Savitri daughter of Aswapati! | Vana Parva - Section 291 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வம்)
மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சாவித்ரியின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; மத்ர நாட்டு மன்னன் அஸ்வபதி காயத்ரிதேவியை வேண்டுவது; மன்னன் அஸ்வபதியிடம் மனநிறைவு கொண்ட காயத்ரிதேவி மன்னன் அஸ்வபதிக்கு வரத்தை அருள்வது; அஸ்வபதிக்கு சாவித்ரி பிறப்பது; பூப்படைந்த பின்னரும் யாரும் பெண் கேட்க வராததால், அஸ்வபதி தன் மகள் சாவித்ரியிடம், அவளே தனக்குகந்த மணாளனைத் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது...
"யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! வலிமைமிக்கத் தவசியே {மார்க்கண்டேயரே}, இந்தத் துருபதன் மகளுக்காக {திரௌபதிக்காக} வருந்துமளவுக்கு நான் எனக்காகவோ, இந்த எனது தம்பிகளுக்காகவோ, நாட்டை இழந்ததற்காவோ வருந்தவில்லை. அந்தத் தீயவர்களால் நடத்தப்பட்ட பகடையாட்டத்தால் நாங்கள் துன்புற்றிருந்தபோது, கிருஷ்ணையே {திரௌபதியே} எங்களை விடுவித்தாள். ஜெயத்ரதனால் அவள் இக்கானகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டாள். துருபதன் மகளைப் {திரௌபதியைப்} போல வேறு எந்தக் கற்புடைய மேன்மையான மங்கையையாவது இதுவரை நீர் கண்டதோ கேட்டதோ உண்டா?" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, கற்புடைய மேன்மையான மங்கையரின் தகுதிகளை, சாவித்ரி என்ற பெயர் கொண்ட இளவரசி எப்படி அடைந்தாள் என்பதை முழுமையாகக் கேள். மத்ரர்கள் {மத்ர நாட்டவர்கள்} மத்தியில் {among Madras}, அறம்சார்ந்த, உயர்ந்த பக்தி கொண்ட ஒரு மன்னன் {அஸ்வபதி} இருந்தான். அவன் எப்போதும் அந்தணர்களுக்கு நல்லதைச் செய்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த ஆன்மா கொண்டவனாக {மகாத்மாவாக}, உண்மையில் உறுதியுள்ளவனாக இருந்தான். அவன் புலன்களை நன்கு அடக்கியவனாகவும், வேள்விகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருந்தான். தானமளிப்பவர்களில் முதன்மையானவனாகவும், திறனுடையவனாகவும், குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகிய இருவராலும் விரும்பப்படுபவனாகவும் இருந்தான். பூமிக்குத் தலைவனாக இருந்த அவனது பெயர் அஸ்வபதி என்பதாகும். அவன் அனைத்து உயிர்களின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டவனாக இருந்தான். உண்மையான பேச்சும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களும் கொண்ட அந்த மன்னிக்கும் இயல்புடையவனுக்கு (அந்த ஏகாதிபதிக்கு), குழந்தையில்லாமல் இருந்தது. அவன் {அஸ்வபதி} முதிர்வயதினன் ஆன போது, இதன்காரணமாக {குழந்தையில்லாததால்} துயரத்திற்கு உள்ளானான். வாரிசையுண்டாக்கும் நோக்குடன் அவன் {அஸ்வபதி}, கடும் நோன்புகள் நோற்று, பிரம்மச்சரிய வகை வாழ்வியலின் உதவியைக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்டு, அற்ப உணவை உட்கொண்டு வாழத் தொடங்கினான்.
அந்த மன்னர்களில் சிறந்தவன் {அஸ்வபதி}, (தினமும்) நெருப்பில் பத்தாயிரம் பலியுணவை இட்டு, சாவித்ரிதேவியை [1] மதிக்கும் வண்ணம் மந்திரங்களைச் சொல்லி, {அந்த நாளின்} ஆறாவது காலத்தில் [2] மிதமாக உண்டான். இது போன்ற நோன்புகளைப் பயின்றே அவன் பதினெட்டு {18} வருடங்களைக் கடத்தினான். பதினெட்டு வருடங்கள் முழுமையாக முடிந்ததும் சாவித்ரி (அவனிடம்) நிறைவு கொண்டாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டு, அக்னிஹோத்ர நெருப்பில் இருந்து உருவம் கொண்டு வந்த அந்தத் தேவி {goddess}, மன்னனுக்குக் காட்சி கொடுத்தாள். வரங்களை அளிக்கும் நோக்குடன் இருந்த அவள் {சாவித்ரி}, அந்த ஏகாதிபதியிடம் {அஸ்வபதியிடம்}, "ஓ! மன்னா {அஸ்வபதி}, உனது பிரம்மச்சரிய பயிற்சிகளாலும், உனது தூய்மையிலும், சுய அடக்கத்திலும், நீ நோற்ற நோன்புகளிலும், உனது அனைத்து முயற்சிகளிலும், வணக்கத்திலும் நான் மனநிறைவு கொண்டேன். ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! அஸ்வபதி, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். எனினும், நீ எவ்வகை அறத்திலும் அலட்சியம் கொள்ளக்கூடாது" என்ற வார்த்தைகளைச் சொன்னாள்
[1] காயத்ரி என்றும் அழைக்கப்படும் {சாவித்ரி} பிரம்மனின் மனைவியாவாள் என்கிறார் கங்குலி.[2] ஒரு பகலை எட்டாகப் பிரித்து, அதில் வரும் ஆறாவது காலத்தில் அஸ்வபதி உண்டான் என்று கொள்ள வேண்டும்.
அதன்பேரில் அஸ்வபதி, "அறத்தை அடையும் பொருட்டே நான் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஓ! தேவி, எனது குலத்தின் தகுதிக்கு ஏற்ப பல மகன்கள் எனக்குப் பிறக்க வேண்டும்! ஓ! தேவி, நீ என்னிடம் நிறைவு கொண்டாயானால், நான் இந்த வரத்தையே உன்னிடம் கேட்பேன். வாரிசை அடைவதிலேயே பெரும் தகுதி இருக்கிறது என்று இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} என்னிடம் உறுதி கூறியுள்ளனர்!" என்றான். அதற்குச் சாவித்ரி, "ஓ! மன்னா, உனது இந்த நோக்கத்தை ஏற்கனவே அறிந்தே, நான் தலைவரான பெருந்தகப்பனிடம் {பிரம்மாவிடம்} உனது மகன்களைக் குறித்துப் பேசினேன். அந்தச் சுயம்புவால் அருளப்படும் உதவியாலேயே, பெரும் சக்தி கொண்ட ஒரு மகள் இந்தப் பூமியில் உனக்கு விரைவாகப் பிறப்பாள். இதற்கு மறுமொழி கூறுவது உனக்குத் தகாது. பெரும்பாட்டனின் {பிரம்மாவின்} உத்தரவின் பேரில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கும் நான் உனக்கு இதைச் சொல்கிறேன்" என்று மறுமொழி கூறினாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சாவித்ரியின் வார்த்தைகளை ஏற்று, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்த மன்னன் {அஸ்வபதி} அவளை மீண்டும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவளிடம் {சாவித்ரியிடம்}, "இது விரைவாக நடக்கட்டும்!" என்றான். சாவித்ரி மறைந்த பிறகு, அந்த ஏகாதிபதி தனது நகரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த வீரன், தனது குடிகளை நேர்மையான முறையில் ஆண்டு, தனது நாட்டில் வாழ ஆரம்பித்தான். சில காலம் கழிந்த பிறகு, நோன்புகள் நோற்ற அந்த மன்னன் {அஸ்வபதி}, அறப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த தனது மூத்த ராணியிடம் வாரிசை உண்டாக்கினான் {கர்ப்பத்தை உண்டாக்கினான்}. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த மால்வ இளவரசியின் கருவறையில் இருந்த கரு, வானத்தில் வளர்பிறையின் போது வளரும் நட்சத்திரங்களின் தலைவனைப் {சந்திரனைப்} போல வளர்ந்தது.
நேரம் வந்தபோது, அவள் {மால்வ இளவரசி} தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {அஸ்வபதி}, வழக்கமான சடங்குகளை அவள் சார்பாக மகிழ்ச்சியாக நடத்தினான். அவள், சாவித்ரி தேவியை மதித்துப் பலியுணவுகளைக் காணிக்கையாக இட்ட அறத்தால், அவளால் {சாவித்ரி தேவியால்} மகிழ்ச்சியாக வழங்கப்பட்டவள் ஆதலால், அவளது தந்தையும் {அஸ்வபதியும்}, அந்தணர்களுக்கு அவளுக்குச் சாவித்ரி என்ற பெயரைச் சூட்டினர். அந்த மன்னனின் மகள் உருவமெடுத்து வந்த ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வளர்ந்து வந்தாள். குறித்த நேரத்தில், அந்தக் காரிகை {அஸ்வபதியின் மகள் சாவித்ரி} பூப்படைந்தாள். மெல்லிடையும், பருத்த பின்புறமும் கொண்டு தங்கச் சிலை போன்ற இருந்த அந்த அருள் நிறைந்த மங்கையைக் கண்ட மக்கள், "நாம் ஒரு தேவ கன்னிகையைப் {goddess} பெற்றுள்ளோம்" என்று நினைத்தனர். எரியும் பிரகாசம் கொண்ட அவளது சக்திக்குக் கட்டுப்பட்ட ஒருவராலும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணை மணமுடிக்க முடியவில்லை.
பிறகு ஒரு பருவ காலத்தில் நோன்பிருந்து, தலைக்குக் குளித்த அவள், தன்னைத் தனது (குல) தெய்வத்தை வணங்கி, உரிய சடங்குகளுடன் அந்தணர்களை வேள்வித்தீயில் பலியுணவுகளைக் காணிக்கையாக்கச் செய்ய நேர்ந்தது. தெய்வத்துக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட மலர்களை எடுத்த ஸ்ரீயைப் போன்ற அழகுடைய அந்த மங்கை {சாவித்ரி}, தனது உயர் ஆன்ம {மகாத்மாவான} தந்தையிடம் {அஸ்வபதியிடம்} சென்றாள். தன் தந்தையின் பாதத்தை வணங்கி, அவனுக்குத் தான் கொண்டு வந்திருந்த மலர்களைக் கொடுத்த அந்தப் பெரும் அருள் நிறைந்த கன்னிகை, கூப்பிய கரங்களுடன் மன்னனுக்கு {அஸ்வபதியின்} அருகில் நின்றாள். பூப்படைந்த தனது மகள் தெய்வீக காரிகையைப் போல இருப்பதையும், மக்கள் அவளைக் கோராததையும் {வரன்களால் வேண்டப்படாததைக்} கண்ட மன்னன் சோகமானான்.
பிறகு அந்த மன்னன் {அஸ்வபதி}, {சாவித்ரியிடம்} ,"மகளே, உன்னை {ஒருவனுக்கு} அளிக்கும் நேரம் வந்துவிட்டது! ஆனால் யாரும் உன்னைக் கேட்கவில்லை. (எனவே) உனது குணங்களுக்கு நிகரான ஒரு கணவனை நீயே தேடிக் கொள்! உன்னால் விரும்பப்படும் அந்த மனிதனை நீ எனக்குச் சொல். நீ விரும்பியவாறு உனது கணவனை நீ தேர்வு செய். நான் நன்கு ஆராய்ந்த பிறகு உன்னைக் {அவனுக்குக்} கொடுப்பேன். தேவர்களின் நிந்தனைக்கு உள்ளாகாதபடி நீ நடந்து கொள்ள வேண்டும்!" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இந்த வார்த்தைகளைத் தனது மகளுக்கும், தனது முதிர்ந்த ஆலோசகர்களுக்கும் {அமைச்சர்களுக்கும்} சொன்ன அவன் {அஸ்வபதி}, தனது பணியாட்களிடம் அவளைத் தொடர்ந்து போகும்படி "செல்லுங்கள்!" என்று சொன்னான். அதன்பேரில், நாணத்துடன் தனது தந்தையின் பாதங்களை வணங்கிய அந்தப் பணிவான பெண் {சாவித்ரி}, எந்தத் தயக்கமும் இன்றி, தனது தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க வெளியே சென்றாள். ஒரு தங்கத் தேரில் ஏறிய அவள் {சாவித்ரி}, அரச முனிகள் இருந்த ஒரு காண்பதற்கினிய ஆசிரமத்திற்கு, தனது தந்தையின் முதிர்ந்த அமைச்சர்களுடன் சென்றாள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே முதிர்ந்தவர்களின் பாதங்களை வழிபட்ட அவள் {சாவித்ரி}, படிப்படியாகக் கானகமெங்கும் உலவ ஆரம்பித்தாள். இப்படி அந்த மன்னனின் {அஸ்வபதியின்} மகள் {சாவித்ரி} அனைத்து புனிதமான பகுதிகளிலும் செல்வத்தைத் தானமளித்து, இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களுக்குச் சொந்தமான பலதரப்பட்ட இடங்களுக்குச் சென்றாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.