The selection of Savitri! | Vana Parva - Section 292 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
அஸ்வபதி மற்றும் நாரதரின் முன்னிலையில் சால்வனான சத்யவானைத் தனக்குக் கணவனாகத் தேர்வு செய்திருப்பதாக சாவித்ரி சொல்வது; சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று நாரதர் சொல்வது; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்வபதி சாவித்ரியிடம் கோருதல்; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று சாவித்ரி உறுதியுடன் கூறல்; சத்யவான் சாவித்ரி திருமணத்திற்கு அஸ்வபதி சம்மதித்தல் ...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, "இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள்? ஓ! மன்னா, எங்கிருந்து இவள் வந்திருக்கிறாள்? பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, "நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ! தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும்!" என்றான் {அஸ்வபதி}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு, தனது தந்தையின் {அஸ்வபதியின்} வார்த்தைகளை தெய்வத்தின் வார்த்தையாக மதிக்கும் அந்த அருளப்பட்ட மங்கை {சாவித்ரி}, இப்படிப்பட்ட வார்த்தைகளால் தனது தந்தை கட்டளையிட்டதும் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள். அவள் {சாவித்ரி}, "சால்வர்களுக்கு மத்தியில் தியுமத்சேனன் என்ற பெயரால் அறியப்படும் அறம்சார்ந்த ஒரு க்ஷத்திரிய மன்னன் இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் அவர் குருடராகும்படி நேர்ந்தது. ஞானம் கொண்ட அந்தக் குருட்டு மன்னனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அருகே வசித்திருந்த ஒரு பழைய எதிரி, மன்னனுக்கு {தியுமத்சேனருக்கு} ஏற்பட்ட விபத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரது {தியுமத்சேனரின்} நாட்டைப் பறித்துக் கொண்டான். அதன் பேரில், அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} குழந்தையைத் தனது மார்பில் தாங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். இப்படிக் காட்டுக்குள் சென்ற அவர், பெரும் நோன்புகள் நோற்று, கடும் தவங்களைப் பயிலத் தொடங்கினார். நகரத்தில் பிறந்த அவரது மகன் {சத்யவான்}, ஆசிரமத்தில் வளரத் தொடங்கினார். அந்த இளைஞரே {சத்யவானே}, எனது கணவராவதற்குத் தகுந்தவர் என்று, அவரையே எனது தலைவராக இதயப்பூர்வமாக நான் ஏற்றுக் கொண்டேன்!" என்றாள் {சாவித்ரி}.
அவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், "ஐயோ, ஓ! மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள்! அவனது தந்தை {தியுமத்சேனர்} உண்மையே பேசுபவர். அவனது தாயும் பேச்சில் உண்மை கொண்டவள். இதன் காரணமாகவே அந்தணர்கள் அந்த {அவர்களது} மகனுக்குச் சத்யவான் என்று பெயர் சூட்டினர். அவனது குழந்தைப்பருவத்தில் அவன் குதிரைகளால் மகிழ்ச்சியடைந்து, களிமண்ணால் குதிரைகள் செய்தான். அவன் குதிரைகளின் படங்களையும் வரைந்தான். இதன் காரணமாகவே அந்த இளைஞன் சில நேரங்களில் சித்திராஸ்வன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்" என்றார்
பிறகு மன்னன் {அஸ்வபதி}, "தனது தந்தைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசன் சத்யவான், சக்தியும், புத்திசாலித்தனமும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்}, வீரமும் கொண்டவனா?" என்று கேட்டான். நாரதர், "சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன்! அவன் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன்!" என்றார். பிறகு அஸ்வபதி, "இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா? அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனா? அவன் அழகானவனா? பெருந்தன்மை கொண்டவனா? காண இனிய தோற்றம் கொண்டவனா?" என்று கேட்டான்.
நாரதர், "தனது சக்திக்கேற்ப கொடையளிப்பதில், தியுமத்சேனனின் மகன் {சத்யவான்} சங்கிருதியின் மகன் ரந்திதேவனைப் போன்றவன். உண்மை நிறைந்த பேச்சிலும், அந்தணர்களிடம் கொண்ட அர்ப்பணிப்பிலும், உசீநரனின் மகன் சிபியைப் போன்றவன். யயாதியைப் போன்ற பெருந்தன்மை கொண்டவன், சந்திரனைப் போன்ற அழகு கொண்டவன். தோற்றப்பொலிவில் அவன் அசுவினி இரட்டையர்களைப் போன்றவன். புலனடக்கம் கொண்ட அவன் {சத்யவான்} மென்மையானவன், வீரன் மற்றும் உண்மை நிறைந்தவன்! ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அவன் {சத்யவான்}, தனது நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, வன்மம் விலக்கி, அடக்கமானவனாகவும் பொறுமையுள்ளவனாகவும் இருக்கிறான். உண்மையில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், பெரும் தவத்தகுதிகள் படைத்தவர்களும், மேன்மையான குணம் கொண்டவர்களும், அவன் எப்போதும் தனது நடத்தையில் சரியாக இருப்பவன் என்றும், பெருமை உறுதியாக அவனது புருவத்தில் அமர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்" என்றார்.
இதைக் கேட்ட அஸ்வபதி, "ஓ! மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர்! இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான். அதற்கு நாரதர், "அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான்!" என்றார் {நாரதர்}.
அந்தத் தவசியின் {நாரதரின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன் {அஸ்வபதி}, "ஓ! சாவித்ரி வா. ஓ! அழகு காரிகையே, நீ சென்று வேறொரு தலைவனைத் தேர்ந்தெடுப்பாயாக! (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார்!" என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, "மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே! இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்தோ, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும்! {என் மனமே பிரமாணமாகும்}" என்றாள்.
பிறகு நாரதர், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அஸ்வபதி}, உனது மகள் சாவித்ரியின் இதயம் தடுமாறவில்லை! அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது! சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} அளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன்!" என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, "ஓ! சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன்!" என்றான். நாரதர், "உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும்! நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள்!" என்றார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன நாரதர் வானத்தில் எழுந்து சொர்க்கத்திற்குச் சென்றார். மறுபுறம், தனது மகளின் {சாவித்ரியின்} திருமணத்திற்கான ஏற்பாடுகளை மன்னன் {அஸ்வபதி} செய்யத் தொடங்கினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.