Savitri followed Satyavan! | Vana Parva - Section 294 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த தருவாயில், தனது தலைவனின் இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த சாவித்ரி மூன்று நாள் விரதமிருப்பது; நான்காவது நாளில் காட்டுக்குள் செல்ல கோடரியுடன் புறப்பட்ட கணவனிடம், தானும் வருவதாகச் சொல்வது; அவளது மாமனார், மாமியாரிடம் அனுமதி பெறுமாறு சத்யவான் சொல்வது; சத்யவானின் பெற்றோர் சாவித்ரி அவனுடன் செல்ல அனுமதிப்பது...
"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, நீ நோற்கத் தொடங்கியிருக்கும் நோன்பு மிகவும் கடினமானது; தொடர்ச்சியாக மூன்று இரவுகள் {நாட்கள் என்றிருக்க வேண்டும்} உண்ணாதிருப்பது மிகவும் கடினமாகும்" என்றான் {தியுமத்சேனன்}.
[1] திரயோதசியில் ஆரம்பித்து, பிரதமையில் முடிக்கும் நோன்பு. திரிராத்ரா நோன்பினால், நோற்கும் பெண்ணுடைய கணவனின் வாழ்நாள் வளரும்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “தந்தையே {மாமனாரே தியுமத்சேனரே}}, நீர் வருந்தாதீர்! இந்த நோன்பை என்னால் நோற்க முடியும்! நிச்சயமாக நான் விடமுயற்சியுடன் இப்பணியை மேற்கொள்வேன். விடாமுயற்சியே நோன்பை வெற்றியுடன் முடிப்பதற்குக் காரணமாக இருக்கும்!" என்றாள். அவள் {சாவித்ரி} சொன்னதைக் கேட்ட தியுமத்சேனன், “விரதத்தைக் கைவிடு என்று, என்னால் ஒரு வகையிலும் சொல்லமுடியாது. மாறாக என்னைப் போன்ற ஒருவன், விரதத்தை நிறைவேற்று என்றே சொல்ல வேண்டும்" என்றான். இதை அவளிடம் சொன்ன உயர் ஆன்ம தியுமத்சேனன் {பிறகு} நிறுத்திக் கொண்டான். விரதத்தைத் தொடர்ந்த சாவித்ரி மரப்பொம்மையைப் போல (மெலிந்து) காணப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அவளது கணவன் நாளை இறந்துவிடுவான் என்று நினைத்துத் துயருற்றிருந்த சாவித்ரி, {நின்று கொண்டே} உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து, மிதமிஞ்சிய கவலையுடன் அந்த இரவைக் கழித்தாள்.
இரண்டு கை {இரண்டு முழ} உயரத்திற்குச் சூரியன் உதித்தெழுந்த போது, சாவித்ரி தனக்குள், “இன்றே அந்த நாள்" என்று நினைத்துக் கொண்டு, தனது காலைச் சடங்குகளை முடித்து, சுடர்விடும் நெருப்புக்கு காணிக்கைகளை அளித்தாள். முதிர்ந்த அந்தணர்களையும், தனது மாமனார், மாமியாரையும் வணங்கிய அவள் {சாவித்ரி}, அவர்கள் முன்னிலையில் கூப்பிய கரங்களுடன் புலன்களை ஒருமுகப்படுத்தினாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த துறவிகள் அனைவரும், சாவித்ரியின் நன்மையைக் கருதி, அவள் {சாவித்ரி} கைம்மை {விதவையாகி} துன்பம் அடையக்கூடாது என்ற மங்கல வாழ்த்துகளை உச்சரித்தனர். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த சாவித்ரி, துறவிகளின் அவ்வார்த்தைகளை "அப்படி ஆகட்டும்" என்று மனப்பூர்வமாக ஏற்றாள். நாரதரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த மன்னனின் மகள் {சாவித்ரி}, அந்தக் காலத்தையும், நேரத்தையும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தாள்.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, மனம் நிறைந்த அவளது மாமனாரும் மாமியாரும் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அந்த இளவரசியிடம், “குறித்த நோன்மை நீ முடித்துவிட்டாய். நீ உணவு உட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது; எனவே, எது சரியானதோ அதைச் செய்!” என்றனர். அதற்குச் சாவித்ரி, “எனது நோன்பை இப்போது முடித்துக் கொண்ட நான், சூரியன் கீழே இறங்கியதும் உண்பேன். இதுவும் எனது இதயத்தின் தீர்மானமே. இது எனது நோன்புமாகும்!” என்றாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது உணவைக் குறித்துச் சாவித்ரி பேசிய போது, சத்யவான், கோடரியை எடுத்துத் தோள்களில் இட்டு, காட்டுக்குப் புறப்பட்டான். அதன்பேரில் சாவித்ரி தனது கணவனிடம், “நீர் தனியாகச் செல்வது தகாது! நானும் உம்மோடு வருகிறேன். உம்மிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான், “இதற்கு முன்னர் நீ காட்டுக்குச் சென்றதில்லை. ஓ பெண்ணே {சாவித்ரி}, காட்டுப்பாதைகள் கடப்பதற்குக் கடினமானவையாகும்! மேலும் உனது நோன்பின் காரணமாக உண்ணாவிரதம் இருந்து நீ மெலிந்திருக்கிறாய். எனவே, நீ கால்களால் எவ்வாறு நடப்பாய்?” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி, “நான் விரதத்தின் தளர்வை உணரவில்லை; சோர்வையும் உணரவில்லை. {உம்முடன்} வருவதற்கு நான் எனது மனதைத் தயார் செய்து விட்டேன். எனவே, என்னைத் தடுப்பது உமக்குத் தகாது!” என்றாள். அதற்குச் சத்யவான், “நீ வருவதற்கு விரும்பினால், நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன். எனினும், தவறு செய்துவிட்டதாக நான் குற்ற உணர்வுக்கு ஆளாகாதவாறு, நீ எனது பெற்றோரிடம் அனுமதி பெறு!” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது தலைவனால் சொல்லப்பட்ட பெரும் நோன்புகள் நோன்ற சாவித்ரி, தனது மாமனாரையும், மாமியாரையும் வணங்கி, அவர்களிடம், “பழங்களைப் பெற எனது கணவர் காட்டுக்குச் செல்கிறார். எனது மரியாதைக்குரிய மாமியார் மற்றும் மாமனாரின் அனுமதியுடன் நான் அவருடன் செல்வேன். இன்று அவரிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் மகன் வேள்வி நெருப்புக்காவும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்காகவும் செல்கிறார். எனவே, உங்கள் அறிவுரையால் அவரை {தீர்மானத்தை} மாற்ற முடியாது. உண்மையில, வேறு எந்தக் காரியத்திற்காகவும் அவர் காட்டுச்சென்றால் அவருக்கு அறிவுரை கூறலாம். என்னைத் தடுக்காதீர்கள்! நான் அவருடன் {சத்யவானுடன்} காட்டுக்குள் செல்வேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்று குறைந்தது ஒரு வருடம் ஆகிறது. உண்மையில், பூத்துக்குலுங்கும் வனத்தைக் காண நான் மிகவும் விரும்புகிறேன்!” என்றாள்.
சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன், “சாவித்ரி, அவளது தந்தையால், எனக்கு மருமளாக அளிக்கப்பட்டது முதல், எப்போதும் என்னிடம் தனக்கெனக் கோரும் வார்த்தைகளை என்னிடம் பேசியதாக எனக்கு நினைவில்லை. எனவே, எனது மருமகளின் விருப்பம் இக்காரியத்தில் நிறைவேறட்டும். எனினும், ஓ மகளே {சாவித்ரி}, சத்யவானின் வேலை புறக்கணிக்கப்படாத வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்!” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இருவரின் அனுமதியையும் பெற்ற சிறப்புமிக்கச் சாவித்ரி, இதயத்தில் துன்பத்தால் வருந்தினாலும் புன்னகையுடன் தனது தலைவனுடன் சென்றாள். அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண், அழகிய காட்சிகளையும், மயில் கூட்டம் நிறைந்த கானகத்தையும் கண்டவாறே சென்று கொண்டிருந்தாள். சத்யவான், சாவித்ரியிடம் இனிமையாக, “புனித ஊற்றுகள் கொண்ட இந்த ஆறுகளையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அற்புத மரங்களையும் பார்!” என்றான். ஆனால், குற்றமற்ற அந்தச் சாவித்ரி, தனது தலைவனின் அனைத்து மனநிலைகளிலும் அவனைக் கவனித்தும், தெய்வீக தவசியின் {நாரதரின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்தும், தனது கணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினாள். இரண்டாகப் பிளந்த இதயத்துடன் இருந்த அந்த மங்கை {சாவித்ரி}, தனது தலைவனுக்கு மென்மையாகப் பதில் கூறி, அந்தக் காலத்தை {காலனை} எதிர்பார்த்து அவனைத் {சத்யவானைத்} தொடர்ந்து சென்றாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.