Jayadratha captured! | Vana Parva - Section 269 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ஜெயத்ரதனின் படையினருக்கும், பாண்டவர்களுக்குமிடையில் மூண்ட போர்; பாண்டவர்களின் பராக்கிரமம்; சுரதனை வீழ்த்திய யுதிஷ்டிரன்; கோடிகாக்கியனைக் கொன்ற பீமன்; சௌவீர இளவரசர்கள் அனைவரையும் கொன்ற அர்ஜுனன்; திரௌபதியைவிட்டுவிட்டு ஓடிய ஜெயத்ரதன்; திரௌபதி, தௌமியர், இரட்டையர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு யுதிஷ்டிரன் ஆசிரமம் திரும்புவது; பீமனும் அர்ஜுனனும் ஜெயத்ரதனைத் தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் பிடிபடுவது; அவனைக் கொல்ல வேண்டாம் என பீமனை அர்ஜுனன் வேண்டுவது...
திரௌபதியை விட்டுவிட்டு ஓடும் ஜெயத்ரதன் |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதே வேளையில் சிந்து மன்னன் மற்ற இளவரசர்களுக்குக் கட்டளையிட்டபடி, "நில்லுங்கள், தாக்குங்கள், செல்லுங்கள், விரையுங்கள்" போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். பீமன், அர்ஜுனன், இரட்டைச் சகோதரர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} கூடிய யுதிஷ்டிரன் ஆகியோரைக் கண்ட படைவீரர்கள் போர்க்களத்தில் உரத்த ஒலியை எழுப்பினர். சிபி, சௌவீர, சிந்து குலங்களின் போர்வீரர்கள், உக்கிரமான புலிகளைப் போல இருந்த அந்த வலிமைமிக்க வீரர்களைக் கண்டதும் உற்சாகமிழந்தனர். முழுமையாகச் சைக்கிய இரும்பினால் {உருக்கினால்} ஆனதும், பொன்னால் பொறிக்கப்பட்டதுமான கதாயுதத்தைத் தாங்கி வந்த பீமசேனன், மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் சைந்தவ ஏகாதிபதியை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தான். ஆனால் பலமிக்கத் தேரோட்டிகளுடன் விருகோதரனை {பீமனை} விரைவாகச் சூழ்ந்து கொண்ட கோடிகாக்கியன், இடையில் வந்து அந்தப் போராளிகளைப் பிரித்தான். வலிய கரம் கொண்ட பகை வீரர்களால் எண்ணற்ற ஈட்டிகளும், தண்டங்களும், இரும்புக்கணைகளும் பீமன் மீது வீசப்பட்டாலும், அவன் ஒரு கணம் கூடத் தடுமாறவில்லை. மறுபுறம், அவன் {பீமன்} தனது கதாயுதத்தைக் கொண்டு, பாகனோடு சேர்ந்த ஒரு யானையையும், ஜெயத்ரதனின் தேருக்கு முன்னணியில் போரிட்டுக்கொண்டிருந்த பதினான்கு காலாட்படை வீரர்களையும் கொன்றான்.
சௌவீர மன்னனைச் {ஜெயத்ரதனைச்} சிறைபிடிக்க விரும்பிய அர்ஜுனனும், சிந்து படையின் வாகனத்தில் இருந்து போரிட்டுக்கொண்டிருந்த ஐநூறு {500} வீரமிக்க மலைநாட்டு வீரர்களைக் கொன்றான். அந்த மோதலில், கண் இமைக்கும் நேரத்தில், மன்னன் {யுதிஷ்டிரன்}, சௌவீரத்தின் சிறந்த வீரர்களில் நூற்றுக்கணக்கானோரை கொன்றான். கையில் வாளுடன் தேரில் இருந்து குதித்த நகுலனும், விதைகளைத் தூவுவதைப் போல ஒரு கணத்தில் தன்னிடம் பின்புறமாகப் போரிட்ட வீரர்களின் தலைகளைச் சிதறடித்தான். சகாதேவன் தனது தேரில் இருந்தபடி யானைமேல் இருந்து போரிடும் பல வீரர்களைத் தனது இரும்புக்கணைகளால் அடித்து, மரத்தின் கிளைகளில் இருந்து விழும் பறவைகளைப் போல அவர்களை விழ வைத்தான்.
பின்னர்த் திரிகார்த்தர்களின் மன்னன் {சுரதன்}, கையில் வில்லுடன் தனது பெரும் தேரில் இருந்து இறங்கினான். அவன் {சுரதன்} மன்னனின் நான்கு குதிரைகளைத் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். எதிரி தனக்கு மிக அருகில் வருவதைக் கண்ட குந்தியின் மகனான நீதிமானான யுதிஷ்டிரன், பிறை வடிவ கணை கொண்டு அவனது மார்பைத் துளைத்தான். இப்படி மார்பில் காயம் பட்ட அந்த வீரன் இரத்தம் கக்கியபடி, வேரறுந்த மரம் போலப் பிருதையின் {குந்தியின்} மகனருகே தரையில் விழுந்தான். தனது குதிரைகள் கொல்லப்பட்டதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்திரசேனனோடு தனது தேரில் இருந்து இறங்கி, சகாதேவனின் தேரில் ஏறினான்.
க்ஷேமங்கரன் மற்றும் மகாமுக்ஷன் ஆகிய இரு வீரர்கள் நகுலனைத் தனிமைப்படுத்தி, இரண்டு பக்கங்களில் இருந்தும் கூர்முனை கொண்ட கணைகளை மழையெனப் பொழிந்தார்கள். இருப்பினும் அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, தன் மேல் மழைக்கால மேகங்கள் போல மழையெனக் கணையடித்த அந்த இருவரையும் இரு நீண்ட கணையால் கொல்வதில் வெற்றிக் கண்டான். யானைகளைச் செலுத்துவதில் வல்லவனான திரிகார்த்தர்களின் மன்னனான சுரதன், நகுலனின் தேருக்கு முன்பு வந்து, அந்தத் தேரை யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தான். இதனால் சிறிது அச்சமடைந்த நகுலன், தனது தேரில் இருந்து குதித்து, பாதுகாப்பளிக்கும் சாதகமான ஒரு இடத்தை அடைந்து, கையில் கேடயத்துடனும் வாளுடனும் மலையென அசையாதிருந்தான். அதனால் நகுலனை உடனடியாகக் கொல்ல நினைத்த சுரதன், துதிக்கை உயர்த்தியபடி இருந்த பெரிய மதங்கொண்ட யானையை அவனை {நகுலனை} நோக்கிச் செலுத்தினான். ஆனால் அந்த விலங்கு தன் அருகில் வந்ததும், நகுலன் தனது வாளைக் கொண்டு அதன் தலையில் இருந்து தந்தங்களையும் துதிக்கையையும் அறுத்தான். அந்தக் கவசம் பூண்ட யானை, பயங்கர ஓலத்துடன், தலைகுப்புற தரையில் விழுந்து, அந்த வீழ்ச்சியால் தன் மீது சவாரி செய்தவர்களை நசுக்கியது. இந்தத் துணிகரச் செயலைச் செய்த வீரனான மாத்ரி மகன் {நகுலன்}, பீமசேனனின் தேரில் ஏறிக் கொண்டு சிறிது ஓய்வெடுத்தான்.
மோதலுக்கு விரைந்து வரும் இளவரசன் கோடிகாக்கியனைக் கண்ட பீமன், குதிரைலாடம் போன்ற கணை கொண்டு அவனது தோரோட்டியின் தலையை அறுத்தான். வலிய கரம் கொண்ட தன் எதிரியால் தனது தேரோட்டி கொல்லப்பட்டதை அவ்விளவரசன் {கோடிகாக்கியன்} காணவில்லை. சாரதி இல்லாத குதிரைகளைப் போர்க்களத்தின் அனைத்து திசைகளுக்கும் ஓடியது. சாரதியில்லாத இளவரசன் {கோடிகாக்கியன்} புறமுதுகிட்டதைக் கண்ட அடிப்பவர்களில் முதன்மையான பாண்டு மகன் பீமன், இறகு கொண்ட கணையால் {பிராசாயுதத்தால்} அவனைக் கொன்றான். தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனது கூர்முனை கொண்ட பிறை வடிவ கணைகளால் {அர்த்தச்சந்திர பாணம்} பனிரெண்டு சௌவீர வீரர்களின் விற்களையும், அவர்களது தலைகளையும் அறுத்தான். போர்க்களத்தில் அந்தப் பெரும் வீரர்கள் {அர்ஜுனனின்} கணைகளால், கொல்லப்பட்டதும், இக்ஷவாகு தலைவர்களையும், சிபிகளின் படைகளையும், திரிகார்த்தர்களையும், சைந்தவர்களையும் கொன்றான். மேலும் பலவண்ணக் கொடிகளுடன் இருந்த பல பெரிய யானைகளும், கொடிக்கம்பங்களுடன் கூடிய தேர்களும் அர்ஜுனன் கையால் வீழ்ந்தன.
உடலற்ற தலைகளும், தலையற்ற உடல்களும், முழுப் போர்க்களத்தையும் மூடியபடி கிடந்தன. நாய்கள், நாரைகள், அண்டங்காக்கைகள், காகங்கள், வல்லூறுகள், குள்ளநரிகள், கழுகுகள் ஆகியன அக்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் சதையையும் இரத்தத்தையும் விருந்தாக உண்டன. தனது வீரர்கள் கொல்லப்பட்டதைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் கண்ட போது, பயமடைந்து கிருஷ்ணையை விட்டுவிட்டு ஓட எண்ணினான். அந்தக் குழப்பமான நேரத்தில், அந்தப் பாதகன் {ஜெயத்ரதன்} திரௌபதியை கீழே இறக்கி விட்டு, தான் வந்த அதே காட்டுப்பாதையில் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடினான்.
தனக்கு முன் தௌமியரை நடக்கவிட்டு வரும் திரௌபதியைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவளை மாத்ரியின் மகனான வீரன் சகாதேவனின் தேரில் ஏற்றிக் கொள்ளச் செய்தான். ஜெயத்ரதன் இப்படி ஓடிய போது, அவனைத் தொடர்ந்த ஓடிக்கொண்டிருக்கும் அவனது {ஜெயத்ரதனின்} தொண்டர்களில் ஒவ்வொரு படைவீரனின் பெயரையும் சொல்லி அழைத்த பீமன் தனது இரும்புக் கணைகளால் அவர்களைக் கத்தரிக்கத் தொடங்கினான். ஆனால் அர்ஜுனன், ஜெயத்ரதன் ஓடிவிட்டதைக் கண்டு, சைந்தவனக் கூட்டத்தில் எஞ்சிய சிலரையும் கொல்வதை நிறுத்துமாறு தனது அண்ணக்கு {பீமனுக்கு} வற்புறுத்தினான். அர்ஜுனன், "யாருடைய தவறால் மட்டுமே நாம் இந்தக் கசப்பான துன்பத்தை அனுபவித்தோமோ, அந்த ஜெயத்ரதனை நான் களத்தில் காணவில்லை. முதலில் அவனைக் கண்டுபிடியும். உமது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படட்டும்! இந்தப் படைவீரர்களை நீர் கொல்வதால் என்ன நன்மை விளையப்போகிறது? பயன்றற காரியத்தை நீர் ஏன் செய்கிறீர்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு பெரும் ஞானம் கொண்ட அர்ஜுனனால் அறிவுறுத்தப்பட்ட பீமசேனன், யுதிஷ்டிரனை நோக்கித் திரும்பி, "எதிரி வீரர்கள் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டனர். சிலர் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திரௌபதி, இரட்டைச்சகோதரர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தௌமியர் ஆகியோருடன் வீட்டுக்குத் திரும்பி, நமது ஆசிரமத்தை அடைந்ததும், இளவரசிக்கு ஆறுதல் கூறும்! மூடனான சிந்து மன்னனை {ஜெயத்ரதனை}, அவன் வாழும் வரை விடமாட்டேன். அவன் பாதாள லோகத்தைத் தஞ்சமடைந்திருந்தாலும், இந்திரனின் துணையைக் கொண்டிருந்தாலும் அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்" என்றான் {பீமன்}. அதற்கு யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, (நமது தங்கை) துச்சலையையும், கொண்டாடப்படும் காந்தாரியையும் நினைவுகூர்ந்து, தீயவனாக இருப்பினும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நீ கொல்லக்கூடாது" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். உணர்ச்சித் தூண்டலில் இருந்த அந்த உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட மங்கை {திரௌபதி} கோபம் கலந்த அடக்கத்துடன், தன் இரு கணவர்களான பீமன் மற்றும் அர்ஜுனனிடம், "எனக்கு ஏற்புடையதைச் செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், தீயவனும், ஈனனும், பாவியும், மூடனும், இழிவானவனும் வெறுக்கத்தக்கவனுமான சைந்தவக் குலத்தின் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டும். அடுத்தவன் மனைவியை அபகரிப்பவன், நாட்டைப் பறிப்பவன் ஆகிய எதிரிகள், அவர்களே கருணை கோரினாலும் போர்க்களத்தில் மன்னிக்கப்படக்கூடாது" என்றாள். இவ்வாறு கடிந்து கொள்ளப்பட்ட வீரமிக்க அந்த இரு வீரர்களும் சைந்தவத் தலைவனைத் {ஜெயத்ரதனைத்} தேடிச் சென்றனர்.
கிருஷ்ணையை {திரௌபதியை} தன்னுடன் அழைத்துக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது ஆன்ம ஆலோசகருடன் {தௌமியருடன்} வீடு திரும்பினான். ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், மார்க்கண்டேயர் மற்றும் பிற அந்தணர்களின் முன்னிலையில் துறவிகளுக்கான இருக்கைகள் சிதறிக் கிடப்பதையும், சீடர்கள் {சோகத்துடன்} நிறைந்திருப்பதையும் அவன் {யுதிஷ்டிரன்} கண்டான். அந்த அந்தணர்கள் திரௌபதியைக் குறித்துப் பெரிதும் புலம்பிக்கொண்டிருந்தபோது, பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளோடு கூடி அவர்களோடு சேர்ந்து கொண்டான். சைந்தவனையும் {ஜெயத்திரதனையும்}, சௌவீரக்கூட்டத்தையும் வீழ்த்தி, திரௌபதியை மீட்டுத் திரும்பியிருக்கும் மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட அவர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை அடைந்தனர். மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் அமர்ந்தான். அற்புதமான இளவரசியான கிருஷ்ணை {திரௌபதி}, அந்தச் சகோதரர்கள் இருவருடன் {தன் கணவர்களான நகுலன் மற்றும் சகாதேவனுடன்} ஆசிரமத்திற்குள் நுழைந்தாள்.
அதே வேளையில், பீமனும் அர்ஜுனனும், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தூரம்} தொலைவில்தான் எதிரி இருக்கிறான் என்பதை அறிந்து, அவனை {ஜெயத்ரதனை} அடைவதற்காகக் குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினார்கள். இரண்டு மைல்கள் தொலைவில் இருந்தாலும், பலம்வாய்ந்த அர்ஜுனன், ஜெயத்ரதனின் குதிரையைக் கொன்று ஓர் அற்புதமான செயலை நிகழ்த்தினான். தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு, சிரமங்களுக்கு அஞ்சாமல், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட அம்புகளைக் கொண்டு இந்தக் கடினமான சாதனையை அவன் {அர்ஜுனன்} செய்தான். பிறகு அந்த இரு வீரர்களான பீமனும், அர்ஜுனனும், குதிரைகள் கொல்லப்பட்டதால் மனக்குழப்பமும் அச்சமும் அடைந்திருக்கும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தனர். அவன் {ஜெயத்ரதன்}, தனது குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டு பெரும் துக்கமடைந்தான்.
இத்தகு துணிகரச் செயலைச் செய்த தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} கண்டு, ஓடிவிட எண்ணம் கொண்டு, {தேரில் இருந்து குதித்து} தான் வந்த காட்டுப்பாதையையே {ஜெயத்ரதன்} தொடர்ந்து சென்றான் {ஓடினான்}. பயத்தால் சுறுசுறுப்படைந்த சைந்தவத் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, பின்தொடர்ந்தபடியே, அவனிடம், "ஆண்மையற்ற நீ, பலவந்தமாக ஒரு பெண்ணை அபகரிக்க எப்படித் துணியலாம்? ஓ! இளவரசே {ஜெயத்ரதா} திரும்பு; ஓடுவது உனக்குத் தகுந்ததன்று! எதிரிகளின் மத்தியில் உனது தொண்டர்களை {படை வீரர்களை} விட்டு விட்டு நீ எவ்வாறு இப்படிச் செய்யலாம்?" என்றான். பிருதையின் {குந்தியின்} மகன்களால் இப்படிச் சொல்லப்பட்டாலும் சிந்து நாட்டு ஏகாதிபதி {ஜெயத்ரதன்} ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தேர்ந்தெடுத்தபடி செய்ய விட்ட பலம் கொண்ட பீமன் நொடிப்பொழுதில் அவனை வென்றான். ஆனால் இரக்கம் கொண்ட அர்ஜுனன் அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.