Jayadratha learnt about Pandavas! | Vana Parva - Section 268 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்களைக் கண்ட ஜெயத்ரதன் அஞ்சுவது; திரௌபதியிடம் அவளது கணவர்களைக் குறித்துச் சொல்லுமாறு ஜெயத்ரதன் கேட்பது; திரௌபதி ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி அவர்களது பெயர்களையும் தன்மைகளையும் சொல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பீமசேனன் மற்றும் அர்ஜுனனைக் கண்டு எதிரி க்ஷத்திரியர்கள் ஆத்திரமடைந்து, அந்தக் காட்டில் உரத்த ஒலி எழுப்பினர். குரு குலக் காளைகளின் கொடிக்கம்பங்களைக் கண்ட தீய மன்னன் ஜெயத்ரதன், நம்பிக்கையிழந்தான். பிறகு பிரகாசத்துடன் தனது {ஜெயத்ரதனின்} தேரில் அமர்ந்திருந்த யக்ஞசேனியிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, வந்து கொண்டிருக்கும் அந்த ஐந்து வீரர்களும் உனது கணவர்கள் என நம்புகிறேன். ஓ! அழகான தலைமுடி கொண்டவளே, பாண்டுவின் மகன்களை நீ நன்கு அறிந்தவளாகையால், அவர்கள் பயணிக்கும் தேரைச் சுட்டிக்காட்டி, அவர்களை {பாண்டவர்களைக்} குறித்து ஒருவர் ஒருவராக விவரித்துச் சொல்!” என்றான் {ஜெயத்ரதன்}.
இப்படிச் சொல்லப்பட்ட திரௌபதி, “உனது வாழ்நாள் குறையும்படி இந்த வன்செயலைச் செய்த பிறகு, ஓ! முட்டாளே! இப்போது அந்தப் பெரும் வீரர்களின் பெயர்களை அறிவதால் உனக்கு என்ன பயன்? எனது வீரக் கணவர்கள் வந்துவிட்டார்கள், களத்தில் உள்ள உங்களில் ஒருவரது உயிரும் இப்போது மிஞ்சாது. எனினும் மரணத்தருவாயில் கேட்டுவிட்டாய். இது விதிக்கு இசைவானதாக இருப்பதால், நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். தன் தம்பிகளுடன் கூடிய மன்னர் யுதிஷ்டிரரைக் கண்ட பிறகு, உன் நிமித்தமாகச் சிறு கவலையையோ, அச்சத்தையோ நான் அடையவில்லை.
தலைக்கு மேலே உள்ள கொடுக்கம்பத்தில் நந்தம், உபநந்தம் என்ற நிற்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய இரு ஒலிமிக்க மிருதங்கங்களைக் கொண்ட வீரர், ஓ! சௌவீரத் தலைவா {ஜெயத்ரதா}, தனது செயல்களின் அறநெறிகளைக் குறித்துச் சரியாக அறிந்தவராவார். வெற்றியடைந்த மனிதர்கள் எப்போதும் இவரைத் தொடர்கிறார்கள். சுத்தமான தங்கத்தைப் போன்ற நிறமும், உயர்ந்த மூக்கும், அகன்ற கண்களும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த எனது கணவரை தர்மனின் மகனும், குரு குலத்தின் முதன்மையானவருமான யுதிஷ்டிரர் என்ற பெயரில் மக்கள் அறிவார்கள். மனிதர்களின் இந்த அறம்சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, சரணடைந்தவன் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு உயிரை அளிப்பவராவார். எனவே, ஓ! மூடா! உனது ஆயுதங்களைக் கீழே வீசி, உனது நன்மைக்காகக் குவிந்த கரங்களுடன் அவரிடம் ஓடிச்சென்று உனது பாதுகாப்பை நாடு.
நீண்ட கரங்களைக் கொண்டு, முழுதும் வளர்ந்த ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரத்துடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, நெற்றியைச் சுருக்கி, புருவங்களை ஒன்றிணைத்துத் தேரில் அமர்ந்திருக்கும் அவர் எனது கணவர் விருகோதரராவார் {பீமர்}. பருத்த, வலுவான, உன்னதமான இனத்தைச் சார்ந்த, நன்கு பழகப்படுத்தப்பட்ட பெரும் சக்திகொண்ட குதிரைகளே அந்த வீரரின் {பீமரின்} தேர்களை இழுக்கின்றன. இவரின் சாதனைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே அவர் பீமன் என்ற பெயரால் பூமியில் அறியப்படுகிறார். அவருக்குத் தீங்கிழைத்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். பகைவரை அவர் ஒருபோதும் மறப்பதில்லை. சில போலிக் காரணம் {pretext} கொண்டோ அல்லது வேறு வழியிலோ தனது பழியைத் தீர்த்துக் கொள்வார். பழிவாங்காமல் அவர் அமைதியடைவதில்லை.
வில்லாளிகளில் முதன்மையானவரும், புத்திகூர்மை கொண்டவரும், புகழ்பெற்றவரும், புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரியோரை மதிப்பவரும், யுதிஷ்டிரின் தம்பியும் சீடருமான எனது கணவர் தனஞ்சயர் {அர்ஜுனர்} அதோ இருக்கிறார். காமத்தாலோ, அச்சத்தாலோ, கோபத்தாலோ அறத்தை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. கொடுஞ்செயலை அவர் ஒருபோதும் செய்வதுமில்லை. நெருப்பின் சக்தி கொண்டு, எதிரியைத் தாக்கி அழிப்பவரான அவர் குந்தியின் மகனாவார்.
அறநெறி மற்றும் பொருள் குறித்த அனைத்துக் கேள்விகளை அறிந்தவரும், அஞ்சுபவர்களின் அச்சங்களை விலக்குபவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், இந்த முழு உலகிலும் உள்ள மனிதர்களிலேயே அழகானவராகக் கருதப்படுபவரும், பாண்டுவின் அனைத்து மகன்களாலும் பாதுகாக்கப்படுபவரும், தங்கள் மேல் அவர் கொண்ட பக்தியினால் தங்கள் உயிரை விட உயர்வாக அவர்களால் {மற்ற பாண்டவர்களால்} கருதப்படுபவருமான அந்த இளைஞர் எனது கணவரான நகுலராவார். கை லாவகம் கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், சகாதேவனைத் தனது தம்பியாகக் கொண்டவருமான அவர், தனது கைகளின் திறமையால் வாள் கொண்டு போரிடுபவராவார். தைத்தியர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனின் செயல்திறனைப் போல, போர்க்களத்தில் அவரது செயல்திறனை முட்டாள் மனிதனான நீ இன்று காண்பாய்.
ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவரும், புத்திக்கூர்மையும், ஞானமும் கொண்டவரும், தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கம் உடையவரும், பாண்டவர்களில் இளையவரும் அனைவருக்கும் பிடித்தமானவருமான அந்த வீரர் எனது கணவரான சகாதேவராவார். வீரம், அறிவு, வெஞ்சினம் ஆகியவற்றைக் கொண்ட அவருக்கு நிகரான நுண்ணறிவு கொண்டவரோ, சொல்திறன் கொண்டவரோ ஞானிகளின் மத்தியிலும் கிடையாது. குந்தியால் தன் இன்னுயிரைவிட உயர்வாகக் கருதப்படும் அவர் {சகாதேவர்}, எப்போதும் க்ஷத்திரியக் கடமைகள் குறித்த மனத்தோடேயே இருப்பவர். அறம் மற்றும் அறநெறிகளுக்கு எதிராக எதையும் சொல்வதைவிடத் தனது உயிரைத் தியாகம் செய்வதையோ நெருப்புக்குள் புகுவதையோ சிறப்பென நினைப்பவர் அவர் {சகாதேவர்}.
போர்க்களத்தில் உனது வீரர்களைப் பாண்டுவின் மகன்கள் கொன்ற பிறகு, கடலில் நகைச்சரக்குகளுடன் செல்லும் கப்பல், திமிங்கலத்தின் முதுகில் மோதி சிதறுவதைப் போல உனது படை கலக்கப்படுவதை {சிதறுவதை} நீ காண்பாய். உனது முட்டாள்த்தனத்தால் அலட்சியப்படுத்திய பாண்டு மகன்களின் பராக்கிரமம் குறித்து இப்படியே விளக்கிவிட்டேன். சிறிதும் தீங்குறாமல் அவர்களிடம் தப்பினால், நீ புது வாழ்வை அடைவாய்" என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரர்களைப் போன்ற, பிருதையின் {குந்தியின்} அந்த ஐந்து மகன்களும், கோபத்தால் நிறைந்து, கருணைக்காக மன்றாடும் பீதி நிறைந்த காலாட்படையை மட்டும் விட்டுவிட்டு, தேரோட்டிகளை நோக்கி விரைந்து, அவர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் தாக்கினர். தங்கள் அடர்த்தியான கணை மழையால் அந்தப் பகுதியையே அவர்கள் {பாண்டவர்கள்} இருளாக்கினர்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.