The reception of Draupadi! | Vana Parva - Section 264 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
திரௌபதி கோடிகனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிபி குலத்தவனால் {கோடிகனால்} இப்படிக் கேட்கப்பட்ட இளவரசி திரௌபதி, தன் கண்களை மெதுவாக நகர்த்தி, கடம்ப மர கிளையில் இருந்த தனது பிடியை விட்டு, தன் பட்டாடையைச் சரி செய்து கொண்டு, “ஓ! இளவரசரே {கோடிகா}, என்னைப் போன்ற ஒருத்தி உம்மிடம் இப்படி உரையாடுவது தகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உம்மிடம் பேச இங்கு வேறு ஆடவரோ, பெண்மணியோ இல்லை. நான் இங்கே தனியாக இருக்கிறேன். அதனால் என்னைப் பேச அனுமதியும். தகுதியுடைய ஐயா {கோடிகா}, என்னுடைய பாலினத்தை {நான் பெண் என்பதை} நினைவுகூர்ந்து, இந்தக் காட்டில் தனிமையில் இருக்கும் நான் உம்மிடம் பேசக்கூடாது என்பதை அறியும்.
ஓ! சைப்பியரே {கோடிகா}, சுரதனின் மகனான உம்மைக் கோடிகன் என்ற பெயரால் மக்கள் அறிகிறார்கள் என்றும் நான் {உம்மிடம் இருந்து} அறிந்தேன். எனவே, நான் என் பங்குக்கு, எனது உறவினர்களையும், எனது புகழ்வாய்ந்த குலத்தையும் இப்போது சொல்கிறேன். நான் மன்னர் துருபதரின் மகள், கிருஷ்ணை {திரௌபதி} என்ற பெயரால் மக்கள் என்னை அறிவார்கள். காண்டவப்பிரஸ்தத்தில் வாழ்ந்து வந்த ஐவரை நான் கணவர்களாக ஏற்றுக் கொண்டேன் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கலாம். யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மாத்ரியின் இருமகன்கள் {நகுல, சகாதேவர்கள்}ப் ஆகிய அந்த உயர்ந்த மனிதர்கள் {எனது கணவர்கள்}, என்னை இங்கே விட்டுவிட்டு, வேட்டையாடுவதற்காக நான்கு திசைகளில் சென்றிருக்கிறார்கள்.
மன்னர் {யுதிஷ்டிரர்} கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார், பீமசேனர் தெற்கிலும், அர்ஜுனர் மேற்கிலும், இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன் ஆகியோர்} வடக்கிலும் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} உரிய வரவேற்பைப் பெற்று நீங்கள் செல்லலாம். எனவே, இப்போது உங்கள் வண்டிகளை விட்டுக் கீழிறங்கி அவற்றுக்கு {வண்டிகளுக்கு} நீங்கள் விடை கொடுங்கள். உயர் ஆன்மா கொண்ட தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} விருந்தினர்களை மிகவும் பிடிக்கும். அவர் உங்களைக் கண்டு மிகவும் மகிழ்வார் என்பது நிச்சயம்" என்றாள். அந்தச் சைப்பியனின் மகனிடம் {கோடிகனிடம்} இப்படிச் சொன்ன, சந்திரன் போன்ற அழகிய முகம் கொண்ட துருபதன் மகள் {திரௌபதி}, தன் கணவன் {யுதிஷ்டிரன்} விருந்தோம்பல் செய்யும் குணத்தை நன்றாக நினைவுகூர்ந்து, தன் விசாலமான குடிசைக்குள் நுழைந்தாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.