If I had ever sinned! | Vana Parva - Section 289a | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, "ஜெயம்" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.
பத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென்ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்!" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.
துயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, "விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய்! நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது! ஓ! அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது! இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும்? ஓ! மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்!" என்றான் {ராமன்}.
இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அது மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.
பிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், "ஓ! இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும்! எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ! நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ! வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக!" என்றாள்.
சீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. "ஓ! ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள்! நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள்! எனவே, ஓ! மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக!" என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, "ஓ! ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன்! ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்!" என்றான். பிறகு வருணனும், "ஓ! ரகுவின் மகனே {ராமா}, "அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன! நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக!" என்றான்.
பிறகு பிரம்மன், "ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ! மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன்! எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே! ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள்! ஓ! தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்!" என்றான் {பிரம்மன்}.
பின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், "ஓ! குழந்தாய்! நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்!" என்றான். அதற்கு ராமன், "ஓ! மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்" என்றான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.