I saw Sita! | Vana Parva - Section 280 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
கோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது...
மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.
பிறகு அறம்சார்ந்த ராமன், சீதை சிறைபிடிக்கப்பட்டு ராட்சசனின் வசிப்பிடத்தில் இருப்பதை நினைத்து மனச்சோர்வடைந்து, வீரனான லட்சுமணனிடம் காலையில், "லட்சுமணா போ. ஓ! ரகு குலத்தை நிலைநிறுத்துபவனே {லட்சுமணா}, சொந்த நலன்களை மட்டுமே நன்கு புரிந்து கொள்பவனும், இப்போது சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனும், என்னால் அரியணையில் அமர்த்தப்பட்டவனும், தன் குலத்தின் இழிந்த மூடனும், {கொண்டை முசுறுகள்}, குரங்குகள், கரடிகள் ஆகியற்றால் முழு மனதுடன் நம்பப்படுபவனுமான நன்றிமறந்த அந்தக் குரங்குகள் மன்னனைத் {சுக்ரீவனை} தேடி கிஷ்கிந்தைக்குச் செல். ஓ! லட்சுமணா, துயரத்தில் மூழ்கியிருக்கும் என்னை அந்த இழிந்தவன் மறந்துவிட்டான். அதனால்தான், அந்தக் குரங்குகளில் இழிந்தவன் {சுக்ரீவன்} நன்றி மறந்திருக்கிறான் என்று கருதுகிறேன். மந்த புத்தியினால், தனக்கு இத்தகு சேவை செய்தவனை {என்னை} அவமதிக்கும் வகையில், தான் ஏற்ற உறுதியைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறான் என நினைக்கிறேன். மந்தமாக, புலனின்பங்களில் அவன் உருண்டு கொண்டிருப்பதை நீ கண்டால், அனைத்து உயிர்களின் பொது இலக்குக்கு {யமலோகத்துக்கு}, வாலி சென்ற பாதையில் நீ அவனை {சுக்ரீவனை} அனுப்பி வைக்க வேண்டும்! மறுபுறம் அந்தக் குரங்குகளில் முதன்மையானவன் {சுக்ரீவன்}, நம் காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானானால், ஓ! காகுஸ்தன் வழித்தோன்றலே {லட்சுமணா}, நீ அவனை {சுக்ரீவனை} என்னிடம் அழைத்து வா! விரைந்து செல். தாமதிக்காதே!” என்றான் {ராமன்}.
மூத்தோர் நலனில் அக்கறையிலும் அவர்களின் கொடுக்கும் உத்தரவுகளிலும் எப்போதும் கவனமாக இருப்பவனான லட்சுமணன் தனது அண்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், கைகளில் நாணுடன் கூடிய அழகிய வில்லுடனும், கணைகளுடனும் கிளம்பிச் சென்றான். கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, யாராலும் தடுக்கப்படாமல் அந்நகருக்குள்ளே நுழைந்தான். அவன் {லட்சுமணன்} கோபமாக இருப்பதை அறிந்த குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அவனை வரவேற்பதற்காக முன் சென்றான். குரங்குகள் மன்னனான சுக்ரீவன் தனது மனைவியுடனும், எளிய இதயத்துடனும், மகிழ்ச்சியுடனும், உரிய மரியாதைகள் செய்து அவனை {லட்சுமணனை} வரவேற்றான். அந்த அச்சமற்ற சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமன் சொன்னதை அவனிடம் {சுக்ரீவனிடம்} சொன்னான். ஓ! பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்தையும் விவரமாகக் கேட்ட குரங்குகள் மன்னன் சுக்ரீவன், தனது மனைவியுடனும், பணியாட்களுடனும் கரங்கள் கூப்பி, மனிதர்களில் களிறான லட்சுமணனிடம் மகிழ்ச்சியாக, “ஓ! லட்சுமணா, நான் தீயவனோ, நன்றிகெட்டவனோ, அறமற்றவனோ கிடையாது! சீதை சிறைசெய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிய நான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கேள்! விடாமுயற்சி கொண்ட குரங்குகளை நான் அனைத்து திசையிலும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறேன். ஓ! வீரா {லட்சுமணா}, காடுகள், மலைகள், கடல்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டணங்கள், சுரங்கங்கள் நிறைந்த முழு உலகத்தையும் அவர்கள் தேடுவார்கள். ஒரு மாதம் முடிய இன்னும் ஐந்து இரவுகளே இருக்கின்றன. பிறகு, ராமனோடு சேர்ந்த நீ பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பாய்!” என்றான்.
மதுவனத்தைச் சூறையாடும் குரங்குகள் |
புத்திக்கூர்மையுள்ள குரங்குகள் மன்னனால் {சுக்ரீவனால்} இப்படிச் சொல்லப்பட்ட, உயர் ஆன்ம {மகாத்மாவான} லட்சுமணன் அமைதியடைந்து, பதிலுக்குச் சுக்ரீவனை வழிபட்டான். பிறகு சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு, மால்யவாத மலையின் மார்பில் இருந்த ராமனிடம் திரும்பினான். அவனை {ராமனை} அணுகிய லட்சுமணன், தங்கள் காரியத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பவை குறித்துத் தெரிவித்தான். விரைவில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளைக் கவனமாகத் தேடிப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான குரங்கு தலைவர்கள், திரும்பத் தொடங்கினார்கள். ஆனால் தெற்கே சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை. ஏற்கனவே திரும்பி வந்தவர்கள், தாங்கள் கடல்களை இடைக்கச்சையாக அணிந்த முழு உலகத்தையும் தேடியும் தங்களால் விதேக இளவரசியையோ {சீதையையோ}, ராவணனையோ காண முடியவில்லை என்று சொன்னார்கள். இதனால் காகுஸ்தன் குல வழித்தோன்றல் {ராமன்} இதயம் தாக்கப்பட்டாலும், தெற்கே சென்ற பெரும் குரங்குகளின் மீது கொண்ட நம்பிக்கையால் (சீதையைக் குறித்த செய்திகளை அறிவோம் என்ற நம்பிக்கையால்) உயிரை விடாதிருந்தான்.
இரண்டு மாதங்கள் கழிந்ததும், சுக்ரீவனின் முன்னிலைக்கு விரைந்து வந்த பல குரங்குகள், “ஓ! மன்னா {சுக்ரீவா}, குரங்குகளில் முதன்மையானவர்களான பவனனின் மகனும், வாலியின் மகனான அங்கதனும், தென்திசைக்கு நீர் அனுப்பி வைத்த இன்னும் பிற பெரும் குரங்குகளும் திரும்பிவிட்டார்கள். அவர்கள், வாலியின் பாதுகாவலர்களாலும், உம்மாலும் எப்போதும் காக்கப்பட்டு, மதுவனம் என்ற பெயரால் அழைக்கப்படும் அற்புதமான பெரும் பழத்தோட்டத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பணியாட்களே இதைப் போலச் செயல்பட முடியும் என்பதால், தங்கள் பங்குக்கு இவ்வளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் அவர்களது செயல்பாட்டைக் கேட்ட சுக்ரீவன் அவர்களது பணி வெற்றியடைந்திருக்கிறது என்பதை அனுமானித்தான். குரங்குகளில் புத்திசாலியும் முதன்மையானவனுமான அவன் {சுக்ரீவன்}, தனது சந்தேகங்களை ராமனுக்குத் தெரிவித்தான். இதனால், மிதிலையின் இளவரசி {சீதை} காணப்பட்டாள் என்று ராமனும் ஊகித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனுமானின் நடைபாணியையும், அவனது முகத்தின் நிறத்தையும் கண்ட ராமன், ஹனுமான் உண்மையில் சீதையைக் கண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டான். பிறகு ஹனுமானின் தலைமையில் வெற்றி பெற்ற குரங்குகள் ராமனையும், லட்சுமணனையும், சுக்ரீவனையும் முறைப்படி வணங்கினார்கள். பிறகு தனது வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்ட ராமன் அக்குரங்குகளிடம், “நீங்கள் வெற்றியடைந்தீர்களா? நீங்கள் என்னை உயிரடையச் செய்வீர்களா? போர்க்களத்தில் எனது எதிரியைக் கொன்று ஜனகனின் மகளை {சீதையை} மீட்டு, அயோத்தி திரும்பி நான் மீண்டும் ஆட்சி செய்யச் செய்வீர்களா? விதேக இளவரசியை {சீதையை} மீட்காமல், எதிரியைப் போர்க்களத்தில் கொல்லாமல், மனைவியையும் மதிப்பையும் இழந்து நான் உயிர்வாழத் துணிய மாட்டேன்" என்றான்.
ராமனால் இப்படிச் சொல்லப்பட்ட பவனனின் மகன் {ஹனுமான்}, அவனிடம் {ராமனிடம்}, “ஓ! ராமா, நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; கண்டேன் ஜனகனின் மகளை {கண்டேன் சீதையை}. மலைகள், காடுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட தென் பகுதியை சில காலம் தேடிக் களைப்படைந்தோம். பிறகு ஒரு பெரும் குகையைக் கண்டோம். அதைக் கண்டபிறகு, பல யோஜனைகள் நீண்டிருந்த அந்தக் குகைக்குள் நுழைந்தோம். அது இருளடைந்து, மரங்கள் அடர்ந்து, புழுக்களில் தொல்லை நிறைந்து இருந்தது. அந்தப் பெரும் வழியில் நீண்ட தூரம் சென்ற பிறகு, நாங்கள் சூரியனின் வெளிச்சத்தையும், அழகிய அரண்மனை ஒன்றையும் கண்டோம். ஓ! ராகவா {ராமா}, அது தைத்தியன் மயனுடைய வசிப்பிடமாகும். அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் துறவியான பிரபாவதியைக் கண்டோம். அவள் எங்களுக்கு உணவும், பலவகைப்பட்ட பானங்களையும் கொடுத்தாள். இதனால் உற்சாகமடைந்து, எங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, அவள் காட்டிய வழியில் மேலும் தொடர்ந்து சென்றோம்.
கடைசியாக நாங்கள் அந்தக் குகையை விட்டு வெளிய வந்து, உப்புக் கடலையும், அதன் கரைகளில் இருந்த சஹ்யம், மலயம், பெரும் தர்துரம் என்ற மலைகளையும் கண்டோம். பிறகு மலய மலையில் ஏறி அகன்ற கடலைக் கண்டோம் [1]. அதைக் கண்ட நாங்கள் மனதால் மிகவும் துயரப்பட்டோம். மனச் சோர்வடைந்து, வலியால் தாக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாக, உயிருடன் திரும்புவதில் ஆசையற்றவர்களானோம். திமிங்கலங்கள், முதலைகள், பிற நீர்வாழ்விலங்குகள் நிறைந்து பல நூற்றுக்கணக்கான யோஜனைகள் பரந்திருக்கும் பெரும் கடலைக் கண்களால் கண்ட நாங்கள் வருத்தமடைந்து ஆர்வமற்றுப் போனோம். பிறகு நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்து, பட்டினி கிடந்துச் சாவது என்று தீர்மானித்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் கழுகான ஜடாயு குறித்துப் பேச நேர்ந்தது. அப்போதுதான், பயங்கர உருவமும், காணும் அனைத்து இதயத்துக்குப் பயங்கரத்தை உணரச் செய்பவனும், வினதையின் இரண்டாவது மகனைப் போல [2] இருந்தவனும், மலை போலப் பெரிதாக இருந்தவனுமான ஒரு பறவையானவனை நாங்கள் கண்டோம்.
[1] மூலத்தில் சொல்லப்பட்டுள்ள வருணனின் வசிப்பிடம் இது என்கிறார் கங்குலி
[2] கருடனைப் போல என்கிறார் கங்குலி.
திகைப்பூட்டும் விதத்தில் எங்களை விழுங்க வந்த அவன், “என் தம்பி ஜடாயுவைக் குறித்து இப்படிப் பேசுபவர்களான நீங்கள் யார்? நான் அவனது அண்ணன், என் பெயர் சம்பாதி, நான் பறவைகளின் மன்னனாவேன். ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச எண்ணிய நாங்கள் இருவரும் சூரியனை நோக்கி முன்னேறினோம். எனது சிறகுகள் எரிந்து போயின. ஆனால் ஜடாயுவுக்கு எரியவில்லை. என் ஆருயிர் தம்பியும், கழுகுகளின் மன்னனுமான ஜடாயுவை நான் கடைசியாகக் கண்டது அப்போதுதான். எனது சிறகுகள் எரிந்ததும், நான் இப்போது இருக்கும் இதே பெருமலையில்தான் விழுந்தேன்" என்றான் {சம்பாதி}. அவன் பேச்சை நிறுத்தியதும், நாங்கள் அவனது தம்பியின் இறப்பைக் குறித்துச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உனக்கு நேர்ந்த பெரும் தீங்கையும் சொன்னோம். ஓ! மன்னா {ராமா}, இந்தத் துன்பகரமான செய்தியைக் கேட்ட பலமிக்கச் சம்பாதி பெரும் துன்பமடைந்து, எங்களிடம், “யாரிந்த ராமன்? சீதை ஏன் கடத்தப்பட்டாள்? ஜடாயு எப்படிக் கொல்லப்பட்டான்? குரங்குகளின் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று மீண்டும் விசாரித்தான்.
பிறகு நாங்கள் உனக்கு ஏற்பட்ட துயர் அனைத்தையும் சொல்லி, அதன் காரணமாக, பட்டினி கிடந்து சாகப் போகும் எங்கள் நோன்பு குறித்தும் சொன்னோம். பிறகு அந்தப் பறவைகளின் மன்னன் {சம்பாதி} (எங்கள் நோன்பைக் கைவிட வலியுறுத்தி), “உண்மையில், ராவணனை நான் அறிவேன். இலங்கையே அவனது தலைநகரம். திரிகூட மலைகளின் பள்ளத்தாக்கில், கடலின் மறுபுறத்தில் நான் அதைக் {இலங்கையைக்} கண்டிருக்கிறேன். சீதை அங்குத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை" என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் விரைந்து எழுந்து, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, கடலை கடப்பது எப்படி என்று ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்தோம்! யாரும் அதைக்கடக்கத் துணியவில்லை. என் தந்தையின் {வாயுத்தேவனின்} உதவியைப் பெற்ற நான், நூறு யோஜனைகள் அகன்ற அந்தப் பெரும் கடலைக் கடந்தேன். நீரில் இருந்த ராட்சசிகளைக் கொன்று, ராவணனின் அந்தப்புரத்தில், தவம் நோற்று, தன் தலைவனைக் காணும் அவலுடன், தலையில் ஜடை தரித்து, உடலில் புழுதி படிந்து, மெலிந்து போய், துன்பத்துடன் ஆதரவற்ற நிலையில் இருந்த கற்புடைய சீதையை நான் கண்டேன்.
வழக்கத்திற்கு மாறான அவளது குறிப்புகளைக் கண்டு, அவளே சீதையென உணர்ந்து, தனியாக இருந்த அந்த வழிபடத்தக்க மங்கையை அணுகி, “ஓ! சீதை, நான் ராமனின் தூதுவன்; பவனனால் பெறப்பட்ட குரங்கு [3]. உன்னைக் காண விரும்பியே, வானத்தில் பயணித்து இங்கே வந்திருக்கிறேன். குரங்குகளின் ஏகாதிபதியான சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்ட அரசச் சகோதரர்களான ராமனும் லட்சுமணனும் அமைதியாக இருக்கிறார்கள். ஓ! மங்கையே, ராமனும், சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்} உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினார்கள்! (ராமன் மற்றும் லட்சுமணனுடன் கொண்ட) நட்பின் காரணமாகச் சுக்ரீவனும் உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினான். அனைத்து குரங்குகளாலும் தொடரப்படும் உனது கணவன் விரைவில் இங்கு வருவான். ஓ! புகழத்தக்க மங்கையே, நான் ஒரு குரங்குதான்; ராட்சசனில்லை. என்னில் நம்பிக்கை கொள்" என்றேன்.
[3] பவனன் என்றால் வாயுத்தேவன் என்கிறார் கங்குலி.
என்னால் இப்படிச் சொல்லப்பட்ட சீதை, ஒருக்கணம் தியானிப்பது போலத் தெரிந்தது, பிறகு, “அவிந்தியனின் வார்த்தைகளால் நீ ஹனுமான் என்பதை அறிந்தேன்! ஓ! பலமிக்கவனே, அவிந்தியன் முதிர்ந்த மதிக்கத்தக்க ராட்சசனாவார்! அவர், உன்னைப் போன்ற ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} சுக்ரீவன் சூழப்பட்டிருப்பதாகச் சொன்னார். நீ இப்போது செல்லலாம்" என்று சொல்லி இந்த மணியை ஒரு நற்சான்றாக அளித்தாள். உண்மையில், இந்த மணியின் காரணமாகவே களங்கமற்ற சீதை உயிர் தாங்க முடிந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, மேலும் அந்த ஜனகனின் மகள் {சீதை}, அவளது அடையாளத்தைத் தெரிவிப்பதற்காக, சித்திரக்கூடம் என்ற பெயரால் அறியப்படும் பெரும் பலம் வாய்ந்த மலையின் மார்பில் நீ இருந்த போது (மந்திரங்கள் ஊட்டப்பட்டு, உயிர்க்கொல்லி ஆயுதமாக மாற்றப்பட்ட) ஒரு புல்லால் ஒரு காக்கையை அடித்ததாகச் சொன்னாள். நான் அவளைச் சந்தித்தற்கும், அவள்தான் உண்மையான விதேக இளவரசிதான் என்பதற்கும் சான்றாக இதைச் சொன்னாள். பிறகு ராவணன் படைவீரர்கள் பிடிக்குமாறு, நான் அவர்களுக்கு அகப்பட்டு, இலங்கை என்ற அந்த நகரத்திற்குத் தீ மூட்டினேன்" என்றான் {ஹனுமான்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.