The boon obtained by Ravana! | Vana Parva - Section 273 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.
அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.
வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.
ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.
மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்" என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்" என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்" என்றான் {பிரம்மன்}”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.
பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.