Rama went to forest! | Vana Parva - Section 275 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்...
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பக்திமானான மன்னன் தசரதன், எப்போதும் பெரியவர்களைக் கவனிப்பவனாகவும், அறச்சடங்குகள் செய்வதில் சிரத்தையுள்ளவனாகவும் இருந்தான். அவன் {தசரதன்} தனக்குப் பிறந்த மகன்களைக் குறித்துப் பெரும் மனநிறைவு கொண்டான். அவனது மகன்கள் பலத்திலும் வேதங்களிலும், அதன் புதிர்களிலும், ஆயுத அறிவியலிலும் படிப்படியாக வளர்ந்தனர். தங்கள் பிரம்மச்சரிய நோன்பை நிறைவேற்றிய அந்த இளவரசர்களுக்குத் திருமணமும் நடந்தது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியும் உயர்ந்த மனநிறைவையும் கொண்டான். அவர்கள் அனைவரிலும் மூத்தவனான புத்திகூர்மை கொண்ட ராமன், தனது அழகான நடத்தையால் மக்களைப் பெரும் மனநிறைவு கொள்ளச் செய்து, தன் தந்தைக்குப் பிடித்தமானவனாக ஆனான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தன் வயது முதிர்வை கவனத்தில் கொண்ட அந்த ஞானமுள்ள மன்னன் {தசரதன்}, தனது அமைச்சர்களிடமும், ஆன்ம ஆலோசகரிடமும் {வசிஷ்டரிடமும்}, ராமனைத் தன் பேரரசின் பிரதிநிதியாக {பட்டத்து இளவரசனாக} நியமிக்க ஆலோசனை செய்தான். அந்தப் பெரும் அமைச்சர்கள் அனைவரும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றனர். ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், கண்கள் சிவந்தவனும், தசை பொருந்திய கரங்கள் கொண்டவனுமான தன் மகனைக் {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் பெரிதும் மனம் நிறைந்தான் . அவனது {ராமனின்} நடை காட்டு யானையைப் போல இருந்தது. அவன் {ராமன்} நீண்ட கரங்களும், உயர்ந்த தோள்களும், சுருண்ட கரிய தலைமுடியும் கொண்டிருந்தான். வீரனாகவும். பிரகாசம் கொண்டவனாகவும், போர்க்களத்தில் இந்திரனுக்கு எந்தவிதத்திலும் தாழாதவனாகவும் அவன் {ராமன்} இருந்தான். புனித ரித்துகள் அனைத்தையும் அறிந்த அவன் {ராமன்}, ஞானத்தில் பிருஹஸ்பதிக்கு இணையானவனாக இருந்தான். அனைத்து மக்களின் அன்புக்கு ஒரு பொருளாக இருந்த அவன் {ராமன்}, அனைத்து அறிவியலிலும் திறன்வாய்ந்தவனாக இருந்தான். புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவனைக் கண்ட அவனது எதிரிகளே கூட அவனைக் கண்டதும் அவனிடம் {ராமனிடம்} மனநிறைவு கொண்டார்கள். தீயவர்களுக்குப் பயங்கரனாகவும், அறம்சார்ந்தவர்களைப் பாதுகாப்பவனாகவும், அவன் {ராமன்} இருந்தான். புத்திகூர்மையும், கலங்கடிக்கப்பட முடியாதவனாகவும் இருந்த அவன் {ராமன்}, அனைவரையும் வெல்பவனாகவும், எவ்வழியிலும் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான்.
ஓ! குருக்களின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான தனது மகனை {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் மிகவும் மகிழ்ந்தான். ராமனின் நற்பண்புகளை நினைத்துப் பார்த்த சக்திமிக்கவனும் பலமிக்கவனுமான மன்னன் {தசரதன்}, மகிழ்ச்சியோடு தனது குடும்பப் புரோகிதரிடம் {வசிஷ்டரிடம்}, “ஓ! அந்தணரே, நீர் அருளப்பட்டிரும். இன்று இரவு பூச நட்சத்திரம், வெகு மங்களமான சேர்க்கையைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்துப் பொருட்களும் சேகரிக்கப்படட்டும், ராமனும் அழைக்கப்படட்டும். இந்தப் பூச நட்சத்திரம் நாளை வரை நீடிக்கிறது. எனவே, ராமன் எனது குடிமக்களின் பட்டத்து இளவரசனாக என்னாலும், எனது அமைச்சர்களாலும் நியமிக்கப்பட வேண்டும்" என்றான்.
அதே வேளையில், (கைகேயியின் பணிப்பெண்ணான) மந்தரை, மன்னனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, தனது தலைவியிடம் {கைகேயி} சென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாள். அவள் {மந்தரை}, “ஓ! கைகேயி, உனது பெரும் தீயூழை {துரதிர்ஷ்டத்தை} இந்நாளில் மன்னர் {தசரதர்} பிரகடனம் செய்திருக்கிறார்! ஓ! பேறிலியே {துரதிர்ஷ்டசாலியே}, கோபம் மிகுந்த கரும்பாம்பு மறைந்திருந்து உன்னைக் கடிக்கிறது. தன் மகன் அரியணையில் நிறுவப்பட இருப்பதால், உண்மையில் கௌசல்யையே பேறு பெற்றவளாவாள். உன் மகன் {பரதன்} நாட்டை அடையாத போது, உனக்குச் செழிப்பு எங்கே இருக்கும்?” என்று கேட்டாள்.
தன் பணிப்பெண்ணின் {மந்தரையின்} வார்த்தைகளைக் கேட்ட, அழகிய கொடியிடை கொண்ட அந்தக் கைகேயி, தன் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுகொண்டு, தனது கணவனைத் தனிமையில் நாடினாள். மகிழ்ச்சியான இதயத்துடன், இனிமையாகப் புன்னகைத்து, அனைத்து பசப்புநயமான காதல் வார்த்தைகளுடன் சேர்த்து, “ஓ! மன்னா {தரசரதரே}, நீர் என்றும் உமது உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பீர் {என்று நம்புகிறேன்}. முன்பே நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தீர். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்றும். வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்படும் பாவத்தில் இருந்து உம்மைக் காத்துக் கொள்ளும்!” என்று சொன்னாள். அதற்கு மன்னன் {தசரதன்-கைகேயியிடம்}, “நீ என்ன விரும்பினாலும் கேள், நான் உனக்கு அவ்வரத்தைத் தருவேன். கொல்லத்தகாத எந்த மனிதன் இன்று கொல்லப்பட வேண்டும்? கொல்லத்தகுந்த எவன் இன்று விடுதலை பெற வேண்டும்? யாருக்கு இன்று நான் செல்வம் அளிக்க வேண்டும்? யாருடைய செல்வத்தை இன்று பறிமுதல் செய்ய வேண்டும்? அந்தணர்களின் உடைமைகளைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செல்வமானாலும், அது எனதே! நான் இந்த உலகத்தில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் மன்னனும், நால்வகை மனிதர்களின் பாதுகாவலனுமாவேன்! ஓ! அருளப்பட்ட மங்கையே {கைகேயி}, எந்தப் பொருளின் மீது உன் இதயம் நிலைத்திருந்தாலும், அதை விரைவாக என்னிடம் சொல்!” என்று கேட்டான்
மன்னனின் {தசரதனின்} வார்த்தைகளைக் கேட்டு, அவன் மீது தான் கொண்ட ஆளுமையை அறிந்து, அவன் கொடுத்திருந்த வாக்குறுதியில், அவனை உறுதி கொள்ள வைக்க முயன்று, அவள் {கைகேயி} அவனிடம் {தசரதனிடம்}, ராமனுக்காக நீர் வடிவமைத்த பதவியேற்பைப் பெறுபவனாகப் பரதன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சடாமுடி தரித்து, மரவுரியும், மான்தோலும் அணிந்து, தண்டகவனத்தில் பதினான்கு {14} வருடங்களுக்கு ராமன் வனவாசம் செய்யட்டும்" என்றாள். ஏற்கத்தகாத இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {தசரதன்}, ஓ! பாரதக் குல தலைவா {யுதிஷ்டிரா}, மிகவும் துன்புற்றுப் பேச்சற்றவனானான்!
ஆனால் வலிமையும் நல்லொழுக்கமும் கொண்ட ராமன், {கைகேயியால்} தன் தந்தை இப்படி வேண்டிக்கொள்ளப்பட்டதை அறிந்து, தன் தந்தை கொடுத்த உறுதிமொழி களங்கமடையாமல் இருக்கக் காட்டுக்குச் சென்றான். {யுதிஷ்டிரா} நீ அருளப்பட்டிரு, வில்லாளிகளில் முதன்மையான {தம்பி} லட்சுமணனும், விதேகநாட்டு இளவரசியும், ஜனகனின் மகளும், அவனது மனைவியுமான சீதையும் அவனைப் {ராமனைப்} பின்தொடர்ந்தார்கள். ராமன் காட்டுக்குச் சென்றதும், காலத்தின் நிலைத்த விதிக்குக் கட்டுப்பட்டு மன்னன் தசரதன் தனது உடலைத் துறந்தான். ராமன் அருகில் இல்லாததையும், மன்னன் {தசரதன்} இறந்துவிட்டதையும் அறிந்த கைகேயி, தன் முன்னே பரதனை அழைத்து வரச் செய்து, அவனிடம் {பரதனிடம்} “தசரதர் சொர்க்கம் சென்றுவிட்டார். ராமனும் லட்சுமணனும் காட்டில் இருக்கின்றனர்! குந்தகம் விளைவிக்க எந்தப் பகைவரும் அற்ற இந்த அகன்ற அரசை {நாட்டை} நீ எடுத்துக் கொள்" என்றாள் {கைகேயி}.
நல்லொழுக்கமுடைய பரதன் அவளுக்கு {கைகேயிக்கு} மறுமொழியாக, “செல்வத்தில் மட்டுமே மோகம் கொண்டு, உன் கணவரைக் கொன்று, குடும்பத்தை அடியோடு அழித்து, தீச்செயலைச் செய்தாய்! ஓ! எம்குலத்தில் சபிக்கப்பட்டவளே, ஓ தாயே, நீ என் தலையில் புகழ்க்கேட்டைச் சுமத்தி, உனது இந்த நோக்கத்தை அடைந்தாய்" என்றான். இப்படிச் சொன்ன அந்த இளவரசன் {பரதன்} உரக்க அழுதான். அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரின் முன்பும் தன் களங்கமின்மையை மெய்ப்பித்து நிறுவி, ராமனைத் திரும்ப அழைக்க விரும்பி, அவனைத் {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றான். பிறகு, வரிசையாக உள்ள தனது வாகனங்களில், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை ஏற்றி, சத்ருக்னனுடன் கனத்த இதயத்தோடு முன்னேறினான்.
ராமனைத் திரும்ப அழைக்க விரும்பிய அவன் {பரதன்}, வசிஷ்டர், வாமதேவர் மற்றும் பிற ஆயிரக்கணக்கான அந்தணர்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களின் மக்கள் ஆகியோருடன் சென்றான். பிறகு அவன் {பரதன்}, கையில் வில்லுடனும், துறவிகளின் ஆபரணங்கள் பூண்டும் சித்திரகூட மலைகளில் வாழ்ந்து வந்த ராமனை, லட்சுமணனுடன் சேர்ந்திருக்கக் கண்டான். எனினும், தந்தையின் {தசரதனின்} வார்த்தைகளுக்கிணங்க செயல்படத் தீர்மானித்திருந்த ராமன், பரதனை திருப்பி அனுப்பினான். இப்படித் திரும்பிய பரதன், தன் அண்ணனின் {ராமனின்} மரக்காலணிகளைத் {பாதுகைகளைத்} தன் முன்பு வைத்து, நந்திகிராமத்தில் இருந்து ஆட்சி செய்தான்.
அயோத்தியின் மக்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அஞ்சிய அவன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமம் இருக்கும் பெருங்காட்டுக்குள் நுழைந்தான். சரபங்கருக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தி, தண்டகக் காட்டுக்குள் நுழைந்த அவன் {ராமன்}, அழகிய கோதாவரி ஆற்றங்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே வாழ்ந்து கொண்டிருந்த போது, சூர்ப்பனகையின் காரணமாக, ஜனஸ்தானத்தில் வசித்த கரனிடம் அவன் {ராமன்} பகைமை கொள்ள நேரிட்டது. துறவிகளைப் பாதுகாப்பதற்காக, அந்த ரகு குலத்தின் நல்லொழுக்கம் கொண்ட வழித்தோன்றல் {ராமன்}, பூமியில் இருந்த பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். கரன், தூஷணன் என்ற பெரும்பலமிக்க ராட்சசர்களைக் கொன்ற, ஞானமிக்க ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, அந்தப் புனிதமான காட்டை மீண்டும் ஆபத்தற்றதாக்கினான்.
அந்த ராட்சசர்கள் கொல்லப்பட்ட பிறகு, மூக்கும், உதடுகளும் அறுபட்டிருந்த சூர்ப்பனகை, தனது அண்ணனின் {ராவணனின்} வசிப்பிடமான இலங்கைக்குச் சென்றாள். துன்பத்தால் உணர்வற்று, முகத்தில் காய்ந்த ரத்தக்கறையுடன் ராவணன் முன்பு சென்ற அந்த ராட்சசப் பெண் {சூர்ப்பனகை}, அவனது {ராவணனின்} காலில் விழுந்தாள். இப்படிக் கடும் சேதத்திற்குள்ளாகியிருக்கும் அவளை {சூர்ப்பனகையைக்} கண்ட ராவணன் கோபத்தால், பற்களைக் {நறநறவெனக்} கடித்து, தனது இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு தன் அமைச்சர்களை அனுப்பிவிட்டு, அவளிடம் {சூர்ப்பனகையிடம்} தனிமையில், “அருளப்பட்ட தங்கையே {சூர்ப்பனகையே}, என்னை மறந்து, என்னை அவமதிக்கும்படி, உனக்கு இப்படிச் செய்தவன் எவன்? கூரிய ஈட்டியைத் தனது உடலில் தேய்த்துக் கொள்பவன் எவன்? தலைக்கருகே நெருப்பை வைத்துவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் தூங்குபவன் எவன்? பழியுணர்வும் கடும்நஞ்சும் கொண்ட பாம்பை மிதித்தவன் எவன்? பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் வாய்க்குள் கையைத் திணித்துக் கொண்டு நிற்பவன் உண்மையில் எந்த மனிதன்?” என்று கேட்டான்.
பிறகு, நெருப்பில் இருக்கும் மரங்களின் துவாரங்களில் இருந்து வெளிப்படும் சுடர்களைப் போல, அவனது உடலில் இருந்து கோபம் எனும் சுடர் வெடித்தது. அவனது தங்கை {சூர்ப்பனகை}, ராமனின் பராக்கிரமத்தைக் குறித்தும், கரன் மற்றும் தூஷணனைத் தலைமையாகக் கொண்ட ராட்சசர்களின் தோல்வி குறித்தும் சொன்னாள். தன் உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், விதியால் உந்தப்பட்டு, ராமனைக் கொல்வதற்காக மாரீசனை நினைவுகூர்ந்தான். தான் பின்பற்ற வேண்டிய வழியைத் {திட்டத்தைத்} தீர்மானித்து, தனது தலைநகரை ஆள ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் தங்கைக்கு {சூர்ப்பனகைக்கு} ஆறுதலளித்து, ஒரு வான்வழிப் பயணத்தை மேற்கொண்டான். திரிகூடம் மற்றும் கால மலைகளைத் தாண்டிய அவன், மகரங்களின் வசிப்பிடமான ஆழம்நிறைந்த நீரின் அகன்ற கொள்கலனைக் {கடலைக்} கண்டான். பிறகு அந்தக் கடலைக் கடந்த பத்து தலை ராவணன், திரிசூலம் ஏந்திய சிறப்புமிக்கத் தேவனுக்கு {சிவனுக்குப்} பிடித்த ஓய்விடமான கோகர்ணத்தை அடைந்தான். அங்கே, ராமன் மீது கொண்ட பயத்தின் காரணமாகத் துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த தனது பழைய நண்பனான மாரீசனை ராவணன் கண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.