Jayadratha beheld Draupadi! | Vana Parva - Section 262 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்றது; அவ்வேளையில் ஜெயத்ரதன் திரௌபதியைக் காண்பது; அவளைக் கண்டு மயங்கிய அவன், அவளைப் பற்றி அறிய கோடிகனை அனுப்பியது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாரதக் குலத்தைச் சார்ந்த இத்தகுப் பெரும் வீரர்கள் காம்யகம் எனும் பெரும் காட்டில் தேவர்களைப் போலச் சுற்றிக் கொண்டும், வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டும், நாட்டின் எண்ணிலடங்கா காட்டுபகுதிகளையும், அழகான மலர்கள் பூக்கும் காலம் கொண்ட கானகத்தின் பரந்த பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் கண்டனர். ஒவ்வொருவரும் இந்திரனைப் போல இருந்து, எதிரிகளுக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அங்கே சிறிது காலம் தங்கினர். ஒரு நாள், எதிரிகளை வெல்லும் அந்தப் பராக்கிரமசாலிகள் {பாண்டவர்கள்}, தங்களுடன் இருந்த அந்தணர்களுக்கு உணவு கொடுப்பதற்காக, அனைத்து பக்கங்களுக்கும் வேட்டையாடச் சென்றனர். தவ மகிமை கொண்ட பெரும் துறவியான திருணபிந்துவிடமும், தங்கள் ஆன்ம வழிகாட்டியான தௌமியரிடமும் அனுமதி கேட்டு, திரௌபதியைத் தனியாக ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.
அதே வேளையில், சிந்துவின் புகழ்பெற்ற மன்னனான, விருத்தக்ஷத்ரனின் மகன் {ஜெயத்ரதன்}, திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன், சிறந்த அரச உடைகள் உடுத்தி, எண்ணற்ற இளவரசர்களின் துணையுடன் சால்வ நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காம்யக வனத்தில் அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} நின்றான். அந்த ஒதுங்கிய இடத்தில், பாண்டவர்களின் கொண்டாடப்படும் அன்பிற்குரிய மனைவியான அழகிய திரௌபதி, ஆசிரமத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகிய வடிவத்தால் பிரம்மாண்டமாக இருந்த அவள், கரிய மேகக் குவியலைப் பிரகாசிக்க வைக்கும் மின்னலைப் போல, அந்த வனத்தைச் சுற்றி ஒரு காந்தியைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளை {திரௌபதியைக்} கண்ட எவரும், “இது அப்சரசா? தேவர்களின் மகளா? அல்லது தேவ மாயையா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். இந்த எண்ணத்தால் அவர்களது கரங்களும் குவிந்தன. அவர்கள் களங்கமற்ற வடிவழகு கொண்டவளை நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விருத்தக்ஷத்ரனின் மகனும், சிந்துவின் மன்னனுமான ஜெயத்ரதன், களங்கமற்ற அழகுடைய அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி, தீய நோக்கத்தால் பீடிக்கப்பட்டான். ஆசை கொழுந்து விட்டெரிய அவன் {ஜெயத்ரதன்} கோடிகன் என்ற இளவரசனிடம், “களங்கமற்ற வடிவம் கொண்ட இந்த மங்கை யாருடையவள்? இவள் மனித வகையைச் சார்ந்தவள்தானா? இந்தப் பேரழகியை அடைய முடிந்தால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை [1]. அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு எனது வசிப்பிடத்திற்குத் திரும்புவேன். ஓ! ஐயா {கோடிகா}, இவள் யாரென்றும், இவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்றும், இந்த மென்மையானவள் முட்கள் நிறைந்த இந்தக் கானகத்திற்கு ஏன் வந்தாள் என்றும் அறிந்து வா. பெண் வகையில் ரத்தினமான இந்தக் கொடியிடையாள், பெரும் அழகு படைத்த இந்த மங்கை, அழகிய பற்களும், நீண்ட கண்களும் கொண்ட இவள் என்னைத் தலைவனாக ஏற்பாளா? இந்த அற்புதமான மங்கையின் கரங்களை அடைந்தால், நான் நிச்சயம் என்னை வெற்றியடைந்தவனாகக் கருதிக் கொள்வேன். போ, கோடிகா {கோடிகாஸ்யா}, இவளது தலைவன் யார் என்பதை விசாரித்து வா" என்றான் {ஜெயத்ரதன்}. இப்படிக் கேட்கப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்த கோடிகன், தனது தேரில் இருந்து குதித்து, ஒரு நரி பெண் புலியை அணுகுவதைப் போல அவளின் {திரௌபதியின்} அருகில் வந்து, இந்த வார்த்தைகளைப் பேசினான்.
[1] இங்கே I have no need to marry if I can secure this exquisitely beautiful creature. என்று ஜெயத்ரதன் சொல்வதாகவே கங்குலியில் உள்ளது. ஒருவேளை இதன்பிறகே ஜெயத்ரதன் துச்சலையை மணந்திருக்க வேண்டும் என்று யூகித்தால் வனபர்வம் பகுதி 269ல் யுதிஷ்டிரன், தன் தங்கை துச்சலையை நினைவுகூர்ந்து ஜெயத்ரதனிடம் கருணை காட்டுகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.