Rama installed in sovereignty! | Vana Parva - Section 289b | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} "அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன" என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், "ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?" என்று கேட்டான்.
அதன்பேரில் ராமன், அவர்களிடம், அறத்தில் உறுதியான பற்றும், எதிரிகளைப் பொறுத்தமட்டில் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் என்றும், ராட்சசர்களால் கொல்லப்பட்ட அனைத்துக் குரங்குகளும் உயிர் மீள்வதையும் வேண்டினான். "அப்படியே ஆகட்டும்' என்று பிரம்மன் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயிர்மீட்கப்பட்ட அந்தக் குரங்குகள் போர்க்களத்தில் இருந்து எழுந்து வந்தனர். பெரும் நற்பேறுபெற்ற சீதையும் ஹனுமானுக்கு ஒருவரம் அளித்தாள். "ஓ! மகனே {ஹனுமானே}, ராமரின் சாதனைகள் (புகழ்) நீடிக்கும் வரை உனது வாழ்வும் நீடிக்கட்டும்! மேலும், மஞ்சள் கண்களைக் கொண்ட ஹனுமானே, மேலும், தெய்வீக உணவுகளும், பானங்களும் எனது அருளால் உனக்கு எப்போதும் கிடைக்கட்டும்" என்றாள் {என்ற வரத்தை ஹனுமானுக்கு அளித்தாள் சீதை}.
பிறகு களங்கமற்ற சாதனைகள் செய்த அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் மறைந்தனர். ஜனகனின் மகளுடன் {சீதையுடன்} ராமன் இணைந்திருப்பதைக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டி {மாதலி}, மிகவும் மனம் நிறைந்து, நண்பர்களுக்கு மத்தியில், "ஓ! கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்டவனே, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள் ஆகியோரின் துயரங்களை நீ விலக்கியிருக்கிறாய். எனவே, இந்தப் பூமி ஒன்றாக நிலைத்திருக்கும் வரை, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோர் உன்னைக் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள்" என்றான்.
இவ்வார்த்தைகளை ராமனுக்குச் சொன்ன மாதலி, அந்த ரகுவின் மகனை வழிபட்டு, ஆயுதம் தாங்குவோரில் முதன்மையான அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக்கொண்டு, சூரியப் பிரகாசம் கொண்ட அதே தேரில் சென்றான். சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, விபீஷணன், சுக்ரீவனைத் தலைமையாகக் கொண்ட குரங்குகளுடன் சீதையை முன்னிட்டுச் சென்ற ராமன், இலங்கையின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதே பாலத்தின் வழியாகக் கடலை மீண்டும் கடந்தான். பயணிப்பவனின் விருப்பத்திற்கேற்ற இடத்திற்குச் செல்ல வல்ல புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட வானுறையும் அந்த அழகிய தேரில் அவன் பயணித்தான். ஆசைகளை அடக்கிய அவனை {ராமனை}, அவனது முதன்மையான ஆலோசகர்கள் முன்னுரிமை வரிசையில் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே தான் படுத்திருந்த கடற்கரை பகுதிக்கு வந்த அந்த அறம்சார்ந்த மன்னன் {ராமன்} அனைத்துக் குரங்குகளுடன் தனது தற்காலிக வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.
பிறகு ரகுவின் மகன் {ராமன்}, உரிய நேரத்தில் குரங்குகளைத் தனது முன்னிலைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் வணங்கி, தங்கமும், ரத்தினங்களும் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்து ஒவ்வொருவராக அவர்களுக்கு விடை கொடுத்தான். குரங்குத் தலைவர்கள், கரடிகள் மற்றும் மாட்டுவால் கொண்ட குரங்குகள் அனைவரும் சென்ற பிறகு, ராமன் சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்தான். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருடன் புஷ்பகத்தேரில் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்த ராமன், வழியெங்கும் விதேக இளவரசிக்கு {சீதைக்கு} காடுகளைக் காட்டிக் கொண்டே வந்தான். பிறகு கிஷ்கிந்தையை அடைந்த அடிப்பவர்களில் முதன்மையான ராமன் வெற்றிபெற்ற அங்கதனை அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாக நிறுவினான்.
பிறகு சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்}, அதே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வந்த வழியிலேயே தன் நகரத்தை {அயோத்தியை} நோக்கி மீண்டும் சென்றான் ராமன். அயோத்தி நகரத்தை அடைந்ததும், அந்த மன்னன் {ராமன்} ஹனுமானைத் தூதுவனாகப் பரதனிடம் அனுப்பினான். வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்டு பரதனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்ட ஹனுமான், அவனுக்கு {ராமனின் வரவைக் குறித்த} நற்செய்தியைச் சொன்னான். அதன்பிறகு பவன குமாரன் {ஹனுமான்} திரும்பி வந்ததும், ராமன் நந்திகிராமத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்திற்குள் நுழைந்த ராமன், புழுதி படிந்த தேகமும், கந்தலாடை உடுத்தியும், தன் முன்னிலையில் தனது அண்ணனின் {ராமனின்} பாதுகைகளை வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கும் பரதனைக் கண்டான். ஓ! பாரதக் குலத்தின் காளையே இப்படிப் பரதனுடனும், சத்ருக்னனுடனும் சேர்ந்த ரகுவின் பலம் வாய்ந்த மகன் {ராமன்}, சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} கூடி பெரும் மகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தான். தங்கள் அண்ணனுடன் சேர்ந்த பரதனும் சத்ருக்னனும் சீதையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, திரும்பி வந்த தனது அண்ணனை வழிபட்ட பரதன், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிடத்தில் புனிதமாக, அடைக்கலமாக வைக்கப்பட்டிருந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். பிறகு வசிஷ்டரும், வாமதேவரும் சேர்ந்து, அந்த வீரனுக்குத் {ராமனுக்கு} திருவோணம் {சிரவண} நட்சத்திரத்தின் எட்டாவது முகூர்த்தத்தில் [1] (அயோத்தியின்} ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப் பட்டம் சூட்டினர். இப்படிப் பட்டம் நிறுவப்பட்ட பிறகு, மிகுந்த மனநிறைவோடிருந்த குரங்குகள் மன்னன் சுக்ரீவனுக்கும், அவனது தொண்டர்களுக்கும் மற்றும் புலஸ்திய குலத்தின் விபீஷணனுக்கும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல ராமன் விடை கொடுத்து அனுப்பினான்.
[1] அபிஜித் முகூர்த்தமே {கிட்டத்தட்ட மதிய வேளை} ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தமாக இருக்கிறது. ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளுக்கு {அதாவது 24 மணி நேரம்} 30 முகூர்த்தங்களாகும். நீலகண்டரால் விளக்கப்பட்ட வைஷ்ணவ விண்மீன் அறிவியல் சிரவவம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கங்குலி.
பலவகையான இன்பம்தரக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவர்களை வழிபட்டு, அந்த நேரத்திற்குத் தகுந்த அனைத்தையும் செய்து, துயரம் நிறைந்த இதயத்துடன் ராமன் தனது நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். பிறகு புஷ்பகத் தேரை வழிபட்ட ரகுவின் மகன் {ராமன்}, அதை மகிழ்சியுடன் வைஸ்ரவணனிடம் திருப்பிக் கொடுத்தான். பிறகு தெய்வீக முனிவரைத் {வசிஷ்டரைத்} துணையாகக் கொண்டு, அந்தணர்களுக்கு மூன்று மடங்கு கொடையளித்து, எத்தடையுமின்றிக் கோமதி ஆற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளை நடத்தினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.