Durvasa ran away! | Vana Parva - Section 261 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
துர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ! வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்" என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.
அதே வேளையில் ஓ! மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ! கிருஷ்ணா, ஓ! தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ! வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ! அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ! தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ! உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ! நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ! ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ! தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ! தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்" என்று வேண்டினாள் {திரௌபதி}.
[1] இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் சந்தேகம் உள்ளது. அறிவுத்திறன் மற்றும் அறநெறி உணர்வுத் திறன் ஆகியவற்றைக் குறிக்க வேதங்களில் இப்படி இருப்பதாகப் படுகிறது என்கிறார் கங்குலி.ஆஹுதி என்றால் விருப்பம் அல்லது கருதியது முடித்தல் என்றும், சித்தி என்றால் நினைத்தல் அல்லது ஆலோசித்தல் என்றும் பொருள் என்கிறார்கள். ஆஹுதி என்பது வேள்விப் பயன், அதன் மூலம் விளைந்த பொருள். ஆஹுதி கொடுக்க மறுத்ததாலேயே தக்ஷன் ஈசனால் கொல்லப் படுகிறான்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, "நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்" என்றான்.
கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை" என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு" என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்" என்றான்.
பிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக" என்றான். பிறகு ஓ! நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும்? நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது?” என்று கேட்டனர்.
அதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா? அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்" என்றார் {துர்வாசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.
யுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ! உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது?” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக!” என்றான் {கிருஷ்ணன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ! தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ! அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ! மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.