Kumbhakarna awoke! | Vana Parva - Section 284 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; ...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.
இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.
தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.
ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து "கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.
பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, "ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான். பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்" என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.