The wretchedness of Jayadratha! | Vana Parva - Section 265 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ஜெயத்ரதன் திரௌபதியை அணுகியது; திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்து, நீண்ட பேச்சுகளால் தாமதம் செய்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோடிகாக்கியன் {கோடிகன்}, கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} தனக்கும் இடையில் நடந்தவற்றை, காத்திருந்த {ஜெயத்ரதன் உட்பட்ட} அந்த இளவரசர்களுக்குச் சொன்னான். கோடிகாக்கியனின் வார்த்தைகளைக் கேட்ட சிபி குலக் கொழுந்தான ஜெயத்ரதன், “அவள் பேசியதை மட்டுமே கேட்ட என் இதயம், அந்தப் பெண்குல ரத்தினத்தின் மேல் காதல் கொள்கிறது. இப்படியிருக்கும்போது, நீ ஏன் (வெற்றியடையாமல்) திரும்பினாய்? நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கோடிகா}, இந்தப் பெண்ணை ஒரு முறை கண்ட பிறகு, மற்ற பெண்களெல்லாம் எனக்கு {பெண்} குரங்குகளைப் போலத் தெரிகிறார்கள். நான் இவளைக் கண்டவுடன், இவள் எனது இதயத்தைக் கொள்ளையிட்டுவிட்டாள். ஓ! சைப்பியா {கோடிகா}, இந்த அற்புதமான மங்கை, மனித வகையைச் சேர்ந்தவள்தானா என்று எனக்குச் சொல்?" என்று கேட்டான். அதற்குக் கோடிகன், “இந்த மங்கை புகழ்பெற்ற இளவரசியான கிருஷ்ணையாவாள் {திரௌபதியாவாள்}. இவள் துருபதனின் மகளும், பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும் பிரபலமான மனைவியுமாவாள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} இவள் மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய, கற்புடைய மனைவியாவாள். இவளை உன்னுடன் சௌவீரத்திற்கு எடுத்துச் செல்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிந்து, சௌவீரம் மற்றும் பிற நாடுகளுக்கு மன்னனான தீய மனம் கொண்ட ஜெயத்ரதனுக்கு இப்படிச் சொல்லப்பட்டதும், அவன் {ஜெயத்ரதன்}, “நான் திரௌபதியைப் பார்க்க வேண்டும்" என்றான். பிறகு, ஆறு பேருடன், அந்தத் தனிமையான ஆசிரமத்திற்குள், சிங்கக் குகைக்குள் நுழையும் ஓநாய் போல நுழைந்தான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} கிருஷ்ணையிடம் {திரௌபதி}, “உனக்கு வாழ்த்துகள், அருமையான மங்கையே! யாருடைய செழிப்பை நீ எப்போதும் விரும்புகிறாயோ அந்த உனது கணவர்கள் நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டான். அதற்குத் திரௌபதி, “குந்தியின் மகனும், குரு குலத்தைச் சேர்ந்தவருமான மன்னர் யுதிஷ்டிரரும், அவரது தம்பிகளும், நானும், நீர் விசாரிக்கும் அனைவரும் நலமாக இருக்கின்றோம். உமது நாடு, உமது அரசு, அந்த அரசின் நிதிக் கருவூலம், உமது படைகள் ஆகியன நலமா? தனிப்பெரும் ஆட்சியாளராக, சைப்பியம், சிபி, சிந்து மற்றும் உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வளமை மிகுந்த நாடுகள் அனைத்தையும் நீதியுடன் ஆட்சி செய்கிறீரா? ஓ! இளவரசரே, உமது பாதங்களைக் கழுவி கொள்ள இந்த நீரைப் பெற்றுக் கொள்ளும். இந்த இருக்கையில் அமரும். உமது படை அணியினரின் காலை உணவுக்காக நான் ஐம்பது விலங்குகளைத் தருகிறேன். இது போக, குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மான்குட்டிகளையும் {Porcine deer = பன்றி போன்ற மான்கள்}, நயங்குமான்களையும், புள்ளி மான்களையும், இரலைகளையும் {கலைமான்களையும்}, எண்காற்புட்களையும் {சரபங்களையும் = சிங்கத்தையே கொல்லவல்ல எட்டுக் கால் பறவைகளையும்}, முயல்களையும், ருருமான்களையும், கரடிகளையும், சம்பரமான்களையும், கவயங்களையும், இன்னும் பல விலங்குகளையும், காட்டுப்பன்றிகளையும், காட்டெருமைகளையும், நான்கு கால் கொண்ட விலங்குகள் பலவற்றையும் உமக்குக் கொடுப்பார்" என்றாள்.
இதைக்கேட்ட ஜெயத்ரதன், “என்னிடம் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்குக் காலை உணவு அளிக்க முன்வந்து, உண்மையில் நீ அதை ஒருவகையில் கொடுத்துவிட்டாய் {By offering to provide our breakfast, thou hast in a manner actually done it.}. இப்போது வா. என் தேரில் பயணித்து, முழுமையான மகிழ்ச்சியை அடைவாயாக. நாடு பறிக்கப்பட்டு, சிறிதளவும் மாற்றமடைய முடியாதப் பேறைப் பெற்று, ஆற்றல்கள் முடங்கி, காட்டில் பரிதாபகரமான நிலையில் வாழும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நீ எதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அறிவுள்ள பெண் ஏழைக் கணவனுடன் இணைந்திருக்கமாட்டாள். அவள் {உன்னைப் போன்ற அறிவுள்ள பெண்} தனது தலைவன் வளமையில் இருக்கும்போது அவனைத் தொடர வேண்டும். ஆனால், கேடுகாலத்தில் அவனைக் கைவிட வேண்டும். பாண்டுவின் மகன்கள், தங்கள் உயர்ந்த நிலையில் இருந்து விழுந்துவிட்டனர். காலத்திற்கு அவர்களது நாட்டைத் தொலைத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் மதிப்புக் கொண்டு, அவர்களது துன்பத்தில் நீ பங்கு கொள்ள வேண்டியதில்லை. எனவே, ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி}, பாண்டுவின் மகன்களைக் கைவிட்டு, எனது மனைவியாகி மகிழ்ச்சியடைந்து, என்னுடன் சிந்து மற்றும் சௌவீர நாடுகளைப் பகிர்ந்து கொள்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} தொடர்ந்தார், “சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை அவ்விடத்தில் இருந்து விலகி, புருவங்களை நெறித்து முகம்சுழிதாள். அவனது வார்த்தைகளைப் பெரிதும் அவமதித்து, அலட்சியம் செய்த அந்த மெல்லிடையாளான கிருஷ்ணை {திரௌபதி}, சிந்து மன்னனிடம் {ஜெயத்ரதனிடம்}, “மீண்டும் அப்படிப் பேசாதே! உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைப் பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாள். தனது கணவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றமற்ற குணம் கொண்ட மங்கை {திரௌபதி}, நீண்ட நேரம் {அவனிடம்} பேசி, அவனை முழுமையாக ஏமாற்றத் தொடங்கினாள்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.