Manthara called as hunchback! | Vana Parva - Section 274 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னான்.
பிரம்மன் {அக்னியிடம்}, “ஓ! அக்னி, தேவர்களாலோ அசுரர்களாலோ அவனை {ராவணனை} போர்க்களத்தில் வெல்ல முடியாது! அந்நோக்கத்திற்குத் தேவையானதை நான் ஏற்கனவே விதித்துவிட்டேன். உண்மையில் அவனது மரணம் அருகிலிருக்கிறது! எனது தூண்டுதலின் பேரில் நான்கு தலை கொண்ட தெய்வம் அக்காரணத்திற்காகவே அவதரித்துவிட்டான். அடிப்பவர்களில் முதன்மையான விஷ்ணு அந்நோக்கத்தைச் சாதிப்பான்" என்றான் {பிரம்மன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} அவர்களுக்கு மத்தியில் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “தேவர்களுடன் சேர்ந்து நீயும் பூமியில் பிறப்பாயாக! குரங்குகளும், கரடிகளும் விஷ்ணுவின் கூட்டாளிகளாவதற்காக நினைத்த உருவம் கொள்ளக்கூடிய பெரும் பலம் கொண்ட உங்கள் மகன்களாக அவர்களைப் பெறுவீர்களாக" என்று சொன்னான். இதனால், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் விரைவாகக் கூடி தாங்கள் எவ்வாறு பிறக்க வேண்டும் என்பதை ஆலோசித்து, அவரவர்க்கு உரிய தன்மையுடன் பூமியில் பிறந்தார்கள். வரங்களை அருளும் தேவன் {பிரம்மன்}, அவர்கள் முன்னிலையிலேயே துந்துபி என்ற பெயர்கொண்ட கந்தர்வியை அழைத்து, “நோக்கம் நிறைவேற நீ அங்குச் செல்!” என்றான். பாட்டனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துந்துபி, மனிதர்களின் உலகில் கூன்முதுகு கொண்ட மந்தரையாகப் பிறந்தாள்.
சக்ரனோடு {இந்திரனோடு} கூடிய முக்கியமான அனைத்து தேவர்களும் குரங்குகள், கரடிகள் ஆகியவற்றில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தங்கள் வாரிசுகளைப் பெற்றார்கள். அந்த மகன்களும் பலத்திலும் புகழிலும் தங்கள் தந்தைகளுக்கு ஈடாக இருந்தனர். அவர்கள் மலைச்சிகரங்களைப் பிளக்கவல்லவர்களாக இருந்தார்கள். கற்களும் ஆச்சா மரங்களும் {சால மரங்களும்}, பனை மரங்களும் {தால மரங்களும்} அவர்களது ஆயுதங்களாக இருந்தன. அவர்களது உடல்கள் உறுதி மிக்கதாவும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தன. அவர்கள் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். போரில் வல்லவர்களாகவும், விருப்பத்திற்கேற்ற ஆற்றலைத் திரட்டும் திறன் அவர்களுக்கு இருந்தது. பலத்தால் அவர்கள் ஆயிரம் யானைகளுக்கு நிகராக இருந்தார்கள். வேகத்தால் அவர்கள் காற்றுக்கு ஈடாக இருந்தனர். சிலர் தாங்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் வசித்தார்கள், அதே வேளை மேலும் சிலர் கானகத்தில் வாழ்ந்தார்கள். அண்டத்தைப் படைத்த போற்றுதலுக்குரியவன் {பிரம்மன்}, இவ்வனைத்தையும் விதித்து, மந்தரை {கூனி} என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உரைத்தான். மனோவேகம் கொண்ட மந்தரை, அவனது வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, இங்கும் அங்கும் சென்று பூசல்களைத் தூண்டுவதில் ஈடுபட்டாள்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.