Yudhishthira casting off his sorrows! | Vana Parva - Section 290 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமன் கதையைச் சொல்லிய மார்க்கண்டேயர், யுதிஷ்டிரனுக்குத் துணைவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவனைத் தேற்றுவது...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே அளவிலா சக்தி கொண்டவனான ராமன், வனவாசத்தின் விளைவாகப் பெரும்பேரிடரைப் பழங்காலத்தில் அனுபவித்தான். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கவலைப்படாதே, நீ ஒரு க்ஷத்திரியன்! மேலும் நீயும் கரங்களின் வலிமையைச் சோதிக்கும் பாதையிலேயே சொல்கிறாய். அந்த வழி உறுதியாகப் பரிசுகளை ஏற்க இட்டுச் செல்லும். உன்னிடம் ஒரு துகள் அளவும் பாவமில்லை. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், அசுரர்களும் நீ செல்லும் பாதையிலேயே செல்ல நேர்ந்தது! இது போன்ற துயரங்களுக்குப் பிறகுதான் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, மருதர்களின் துணை கொண்டு விருத்திரனையும், ஒப்பற்ற நமுசியையும், நீண்ட நாக்குடைய ராட்சசியையும் {தீர்க்கஜிஹவை} கொன்றான். துணையுள்ளவன், தனது நோக்கங்களின் சாதனையை {நிறைவை} எப்போதும் ஈட்டுவான்!
தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனால் {உன்னால்} போர்க்களத்தில் வெல்ல முடியாதது எது? பயங்கரப் பராக்கிரமம் கொண்ட இந்தப் பீமனும் பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையானவனாக இருக்கிறான். இளைஞர்களும் வீரர்களுமான மாத்ரவதியின் {மாத்ரியின்} மகன்களும் {நகுலனும் சகாதேவனும்} பலமிக்க வில்லாளிகளாக இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, இப்படிப்பட்ட துணை கொண்ட நீ ஏன் விரக்தியடைகிறாய்? இவர்கள் மருதர்களின் துணை கொண்ட வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} படையை அழிக்கும் திறன் கொண்டவர்களாவர். தெய்வீக வடிவில் இருக்கும் இந்தப் பலமிக்க வில்லாளிகளைத் துணையாகக் கொண்ட நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உனது அனைத்து எதிரிகளையும் போர்க்களத்தில் வெல்வாய் என்பது நிச்சயம்!
பலம் மற்றும் சக்தியில் கர்வமடைந்திருந்த தீய மனம் கொண்ட சைந்தவனால் {ஜெயத்ரதனால்}, துருபதனின் மகளான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} பலவந்தமாக அபகரிக்கப்பட்ட போது, இந்தப் பலமிக்க வீரர்களின் பயங்கரச் சாதனைகளால் மீட்கப்பட்டாள் என்பதைப் பார். மன்னன் ஜெயத்ரதன் வீழ்த்தப்பட்டு, உனக்கும் முன்னால் சக்தியற்று கிடத்தப்பட்டான் என்பதைப் பார். கிட்டத்தட்ட எந்த உதவியுமற்று, பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பத்து கழுத்து ராட்சசனைப் {ராவணனைப்} போர்க்களத்தில் கொன்று, விதேக இளவரசி ராமனால் மீட்கப்பட்டாள்! உண்மையில், (அந்தப் போராட்டத்தில்) ராமனுக்குத் துணையாக இருந்தது, குரங்குகளும், கரிய முகம் கொண்ட கரடிகளுமே ஆவர். அவர்கள் மனிதர்கள் அல்லர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை அனைத்தையும் உனது மனதில் நினைத்துப் பார்! எனவே, குருக்களில் முதன்மையானவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, (நடந்தது) அத்தனைக்கும் வருந்தாதே! உன்னைப் போன்ற சிறப்புமிக்க மனிதர்கள், ஓ! எதிரிகளை அடிப்பவனே {யுதிஷ்டிரா}, துன்பத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!" {என்றார் மார்க்கண்டேயர்}
வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படியே மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மார்க்கண்டேயர் ஆறுதலளித்தார். பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தனது துயரங்களை விலக்கிவைத்து, மீண்டும் ஒரு முறை மார்க்கண்டேயரிடம் பேசினான்."
*********திரௌபதி ஹரணப் பர்வம் முற்றிற்று*********
திரௌபதி ஹரணப் பர்வம் வனபர்வத்தின் பகுதி 270தோடு முடிந்திருக்க வேண்டும். இந்த 290ம் பகுதியில் ராமோபாக்யான பர்வம் முடிவடைய வேண்டும். ராமோ பாக்யான பர்வம் என்பது வனபர்வத்தின் 271 முதல் 290 வரையுள்ள பகுதிகளைக் கொண்டதாகும். ஆனால் இவற்றை கங்குலி கையாளவில்லை. எனவே நாமும் கங்குலியின் வழியிலேயே செல்கிறோம்.
அடுத்து வரும் வனபர்வத்தின் 291ம் பகுதியில் இருந்து பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் ஆரம்பிக்கும்.
அடுத்து வரும் வனபர்வத்தின் 291ம் பகுதியில் இருந்து பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் ஆரம்பிக்கும்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.