The illusion won by magic water! | Vana Parva - Section 287 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.
[1] உணர்வை இழக்கச் செய்யும் சம்-மோஹண ஆயுதத்தைப் போலவே, இந்த ஆயுதத்தால் உணர்விழந்து இருக்கும் போர்வீரனின் உணர்வை மீட்க இயலும். என்கிறார் கங்குலி
பிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ! பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும்! இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்" என்றான் {விபீஷணன்}
[2] விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலி[3] இந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.
“அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ! யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.
அதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.
ராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக் {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள்! அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது! அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல்! அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே! உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல! இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்!” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.