Ravana fought with Rama! | Vana Parva - Section 283 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
வானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடுருவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.
கணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும், கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.