Rama reached Lanka! | Vana Parva - Section 281 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.
[1] இங்கே கங்குலியில் கவக்ஷயன் என்றே இருக்கிறது. ஆனால் அடுத்துச் சொல்லப்படும் குரங்குக்கும் அதே பெயர் இருப்பதால் இங்கே வேறு பதிப்பிலிருந்து எடுத்து பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[2] இங்கே படிப்பதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சில நூல்களில் ஐம்பத்து ஏழு கோடி {57,00,00,000}என்று இருக்கின்றன என்கிறார் கங்குலி.
[3] இங்கே ஒரு வித்தியாசம் காணக்கிடைக்கிறது என்கிறார் கங்குலி. ஆனால் என்னவென்று சொல்லவில்லை. கும்பகோணம் பதிப்பில் முகத்தில் திலகக் குறி என்பதற்குப் பதில், முகத்தில் "ம்" போன்ற அடையாளமான புணட்ரம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.
அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது. கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.
கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் - வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.
பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்" என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.
இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.
இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்" என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.
[4] இது ஆசமனம் என்கிற சுத்திகரிப்புச் சடங்கு. இந்நாள் வரை, எந்த ஹிந்துவும், ஆசமனத்தை முதலில் செய்யாமல் எந்தச் சடங்கையும் செய்ய முடியாது என்கிறார் கங்குலி
[5] இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார் கங்குலி.
ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.
ராமன், பெருங்கடலின் இக்கரையில் இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.