Ravana was consumed by fire! | Vana Parva - Section 288 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.
இருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்" என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.
அந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ! காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது! ஓ! மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான்! எனவே, ஓ! மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல்! இதைச் சாதிக்கத் தாமதிக்காதே!” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.
எனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று! ஓ! பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு!" என்றான். இதனால் மகிழ்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.
ராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.
[1] வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும். என்கிறார் கங்குலி.
செய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.
பிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம்மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.