Draupadi kidnapped! | Vana Parva - Section 266 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்தது; ஜெயத்ரதன் திரௌபதியின் மேலாடையைப் பற்றியது; ஜெயத்ரதனைத் தள்ளிவிட்ட திரௌபதி; திரௌபதியை இழுத்துச் சென்று ஜெயத்ரதன் தேரில் ஏற்றியது; தௌமியர் ஜெயத்ரதனை எச்சரித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துருபதன் மகள் {திரௌபதி} இயற்கையாகவே அழகாக இருந்தாலும், கோபம் எழுந்ததால் {மிகவும்} சிவப்பாக இருந்தாள். எரியும் கண்களுடனும், கோபம் கொண்ட புருவங்களுடனும், அவள் சௌவீர ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நிந்தித்தாள். அவள் {திரௌபதி}, “ஓ! மூடனே, இந்திரனுக்கு ஒப்பானவர்களும், கடும் போர்வீரர்களும், கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களிடம் போரிடும்போது கூடக் கலங்காதவர்களுமான அந்தக் கொண்டாடப்படுபவர்களை {பாண்டவர்களை} இத்தகு வார்த்தைகளால் அவமதிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ! சௌவீரா {ஜெயத்ரதா}, கல்வி அறிவு கொண்டு தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் கற்ற மனிதர்களை, அவர்கள் காட்டில் வாழ்ந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் நல்லவர்கள் தவறாகப் பேசுவதில்லை. உன்னைப் போன்ற குறுகிய புத்தி கொண்ட பாதகர்களே அப்படிச் செய்வார்கள். உனது பாதத்திற்கு அடியில் உள்ள குழிக்குள் விழப்போகும் உன்னைக் கைகொடுத்துக் காக்க கூடிய ஒருவனும் இந்த {உனது} க்ஷத்திரயக்கூட்டத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
இமயத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ள யானைக்கூட்டத்தில், மதம் கொண்டு மதநீர் ஒழுகிய நிலையில் மலைச்சிகரத்தைப் போன்று இருக்கும் தலைமை யானையை, கையில் உள்ள குச்சியால் பிரித்து விடலாம் என்பது போல இருக்கிறது, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை வீழ்த்திவிடலாம் என்ற உனது நினைப்பு. சிறுபிள்ளை போன்று அறியாமையில் இருக்கும் நீ, உறங்கிக் கொண்டிருக்கும் சக்திமிக்கச் சிங்கத்தை உதைத்து விழிப்படையச் செய்து அதன் முகத்தில் இருக்கும் முடியைப் பிடித்திழுக்க நினைக்கிறாய். எனினும், பீமசேனரின் கோபத்தைக் கண்டால் நீ ஓடிவிடுவாய். சீற்றமிகு ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனரிடம்} நீ மோதினால், மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும்பலம் வாய்ந்த, பயங்கரமான, முழுதும் வளர்ந்த சீற்றமிகு சிங்கத்தை உதைப்பதற்குச் சமமாகும். இரு அற்புதமான இளைஞர்களான இளம்பாண்டவர்களிடம் {நகுல சகாதேவர்களிடம்} மோதுவது குறித்து நீ பேசுகிறாய். அவர்களுடன் நீ மோதுவது, பிளந்த இரண்டு நாவுகள் கொண்ட, இரண்டு நஞ்சுமிகுந்த கருநாகங்களின் வால்களை வேண்டுமென்றே மிதிப்பதற்கு அது சமமாகும். மூங்கிலும், வாழையும், கோரையும் அழிவதற்காகவே கனி கொடுத்து, மேலும் வளராமல் இருக்கின்றன. தனது அழிவுக்காகவே கருவுறும் நண்டைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்க வீரர்களால் {பாண்டவர்களால்} பாதுகாக்கப்படும் என் மீது உனது கைகளை வைக்கிறாய்.” என்றாள் {திரௌபதி}.
அதற்கு ஜெயத்ரதன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இவையாவையும் நான் அறிவேன். அந்த இளவரசர்களின் பராக்கிரமத்தை நான் நன்கு அறிவேன். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைக் கொண்டு எங்களைப் பயமுறுத்த முடியாது. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பதினேழு சக்திகளையும் {எட்டு கர்மங்களும் [1] ஒன்பது சக்திகளும் [2]}, ஆறு அரச குணங்களையும் [3] கொண்ட உயர்ந்த குலத்திலேயே நாங்கள் பிறந்திருக்கிறோம். எனவே, நாங்கள் பாண்டவர்களைத் தாழ்ந்தவர்களாவே கருதி, அவர்களை குனிந்து பார்க்கிறோம். எனவே, ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, இந்த யானையிலோ, அல்லது தேரிலோ விரைவாக ஏறு, உனது வார்த்தைகளை மட்டுமே கொண்டு எங்களைக் கலங்கடிக்க முடியாது. கர்வமற்றுப் பேசி, சௌவீர மன்னனிடம் {என்னிடம்} கருணையைப் பெற முயற்சி செய்" என்று மறுமொழி கூறினான் {ஜெயத்ரதன்}.
[1] கால்நடை வளர்த்தல், வர்த்தகம், சுங்கம், அணை கட்டுதல், யானை பிடித்தல், சுரங்கமெடுத்தல், கப்பம் வாங்குதல், பாழ்நிலங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன மன்னர்களுக்குப் பொருள் வருவாய்க்கான வழிகள்[2] தலைமைசக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி, தலைமைசித்தி, மந்திரசித்தி, உற்சாகசித்தி, பிரபூதயம், மந்திரோதயம், உத்சஹோதயம் ஆகிய திறமைகள்[3]சமாதானம், போர், அணிவகுப்பு, நிறுத்தல், முரண் விதைப்பு {ஏற்படுத்துதல்}, பாதுகாப்பு தேடுதல் ஆகியன ஒரு மன்னனின் ஆறு செயல்கள் ஆகும் என்று கங்குலி சொல்கிறார்.
அதற்குத் திரௌபதி {ஜெயத்ரதனிடம்}, “நான் சக்திமிக்கவளாக இருப்பினும், என்னை ஏன் சௌவீர மன்னன் {நீ} மிகவும் பலம் குறைந்தவளாக எண்ணுகிறான் {எண்ணுகிறாய்}? வன்முறை மீது கொண்ட பயத்தால் இளவரசனின் முன்னால் என்னை நான் இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன் என்பது நன்கு அறியப்பட்டதே. யாரைப் பாதுகாக்க கிருஷ்ணனும், அர்ஜுனரும் ஒரே தேரில் துரத்திக் கொண்டு வருவார்களோ அவளை {என்னை} இந்திரனாலேயே கடத்திச் செல்ல முடியாது. எதிரிகளைக் கொல்பவரான கிரீடி {அர்ஜுனர்}, என் காரியமாகத் தேரில் வந்தால், உங்கள் தலைவர்கள் இதயங்களில் பயத்தை உண்டாக்கி, கோடை காலத்தில் காய்ந்த புல்லை உட்கொள்ளும் நெருப்பைப் போல அனைத்தையும் எரித்துவிடுவார். யாரும் என்னைத் தீண்டினால், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு போர் செய்யும் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளவரசர்களும், கேகேய குலத்தின் வலிமைமிக்க வில்லாளிகளும் பெரும் உணர்ச்சி பொங்க எனக்காகத் தொடர்ந்து வருவார்கள். {அர்ஜுனரின்} கரத்தின் பலத்தால் காண்டீவத்தின் நாணில் இருந்து புறப்படும் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} பயங்கரமான கணைகள், பெரும் சக்தியுடன், காற்றில் பறந்து வந்து மேகங்களைப் போலக் கர்ஜிக்கும். காண்டீவத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பறப்பது போல அடர்த்தியான கணைமழையைப் பொழியும் அர்ஜுனரை நீ காணும்போது, உனது மூடத்தனத்திற்காக வருந்துவாய். சங்கை ஊதிக்கொண்டு, வில்லின் நாணொலியை எதிரொலிக்கும் கையுறைகளுடன் மீண்டும் மீண்டும் கணைகளால் அவர் {அர்ஜுனர்} உனது மார்பைத் துளைக்கும்போது நீ எப்படி உணர்வாய் என்பதை நினைத்துப்பார். கையில் கதாயுதத்துடன் பீமர் உன்னை நோக்கி வரும்போதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மாத்ரியின் இரண்டு மகன்கள் தங்கள் கோபம் எனும் நஞ்சைக் கக்கும்போதும், வலியை உணரும் நீ, அதற்காக எப்போதும் வருந்த நேரிடும். மனதால் கூட நான் எனது தகுதி வாய்ந்த கணவர்களுக்குப் பொய்மையுடன் {அவர்களை மீறி} நடந்து கொண்டதில்லை. நான் கொண்ட அந்தத் தகுதியால், பிருதையின் {குந்தியின்} மகன்களால் நீ வீழ்த்தப்பட்டு, இழுத்துச் செல்லப்படுவதைக் காணும் இன்பத்தை அடைவேன். குருவீரர்கள் என்னைக் கண்டுபிடித்ததும், தங்களுடன் என்னை மீண்டும் காம்யக வனத்திற்குத் திரும்ப அழைத்து வருவார்கள். அதனால், கொடூரமான நீ, வன்முறையுடன் என்னைச் சிறைப்பிடித்து அச்சுறுத்தமுடியாது. " என்றாள்.
வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், “பிறகு அகன்ற கண்களையுடைய அந்த மங்கை {திரௌபதி}, வன்முறையுடன் தன் மீது கைவைக்கத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்டு, நிந்திக்கும் வகையில், “என்னைத் தொட்டு தீட்டுப்படுத்தாதீர்" என்று சொல்லி, பிறகு, பெரும் அச்சத்துடன், தங்கள் ஆன்ம ஆலோசகரான தௌமியரைக் அழைத்தாள். எனினும், ஜெயத்ரதன் அவளது மேலாடையைப் பற்றினான். ஆனால் அவள் பெரும் ஆவேசத்துடன் அவனைத் தள்ளினாள். அந்த மங்கையால் {திரௌபதியால்} தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேரறுக்கப்பட்ட மரம் போலத் தரையில் விழுந்தான். எனினும், மீண்டும் அவனால் {ஜெயத்ரதனால்} பெரும் வன்முறையுடன் பிடிக்கப்பட்ட அவள் {திரௌபதி} மூச்சுத்திணற ஆரம்பித்தாள். அந்தப் பாவியால் இழுத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி}, தௌமியரின் பாதங்களை வணங்கி, கடைசியாக அவனது {ஜெயத்ரதனது} தேரில் ஏறினாள். பிறகு தௌமியர் ஜெயத்ரதனிடம், “ஓ! ஜெயத்ரதா, க்ஷத்திரயர்களின் பண்டைய வழக்கத்தைக் கைக்கொள்வாயாக. அந்தப் பெரும் வீரர்களை வீழ்த்தாமல் நீ இவளைத் தூக்கிச் செல்லக்கூடாது {இயலாது}. யுதிஷ்டிரனின் தலைமையிலான வீர மிகுந்த பாண்டுவின் மகன்களிடம் நீ மோதுகிறாய். உனது இத்தகு வெறுக்கத்தக்க செயலுக்கான வலிநிறைந்த கனிகளை நீ நிச்சயம் அறுப்பாய்" என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன தௌமியர், ஜெயத்ரதனின் காலாட்படைகளுக்கு மத்தியில் நுழைந்து, கடத்தல்காரனால் தூக்கிச் செல்லப்படும், அந்தப் புகழ்பெற்ற இளவரசியைத் {திரௌபதியைப்} பின்தொடர ஆரம்பித்தார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.