தங்கள் முயற்சி என்னைப் பிரமிக்கச் செய்கிறது. இந்த அத்தியாயத்தில் பீமனை விரிகோதரன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மூலத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம். அது வ்ருகோதரன் (விருகோதரன்) என்று இருக்க வேண்டும் வ்ருகம் என்றால் ஓநாய். அது எவ்வளவு உண்டாலும் வயிறு புடைக்காது. அது போன்ற வயிற்றை உடையவன் என்று பொருள்
அன்புடன்
நந்திதா
**************************************************************
பாராட்டியமைக்கு நன்றி நண்பரே
முழுமஹாபாரதம் முழுமையும் விரிகோதரன் என்றே இட்டிருக்கிறேன். விருகோதரன் என்று இனி மாற்றி விடுகிறேன். ஏன்கனவே செய்த அனைத்துப் பதிவுகள் மற்றும் பகுதிகளும் மாற்ற வேண்டும். முயற்சிக்கிறேன்.
பிழை சுட்டியமைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதுவும் பொருளோடு விளக்கியமைக்கு. இவையெல்லாம் வடமொழி அறியாததால் வரும் பிழைகளாகும். இத்தகு பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.
மீண்டும் நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
**************************************************************
பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்.
தங்கள் பணி மகத்தானது. என்னால் வேறு உதவிகள் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். மேலும் நான் தாழ்ந்த குடியில் பிறந்தவள். சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆவலால் பலரை அணுகினேன்,. கடைசியில் ஒரு மாமனிதர் கற்றுக் கொடுத்தார். நமது பண்பாடும் காவியங்களும் அறிவியலும் பொதிந்துள்ள ஒரு மொழி சமஸ்கிருதம். என் கருத்துப் படி அது தமிழ் நாட்டில் உருவான மொழி என்பதே ஆகும். ஓரளவு தமிழும் கற்றேன். நான் எனது கிராமத்தில் ஒரு சிறு பள்ளி நடத்திவருகிறேன். யாரிடமும் எந்த உதவியும் பெறுவதில்லை. காரணம் பள்ளி நடத்தும் சுதந்திரம் போய் விடும் என்பதே. அங்கு தமிழும் சமஸ்கிருதமும் கற்பித்து வருகிறேன். தங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கும் தங்கள் இல்லத்தரசிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அந்தத் திருத்தத்தைத் தங்களுக்குத் தெரியப் படுத்து முன் என் மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்தது. தனி ஒரு மனிதராக அவர் செய்து வருவதில் 1000ல் ஒரு பங்கு கூட நீ செய்ய வில்லை என்று என் மனம் என்னை மிகவும் வாட்டியது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான் தங்களுக்கு எழுதினேன், இதுவரை வந்த பதிப்புக்களிலெல்லாம் நான் மாற்றிக் கொண்டேன்.
அடுத்த மாதத்திலிருந்து தங்கள் பதிவுகளை எனது பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்குப் போதிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவருடைய பதிவுகளை அவருடைய அனுமதி இல்லாமல் எடுத்தாள்வது எனது வழக்கமில்லை. அப்படிப் போதிக்கும் போது தங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டுத்தான் செய்வேன். அதற்குத் தங்கள் அனுமதி வேண்டி நிற்கிறேன்.
என்றும் அன்புடன்
நந்திதா
**************************************************************
நண்பரே,
உங்கள் மின்னஞ்சல் கண்டு மகிழ்கிறேன்.
//நான் தாழ்ந்த குடியில் பிறந்தவள். சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆவலால் பலரை அணுகினேன்//
நண்பரே நானும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன்தான்.
நண்பரே, சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் உருவானதோ இல்லையோ, ஆனால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானது. மேலும் சமஸ்கிருதம் எந்த இனத்திற்கோ, மொழிக்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ சொந்தமானது அல்ல. அஃது இந்தப் பரந்த உலகத்துக்கே சொந்தமானது. அனைத்து மொழிக்காரர்களையும் இணைக்கும் ஒரு மாபெரும் செயலை அன்றே அது செய்திருக்கிறது. அதுவே பாரதத்தின் பொதுப் பண்பாட்டிற்கு வித்திட்டது என்றும் நான் நம்புகிறேன்.
//அடுத்த மாதத்திலிருந்து தங்கள் பதிவுகளை எனது பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்குப் போதிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவருடைய பதிவுகளை அவருடைய அனுமதி இல்லாமல் எடுத்தாள்வது எனது வழக்கமில்லை. அப்படிப் போதிக்கும் போது தங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டுத்தான் செய்வேன். அதற்குத் தங்கள் அனுமதி வேண்டி நிற்கிறேன்//
நண்பரே! தாராளமாகச் செய்யுங்கள். பயனர்களுக்கு இலவசமாகச் செல்லும்வரை எனது அனுமதி தேவையில்லை. என் பெயரைச் சொல்ல வேண்டியதில்லை. வியாசரின் புகழ்பாடினால் போதும். இப்படிப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை அடுத்தத் தலைமுறைக்குச் சரியான முறையில் எடுத்துச் சென்று ஒப்படைத்தால் போதும்.
//அந்தத் திருத்தத்தைத் தங்களுக்குத் தெரியப் படுத்து முன் என் மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்தது.//
நண்பரே அப்படி நினைக்காதீர்கள். பாரதம் என்பது மிகப்பெரிய படைப்பு, அதைக் குறையில்லாமல் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நானும் அறியாமை கொண்ட மனிதன்தானே. பிழை வரத்தான் செய்யும். அதைத் திருத்தத்தான் வேண்டும். ஆகையால் பிழைகளைச் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்