The nupital ceremony of Satyavan and Savitri! | Vana Parva - Section 293 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
காட்டில் வாழ்ந்த சால்வ மன்னன் தியுமத்சேனனின் ஆசிரமத்திற்கு மத்ர மன்னன் அஸ்வபதி சென்று, சாவித்ரியைச் சத்தியவானுக்குக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி தன் நகருக்குத் திரும்பியது; சாவித்ரி நல்ல மருமகளாகவும், நல்ல மனைவியாகவும் சால்வ ராஜகுடும்பத்துக்கு மனநிறைவைக் கொடுத்தது...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தனது மகளின் {சாவித்ரியின்} திருமணம் குறித்த (நாரதரின்) வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்த மன்னன் {அஸ்வபதி}, {தனது மகள் சாவித்ரியின்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். முதிர்ந்த அந்தணர்களையும், புரோகிதர்களுடன் கூடிய ரித்விக்குகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு மங்களகரமான நாளில் தன் மகளுடன் கிளம்பினான். அந்தப் புனிதமான காட்டில் இருந்த தியுமத்சேனனின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் {அஸ்வபதி}, இருபிறப்பாளர்களை {பிராமணர்களைத்} துணைக்கு அழைத்துக் கொண்டு, {தேரில் இருந்து இறங்கி} நடந்து சென்று அந்த அரசமுனியை {தியுமத்சேனனை} அணுகினான். அங்கே அவன் {மன்னன் அஸ்வபதி} பெரும் ஞானம் கொண்ட அந்தக் குருட்டு ஏகாதிபதி {தியுமத்சேனன்}, ஓர் ஆச்சா {சால} மரத்தினடியில் பரப்பப்பட்ட, தர்ப்பை மெத்தையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த அரச முனியை {தியுமத்சேனனை} முறையாக வணங்கிய அந்த மன்னன் {அஸ்வபதி}, அடக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அதன்பேரில் அவனுக்கு ஆர்க்கியாவும், ஆசனமும், ஒரு பசுவும் கொடுத்த அந்த ஏகாதிபதி {தியுமத்சேனன்}, தன் அரசவிருந்தினனிடம் {அஸ்வபதியிடம்}, “உமது வருகைக்கான காரணம் யாது?” என்று வினவினான். இப்படிக் கேட்கப்பட்ட மன்னன் {அஸ்வபதி}, சத்யவான் குறித்த தனது நோக்கம் மற்றும் காரணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். பிறகு அஸ்வபதி, “ஓ! அரச முனியே {தியுமத்சேனரே}, இந்த அழகிய பெண், சாவித்ரி என்ற பெயர் கொண்ட எனது மகளாவாள். ஓ! அறநெறிகள் அறிந்தவரே, நமது {க்ஷத்திரிய} வகைக்கான வழக்கங்களின் படி எற்புடையதைச் செய்து, என்னிடம் இருந்து இவளை உமது மருமகளாகப் பெற்றுக் கொள்ளும்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “நாட்டை இழந்து, காட்டை வசிப்பிடமாகக் கொண்டு, அறப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் நாங்கள் கட்டுப்பாடான வாழ்வுடன் துறவிகளாக வாழ்கிறோம். கானக வாழ்வுக்குத் தகாத உமது மகள் எப்படி இந்தக் காடுறை ஆசிரமத்தில் வாழ்ந்து {எதிர்வரும்} இன்னல்களைத் தாங்கிக் கொள்வாள்?” என்று கேட்டான் {தியுமத்சேனன்}.
அதற்கு அஸ்வபதி {தியுமத்சேனனிடம்}, “இன்பமும் துன்பமும் (நிலையற்றதாகிய அந்த இரண்டும்) வரும், போகும் என்பதை நானும், எனது மகளும் {சாவித்ரியும்} அறிந்திருக்கும்போது, இத்தகு வார்த்தைகளை என்னைப் போன்ற ஒருவனிடம் நீர் பயன்படுத்துவது தகாது! ஓ! மன்னா {தியுமத்சேனரே}, நான் மனதில் தீர்மானத்துடனே இங்கு வந்திருக்கிறேன். நட்பினால் நான் உம்மை வணங்கினேன்; எனவே, எனது நம்பிக்கையை அழிப்பது உமக்குத் தகாது! அன்பினால் உம்மிடம் வந்திருக்கும் என்னை அவமதிப்பதும் உமக்குத் தகாது! என்னுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள நீர் எனக்குச் சமமானவரும் தகுந்தவரும் ஆவீர். உண்மையில், நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, உமக்குச் சமமானவனாகவும் தகுந்தவனாகவும் இருக்கிறேன். எனவே, எனது மகளை உமது மருமகளாகவும், நல்லவனான சத்யவானின் மனைவியாகவும் ஏற்றுக் கொள்ளும்" என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “முன்பொரு காலத்தில் நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், அதைத் தொடர்ந்து நான் எனது நாட்டை இழந்ததால் {கேட்கத்} தயங்கினேன். எனவே, நான் முன்பே விரும்பிய உமது விருப்பம், இந்த நாளே நடக்கட்டும். உண்மையில், நீர் எனது விருந்தாளியாக வரவேற்கப்படுகிறீர்" என்றான்.
பிறகு, அந்தக் காட்டின் ஆசிரமங்களில் வசித்த அனைத்து இருபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்} அழைத்த அந்த இரு மன்னர்களும், முறையான சடங்குகளுடன் அந்த இணைப்பு விழாவை {திருமணத்தை} நடத்தினர். தகுந்த உடைகளுடனும், ஆபரணங்களுடனும் தனது மகளை {சாவித்ரியை} அளித்த அஸ்வபதி, பெரும் மகிழ்ச்சியுடன் தனது வசிப்பிடம் திரும்பினான். அனைத்து குணங்களையும் கொண்ட ஒரு மனைவியை அடைந்த சத்யவான், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தனது இதய விருப்பத்தின் படி கிடைத்த கணவனால் அவளும் {சாவித்ரியும்} பெருமகிழ்ச்சியடைந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} சென்ற பிறகு, தன் ஆபரணங்கள் அனைத்தையும் களைந்த அவள் {சாவித்ரி}, மரவுரியாலும், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட துணிகளையும் {காஷாய வஸ்திரங்களையும்} உடுத்திக் கொண்டாள்.
அவளது சேவைகளாலும், அறங்களாலும், அவளது மென்மையாலும், சுய மறுப்பாலும், அனைவருக்கும் ஏற்புடைய தனது செய்கைகளாலும் அவள் {சாவித்ரி} அனைவருக்கும் மனநிறைவைத் தந்தாள். ஆடைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து, தானே தனிப்பட்ட முறையில் தனது மாமியாரைக் கவனித்து, அவளை {தனது மாமியாரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தனது பேச்சை அடக்கி, தனது மாமனாரையே தெய்வமாக வழிபட்டு அவரையும் {தியுமத்சேனனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தேன் போன்ற தனது பேச்சாலும், அனைத்து வகை வேலையிலும் தான் கொண்ட நிபுணத்துவத்தாலும், சமநிலை கொண்ட மனநிலையாலும், தனிமையில் தனது காதல் குறிப்புகளாலும் தனது கணவனை {சத்யவானை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். இப்படியே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பக்தி கொண்ட கானக வாசிகள், தங்கள் ஆசிரமத்தில் வாழ்ந்து, சில காலம் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், சாவித்ரியின் துன்பகரமான மனதில், இரவும் பகலும் நாரதரின் வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருந்தன."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.