்கள் அங்கே {சொர்க்கத்தில்} இருக்கின்றன. அங்கேதான், மலைகளின் ஏகாதிபதியான பொன் மேரு முப்பத்துமூவாயிரம் யோஜனைகள் பரப்பிற்குப் பரந்திருக்கிறது. ஓ! முத்கலரே, அங்கேதான், நற்செயல்கள் புரிந்த மனிதர்கள் விளையாடும் நந்தனத்தைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே {சொர்க்கத்தில்} பசி, தாகம், சோர்வு, அச்சம், அருவருக்கத்தக்கவை, அமங்களமானவை ஆகியன கிடையாது. அந்த இடத்தின் நறுமணம் இனிமையானது. அங்கே இருக்கும் தென்றல் தீண்டலுக்கு அருமையானது. ஓ! தவசியே {முத்கலரே}, செவி மற்றும் இதயத்தைக் கொள்ளையிடும் அனைத்து ஒலிகளும் அங்கே இருக்கின்றன. துக்கம், மூப்பு, உழைப்பு, பின்னிரக்கம் {தான் செய்த குற்றத்திற்காக வருந்துவது} ஆகியன அங்கே கிடையாது.
ஓ! முனிவரே {முத்கலரே}, ஒருவரது சொந்தச் செயல்களின் கனியாகப் பெறப்படும் அவ்வுலகம், இந்த இயல்பைக் கொண்டதாகவே இருக்கிறது. தாங்கள் செய்யும் நற்செயல்களின் காரணமாக மனிதர்கள் அங்கே செல்கிறார்கள். அங்கே வசிக்கும் மனிதர்கள், ஓ! முத்கலரே, தந்தையர் மற்றும் தாய்மார்களின் தகுதியால் அல்லாமல், தான் செய்யும் செயல்களில் உள்ள நற்தன்மையினாலேயே பிரகாசமாக இருக்கின்றனர். அங்கே வேர்வையோ, துர்நாற்றமோ, சிறுநீரோ கிடையாது. ஓ! முனிவரே {முத்கலரே}, அங்கே ஒருவரது ஆடைகளில் தூசு ஒட்டுவதில்லை. அவர்களது தெய்வீக மணம் கமழும் அற்புதமான {மலர்} மாலைகள், நறுமணமிக்கதாக இருக்கிறது. அவை ஒருபோதும் வாடுவதில்லை. ஓ! அந்தணரே {முத்கலரே}, அவர்கள் (நான் கொண்டு வந்திருக்கும்) இத்தகு தேர்களிலேயே பயணிக்கின்றனர். ஓ! வலிமைமிக்கத் தவசியே {முத்கலரே}, பொறாமை, துன்பம், களைப்பு, அறியாமை, துர்க்குணம் ஆகியவற்றைக் களைந்து, சொர்க்கத்தை அடைந்த மனிதர்கள், அப்பகுதிகளில் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். ஓ! முனிவர்களில் காளையே {முத்கலரே}, இத்தகு பகுதிகளுக்கு மேலே, அதற்கும் மேலே எனப் பிற உயர்ந்த தெய்வீக அறம் நிறைந்தவர்கள் உள்ள உலகங்கள் இருக்கின்றன. இவற்றில், அழகும், பிரகாசமும் மிக்கப் பிரம்ம லோகம் முதன்மையானதாக இருக்கிறது.
அங்கே, ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்களால் புனிதமடைந்த முனிவர்கள் செல்கின்றனர். அங்கே ருபுக்கள் என்ற பெயர் கொண்ட குறிப்பிட்ட சிலர் வசிக்கின்றனர். அவர்கள் {ருபுக்கள்} தேவர்களுக்கும் தேவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய பகுதிகள் மிகவும் அருள் நிறைந்தவையாக இருக்கின்றன. அவை தேவர்களாலும் வழிபடப்படுகின்றன. அவை தங்கள் சுய ஒளியால் பிரகாசித்து, விரும்பும் அனைத்துப் பொருட்களையும் கொடுக்கின்றன. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} பெண்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லை; அவர்கள் செல்வங்களை அடைவதில்லை; அவர்கள் சூதற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தானங்களாலோ, அமுதத்தாலோ வாழவில்லை. அவர்கள் புலன்களுக்குப் புலப்படாத தெய்வீக உருவங்களைக் கொண்டிருக்கின்றனர். தேவர்களுக்கு நித்தியமான தேவர்களான இவர்கள் மகிழ்ச்சியின் நிமித்தமாக மகிழ்ச்சியை விரும்புவதில்லை. கல்ப புரட்சியின் போதும் அவர்கள் மாற்றமடைவதில்லை. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} இன்பமுமில்லை, துன்பமுமில்லை. அப்படி இருக்கும்போது, ஓ! முனிவரே {முத்கலரே}, அவர்களுக்குக் கோபமோ, வெறுப்போ எப்படி ஏற்படும்?
ஓ! முத்கலரே, அவர்களது இந்த உயர்ந்த நிலை தேவர்களாலும் பேராசையுடன் விரும்பப்படுகிறது. அடைய கடினமான அந்த முடிசூட்டப்பட்ட விடுதலையை, விருப்பங்களுக்கு ஆட்படும் மனிதர்களால் அடையவே முடியாது. அந்தத் தேவர்களின் {ருபுக்களின்} எண்ணிக்கை முப்பத்துமூன்று {33} ஆகும். அவர்களது பகுதிகளுக்கு, அற்புத நோன்புகள் நோற்றவர்களும், விதிப்படி தானங்கள் அளித்தவர்களும் செல்கிறார்கள். நீரும் உமது தானங்களின் வெற்றியால் அவற்றை எளிதாக அடைந்துவிட்டீர். நீரும் உமது நற்செயல்களால் அடைந்த நிலையை, உமது தவத்துறவுகளால் அடைந்த அறத்தின் பிரகாசத்தைக் கொண்டு அனுபவிப்பீராக. ஓ! அந்தணரே {முத்கலரே}, பல உலகங்களைக் கொண்ட சொர்க்கத்தின் அருள்நிலை இதுவே.
இப்படியே தெய்வீக உலகங்களின் அருள்நிலையை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அங்கே {சொர்க்கத்தில்} இருக்கும் சில குறைபாடுகளையும் கேளும். தெய்வீக உலகங்களில் இருக்கும் ஒரு மனிதன், தனது செயல்களுக்கான கனியை அறுத்துக் கொண்டிருக்கும்போது {செயல்களின் பலனைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது}, எந்தப் பிறவற்றிலும் ஈடுபடமுடியாது. தன் முந்தைய பிறவியின் பலன்களை, அவை தீரும் வரை அனுபவிக்க வேண்டும். பிறகு, தன் தகுதிகளை இழந்த உடன், அவ்வளவு பெரிய உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் விழ நேரிடும். அதுவே சொர்க்கத்தின் குறைபாடு என்பது எனது கருத்து. ஓ! முத்கலரே, இன்பத்தில் மூழ்கிய மனம் கொண்ட மனிதன் விழ நேர்வது களங்கம் என்றே சொல்ல வேண்டும். மிக மங்களகரமான பிரகாசமான பகுதியில் இருந்து, தாழ்ந்த நிலை செல்லும் ஒருவன் அதிருப்தியும் வருத்தமும் கொள்வது, தாங்கிக் கொள்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படி விழுபவனின் மனம் அறியாமையில் மூழ்கி, உணர்ச்சிகளால் கலங்கடிக்கப்படுகிறது. {அங்கிருந்து} விழுவதற்கு முன்னால் மாலைகள் வாடுகிறது. அது அவர்களது இதயத்திற்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஓ! முத்கலரே, இந்தப் பெரும் குறைபாடுகள் பிரம்ம லோகம் வரை கூட நீள்கிறது.
இந்தத் தெய்வீக உலகங்களில், மனிதர்களின் நற்செயல்களால் செய்யப்பட்ட அறங்கள் எண்ணற்றவையாகும். ஓ! முனிவரே, அப்படி விழுபவர்கள், மனிதர்களிடையே தங்கள் பிறப்பை அடைவது, அவர்கள் பெற்றிருக்கும் தகுதிகளாலேயே ஆகும். பிறகு அவர்கள் பெரும் நற்பேறையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள். எனினும், இங்கே ஞானத்தை அடைய முடியாதவர்களால், தாழ்ந்த பிறப்பு அடையப்படுகிறது. இந்த உலகத்தில் செய்யப்படும் செயல்களின் கனிகள், அடுத்த உலகத்தில் அறுக்கப்படுகின்றன. ஓ! அந்தணரே {முத்கலரே}, இது {இவ்வுலகம்} செயல்களின் உலகம் என்றும், மற்றவை கனிகளின் {பலன்களின்} உலகம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே, ஓ! முத்கலரே! நீர் கேட்டது அனைத்தும் குறித்து விவரித்துவிட்டேன். இப்போது, ஓ! பக்திமானே {முத்கலரே}, உமது கருணையால், நாம் இங்கிருந்து விரைவாகக் கிளம்புவோம்" என்றான் {தேவ தூதன்}.
வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்பேச்சைக் கேட்ட முத்கலர், மனதில் ஆலோசித்தார். ஆழ்ந்து ஆராய்ந்த பிறகு, அந்த முனிவர்களில் சிறந்தவர் {முத்கலர்}, அந்தத் தேவ தூதனிடம், “ஓ! தேவர்களின் தூதா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தந்தையே, நீ இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. எனகு இன்பத்தாலோ, இத்தகு பெரிய குறைபாடுகள் உடைய சொர்க்கத்தாலோ அடைய வேண்டியது ஒன்றுமில்லை. சொர்க்கத்தில் இன்புற்றிருக்கும் மனிதர்கள், அனைத்திற்கும் பிறகு, இவ்வுலகில் துன்பத்தையும், எல்லையற்ற வருத்தத்தையும் அடைகின்றனர். எனவே, நான் சொர்க்கம் செல்ல விரும்பவில்லை. எந்த உலகங்களில் மனிதர்கள் புலம்பத் தேவையில்லையோ, வலியடைய வேண்டியதில்லையோ, கிளர்ச்சியடைய வேண்டியதில்லையோ, அத்தகு வீழாத உலகை அடைய நான் முயல்வேன். தெய்வீக உலகங்களின் பெரும் குறைகளை நீ எனக்கு விவரித்தாய். இப்போது குறைகளற்ற உலகத்தை எனக்கு விவரிப்பாயாக" என்றார் {முத்கலர்}.
அதன் பேரில் தேவ தூதுவன் {முத்கலரிடம்}, “பிரம்மனின் வசிப்பிடத்திற்கு மேலே பரப்பிரம்மம் என்று அழைக்கப்படும் சுத்தமான, நித்தியமான, ஒளிரும் தன்மையை உடைய விஷ்ணுவின் இடம் இருக்கிறது. ஓ! அந்தணரே {முத்கலரே}, புலன்நுகர் பொருட்களுடன் தொடர்புடைய எந்த மனிதரும் அங்கே செல்ல முடியாது. ஆணவம், பேராசை, அறியாமை, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றுக்கு ஆட்படும் எந்த மனிதனும் அங்கே செல்ல முடியாது. பாசத்திலிருந்து விடுபட்டு, தற்பெருமையில் இருந்து விடுபட்டு முரண்படும் உணர்வுகளில் இருந்து விடுபட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, சிந்தனையிலும் யோகத்திலும் ஆழ்ந்து செல்லும் மனிதர்களே அங்கே {விஷ்ணுலோகத்திற்குச்} செல்ல முடியும்" என்றான் {தேவதூதன்}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர் {முத்கலர்}, தேவ தூதனை வழியனுப்பினார். பிறகு உஞ்ச வகை வாழ்வு வாழும் அந்த அறம் சார்ந்தவர் {முத்கலர்}, முழு மனநிறைவை அடைந்தார். பிறகு, புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அவருக்குச் சமமானது; செங்கற்கட்டியும், கல்லும், தங்கமும் ஒரே அம்சமாக அவரது கண்களுக்குத் தெரிந்தது. பிரம்மத்தை எட்டுவதற்கான வழிகளைப் பெற்ற அவர், முழுதும் தியானத்திலேயே ஈடுபட்டார். பிறகு ஞானத்தால் சக்தியை அடைந்த அவர், அற்புதமான புரிதலை அடைந்து, நித்தியமாகக் கருதப்படும் உச்சநிலையான விடுதலையை {முக்தியை} அடைந்தார்.
எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் வருந்தக்கூடாது, உண்மையில் வளமான பேரரசை இழந்தாய். ஆனால், உனது தவத்தின் காரணமாக நீ அவற்றை மீட்பாய். அச்சில் சுழலும் ஒரு சக்கரத்தின் சுற்றளவில் இருக்கும் புள்ளியைப் போல, இன்பத்திற்குப் பின்பு துன்பமும், துன்பத்திற்குப் பின்பு இன்பமும், மாறி மாறி மனிதர்களுக்கு வருகின்றன. பதிமூன்றாவது {13} வருடத்தைக் கடந்த பிறகு, அளவிடமுடியாத வலிமைகொண்ட நீ, உன் தந்தை மற்றும் பாட்டனின் நாட்டை மீண்டும் பெறுவாய். எனவே, உனது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்" என்றார் {வியாசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இதைச் சொன்ன வழிபடத்தகுந்த வியாசர், தவம் பயில்வதற்காகத் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.”
அடுத்த பகுதியில் இருந்து திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் Sacred texts வலைத்தளத்தில் தவறாக இருக்கிறதா? அல்லது கங்குலியே தவறாக இட்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை. கங்குலியின் புத்தகத்தில் திரௌபதி ஹரணப் பர்வம் 261ல்தான் ஆரம்பிக்கிறது (http://sacred-texts.com/hin/m03/m03261.htm).
நாம் அடுத்த பகுதியில் இருந்தே {அதாவது 260வது பகுதியில் இருந்தே} திரௌபதி ஹரணப் பர்வம் என்று கொள்வோம்.
*********கோஷ யாத்ரா பர்வம் முற்றிற்று*********
அடுத்த பகுதியில் இருந்து திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் Sacred texts வலைத்தளத்தில் தவறாக இருக்கிறதா? அல்லது கங்குலியே தவறாக இட்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை. கங்குலியின் புத்தகத்தில் திரௌபதி ஹரணப் பர்வம் 261ல்தான் ஆரம்பிக்கிறது (http://sacred-texts.com/hin/m03/m03261.htm).
நாம் அடுத்த பகுதியில் இருந்தே {அதாவது 260வது பகுதியில் இருந்தே} திரௌபதி ஹரணப் பர்வம் என்று கொள்வோம்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.