Ravana approached Sita! | Vana Parva - Section 279 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
அசோக வனத்தில் சோகமாக இருக்கும் சீதையை அணுகி, தன்னைக் கணவனாக ஏற்கும்படி ராவணன் கேட்பது; சீதை ராவணனை அவமதிப்பது; ராவணன் அங்கிருந்து மறைந்து, தான் விரும்பிய இடம் சென்றது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் தலைவனை {ராமனைப்} பிரிந்த துயரத்தால் தாக்கப்பட்டு, எளிய ஆடை (குறிப்பிட்ட வகையிலான துணி) உடுத்தி, (மணிக்கட்டில் அணியும் திருமண நூல் {தாலியில்} கோர்க்கப்பட்டிருந்த) ஒரே ஒரு நகை மட்டும் அணிந்தபடி அங்கே {அசோக வனத்தில்} வசித்துவந்த கற்புடைய சீதை, ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்படி அமர்ந்திருந்த அவளுக்காக ராட்சசிகள் காத்திருந்தனர். அப்போது, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட ராவணன் அங்கே அவள் முன்னிலையில் வந்து நின்றான். போர்க்களத்தில், தேவர்களாலும், தானவர்களாலும், கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், கிம்புருஷர்களாலும் வெல்லப்பட முடியாத அவன் {ராவணன்}, ஆசையில் எரிந்தான். தெய்வீக ஆடைகள் உடுத்தி, அழகிய அம்சங்களுடன், ரத்தினம் பொருந்திய காதுகுண்டலங்களும், அழகிய மாலையும், மகுடமும் தரித்து, இளவேனிற்காலத்தின் {வசந்த காலத்தின்} உருவகமாக அசோக வனத்துக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான். கவனமாக {அழகாக} உடுத்தியிருந்த ராவணன், இந்திரனின் நந்தவனத்தில் உள்ள கல்ப மரத்தைப் {கற்பகவிருக்ஷம்} போல இருந்தான். ஆனால், அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கல்லறைக்கு மத்தியில் இருக்கும் அழகிய ஆல மரத்தைப் போலவே, அவன் {ராவணன்}, அவளுக்குப் {சீதைக்குப்} பயத்தை ஏற்படுத்தினான். இரவு உலாவியான அவன், அந்தக் கொடியிடை மங்கையின் {சீதையின்} முன்னிலையை அடைந்து, ரோகிணியின் {ரோகிணி நட்சத்திரத்தின்} முன்பு நிற்கும் சனிக்கிரகம் போல இருந்தான்.
பூக்களைத் தனது சின்னமாகக் கொண்ட தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட அவன் {ராவணன்}, பெண் வெள்ளாடு போல அச்சத்துடன் இருந்த அழகிய இடை கொண்ட அந்த ஆதரவற்ற மங்கையை {சீதையை} அணுகி, "ஓ! சீதை, உன் தலைவனை {ராமனை} நீ வெகுவாக மதிக்கிறாய்! ஓ! மென்மையான உறுப்புகள் கொண்டவளே {மென்மையானவளே}, என்னிடம் கருணை காட்டு. {இந்தப் பணிப்பெண்கள்} இப்போது உன் மேனியை அழகூட்ட அனுமதி கொடு. ஓ! அருமையானவளே, என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள். ஓ! மிக அழகான நிறம் கொண்டவளே, விலையுயர்ந்த ஆடை ஆபரணகளைத் தரித்து, எனது வீட்டின் பெண்கள் அனைவரிலும் முதன்மையான இடத்தைப் பெறு. நான் கொண்டிருக்கும் அவர்களில் பலர், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மகள்களாவர். நான் பல தானவ மற்றம் தைத்திய மங்கையருக்குத் தலைவனாக இருக்கிறேன். பதினான்கு கோடி {14,00,00,000_One hundred and forty million} பிசாசங்களும், அதைவிட இரண்டு மடங்கு மனிதனை உண்ணும் பயங்கர ராட்சசர்களும், அதைவிட மூன்று மடங்கு யக்ஷர்களும் என் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கரூவலத்தலைவனான {குபேரனின்} என் அண்ணனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஓ! அழகிய தொடைகள் கொண்டவளே {சீதை}, என் மதுபான கூடத்தில் {Drinking Hall}, கந்தர்வர்களும் அப்சரசுகளும், என் அண்ணனுக்காகக் காத்திருப்பது போலவே எனக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர்ந்த தவத்தகுதி படைத்த விஸ்வரசின் மகன் நான். நான் இந்த அண்டத்தின் ஐந்தாவது ஆட்சியாளனாக {லோகபாலகனாக} புகழ்பெற்றிருக்கிறேன். ஓ! அழகிய மங்கையே {சீதையே}, நான் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல மிகச்சிறந்த உணவும் பானமும் கொள்கிறேன். காட்டு வாழ்வின் தொடர்ச்சியாக உனக்கு ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் நின்று போகட்டும். ஓ! அழகிய இடை கொண்டவளே {சீதை}, மண்டோதரியைப் போலவே, நீ எனது ராணியாகு" என்ற வார்த்தைகளைக் கூறினான் {ராவணன்}.
அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட விதேகத்தின் அந்த அழகிய இளவரசி {சீதை}, அப்புறம் திரும்பிக்கொண்டு, புல்லைவிட இழிந்தவனாக அவனை {ராவணனைக்} கருதி, அந்த இரவு உலாவிக்கு மறுமொழி கூறினாள். விதேக இளவரசியான அந்த அழகிய இடை கொண்ட பெண் {சீதை}, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட மங்கலமற்ற கண்ணீர், அவளது பருத்த கச்சிதமான மார்புகளை அந்நேரத்தில் நனைத்தது. தன் கணவனைத் தேவனாகக் {தெய்வமாகக்} கருதிய அவள் {சீதை}, அந்த இழிந்த பாவியிடம் {ராவணனிடம்}, "ஓ! ராட்சசர்களின் மன்னா {ராவணா}, சுத்தமாகப் பேறு இல்லாததாலேயே உன்னால் பேசப்படும் இத்தகு துக்ககரமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஓ! சிற்றின்பத்தை விரும்பும் ராட்சசா {ராவணா}, என்னிடம் இருந்து உனது இதயத்தை விலக்கு. நீ அருளப்பட்டிருப்பாயாக! நான் வேறு ஒருவரின் மனைவி; கணவருக்கே என்னை எப்போதும் அர்ப்பணித்திருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடையத்தகாதவள்! ஆதரவற்ற மானுடப் பெண்ணான நான், உன் மனைவி ஆவதற்குத் தகுந்தவளல்ல! விருப்பமில்லாத பெண்ணை வன்முறையால் அடைவதால், நீ அடையப்போகும் மகிழ்ச்சிதான் என்ன? உனது தந்தை ஒரு ஞானமுள்ள அந்தணர்; பிரம்மனுக்குப் பிறந்தவர்; படைப்புத் தலைவனுக்கு {பிரம்மனுக்கு} நிகரானவர்! எனவே, அண்ட ஆட்சியாளனுக்கு {லோகபாலனுக்கு} நிகரான நீ ஏன் அறத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது? மகேஸ்வரனுக்கு {சிவனுக்கு} நண்பனும், யக்ஷர்களின் மன்னனும், கருவூலத் தலைவனுமான உனது அண்ணனை {குபேரனை} அவமதித்துவிட்டு, நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்?" என்று கேட்டாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன சீதை, ஆடையால் தனது கழுத்தையும் முகத்தையும் மூடிக் கொண்டு, கலக்கத்தால் தன் மார்புகள் நடுங்க அழத்தொடங்கினாள். அழுது கொண்டிருந்த அந்த மங்கையின் {சீதையின்} தலையில் இருந்து விழுந்த, நன்றாகப் பின்னப்பட்ட, மிகக் கருமையான, பளபளப்பான நீண்ட சடை பார்ப்பதற்குக் கருநாகம் போல இருந்தது. சீதையால் சொல்லப்பட்ட இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்ட அந்த முட்டாள் ராவணன், இப்படி அவளால் {சீதையால்} நிராகரிக்கப்பட்டாலும், அவளிடம் {சீதையிடம்} மீண்டும், "ஓ! மங்கையே, மகரத்தைச் சின்னமாகக் கொண்ட தேவன் என்னைச் சுட்டெரிக்கட்டும். இருப்பினும், ஓ! இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன். எங்களுக்கு உணவாக இருக்ககூடிய மனிதனான ராமனை இன்னும் உயர்வாகக் கருதும் உன்னை நான் என்ன செய்யக்கூடும்?" என்று சொன்னான். களங்கமற்ற மங்கையிடம் {சீதையிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்ன ராட்சச மன்னன் {ராவணன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சியில் இருந்து மறைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான். ராட்சசிகளால் சூழப்பட்டிருந்த சீதை, திரிஜடையால் மென்மையாக நடத்தப்பட்டு துயரத்துடன் அங்கு வசிக்கத் தொடங்கினாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.