Kotika spoke to Draupadi! | Vana Parva - Section 263 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ஜெயத்ரதன் கட்டளைக்கிணங்க கோடிகன் திரௌபதியிடம் சென்று பேசுவது; அவள் யார், யாருடைய மனைவி என்று விசாரித்து, தங்களைக் குறித்த அறிமுகத்தைச் சொல்வது ...
கோடிகன் {திரௌபதியிடம்} சொன்னான், "அற்புதமான மங்கையே, இரவு நேரத்தில் சுடர்விடும் நெருப்பெனப்
பிரம்மாண்டமாகத் தெரிகிறாயே. இந்த ஆசிரமத்தில் இருக்கும் கடம்ப மரத்தில்
சாய்ந்து கொண்டு, தென்றலால் தாலாட்டப்பட்டுத் தனியாக நிற்கும் நீ யார்?
நேர்த்தியான அழகுடன் இருக்கும் நீ, இந்தக் காட்டுப் பகுதியில் எந்தப்
பயத்தையும் உணரவில்லையா? {இங்கே உன்னைக் கண்டு}, தேவதையோ, யக்ஷியோ,
தானவியோ, அற்புதமான அப்சரசோ, தைத்தியர் எவரின் மனைவியோ, நாக மன்னனின் மகளோ,
ராட்சசியோ, வருணனின், யமனின், சோமனின், குபேரனின் மகளோ மனித உருவம் கொண்டு
இந்தக் கானகத்தில் உலவுவதாக நான் உன்னைக் குறித்து எண்ணுகிறேன். அல்லது, தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா}, சாவித்ரி {சூரியன்}, விபு, சக்ரன் {இந்திரன்} ஆகியோரின் மாளிகையில் இருந்து இங்கு வந்திருக்கிறாயா?
நாங்கள் யார் என்று எங்களிடம் நீ கேட்கவில்லை. உன்னை இங்கு யார் பாதுகாக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை. மரியாதையுடன் உன்னைக் கேட்கிறேன், ஓ! நன்மங்கையே, பலமிக்க உனது தந்தை யார்? உனது கணவன், உறவிர்கள், குலம் ஆகிய பெயர்களை எங்களுக்குச் சொல். நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதையும் சொல். எங்களைப் பொறுத்தவரையில், நான் மன்னன் சுரதனின் மகன், என்னை மக்கள் கோடிகன் என்று அறிவார்கள். அந்தத் தங்கத்தேரில் வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் நெருப்புப்போல அமர்ந்திருக்கும் அந்த மனிதன், தாமரை இதழ்களைப் போல நீண்ட கண்களையுடைய அந்த வீரன், க்ஷேமங்கரன் என்ற பெயரால் அறியப்படும் திரிகார்த்த {நாட்டின்} மன்னனாவான். அவனுக்குப் பின்னால், இப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் புளிந்த {குளிந்த நாட்டு} மன்னனின் புகழ்பெற்ற மகனாவான். பெரும் வில்லைத் தாங்கி, அகன்ற கண்களுடன், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மலைகளின் மார்புகளில் வாழ்பவன் அவன். கரிய நிறமும், அழகும் கொண்டவனும், எதிரகளை அழிப்பவனும், அந்தக் குளத்தின் அருகில் நின்று கொண்டிருப்பவனுமான அந்த இளைஞன், இக்ஷவாகு குலத்தில் வந்த சுபலனின் மகனாவான்.
ஓ! அற்புதமான மங்கையே, ஜெயத்ரதன் என்ற பெயர் பெற்ற, சௌவீர {நாட்டு} மன்னனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கலாம். வேள்வி பீடத்தில் தோன்றும் நெருப்பு போல இருப்பவர்களும், சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பவர்களுமான அங்காரகன், குஞ்சரன், குப்தகன், சத்ருஞ்சயன், ஸ்ரீஞ்சயன், சுப்பிரவிருத்தன், பிரபாங்கரன், பிரமரன், ரவி, சூரன், பிரதாபன் மற்றும் குஹனன் ஆகிய பனிரெண்டு சௌவீர இளவரசர்களைத் தனது கொடி தாங்குபவர்களாக வைத்துக் கொண்டு, {போரில்} ஆறாயிரம் தேர்களின் தலைவனாக {முன்னணியில்} இருந்து கொண்டு, குதிரைகளுடனும், யானைகளுடன், காலாட்படையுடனும், செல்லும் அவனும் {ஜெயத்ரதனும்} அதோ அங்கே இருக்கிறான். அந்த மன்னனின் தம்பிகளான பலமிக்க வலாஹகன், அநீகன், விதாரணன் மற்றும் பிறரும் அவனைப் பின்தொடரும் தொண்டர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர். வலிய கரங்களும் கால்களும் கொண்ட இந்த இளைஞர்கள் அனைவரும் தீரச்செயல்களின் மலர்களாவர். அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, இவர்களுடனே, மருதர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலத் தனது பயணத்தைச் செய்கிறான். ஓ! அழகிய கூந்தல் கொண்டவளே, நீ யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று (இது போன்ற விஷயங்களை) அறியாத எங்களுக்கு அவற்றைச் சொல்வாயாக" என்று கேட்டான் {கோடிகன்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.