The woe of Satyavan regarding his parents! | Vana Parva - Section 295b | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
யமனிடம் வரங்களைப் பெற்ற சாவித்ரி, தனது கணவன் சத்யவான் சடலம் கிடந்த இடத்திற்குச் செல்வது; தூக்கத்தில் இருந்து எழுவது போலச் சத்யவான் எழுவது; தனக்கு என்ன நேர்ந்தது என்று சாவித்ரியிடம் கேட்பது; நாளை சொல்வதாக சாவித்ரி சொல்வது; இரவாகிவிட்டதால் அங்கேயே தங்குவதா அல்லது ஆசிரமத்தை நோக்கிச் செல்வதா என்று இருவரும் குழம்புவது; தன் பெற்றோரை நினைத்து வருந்திய சத்யவான் ஆசிரமத்திற்கு விரைந்து செல்ல வேண்டும் என்று கூறியது; இருவரும் ஆசிரமத்தை நோக்கிச் சென்றது...
சாவித்ரிக்கு இவ்வரங்களை அளித்து, அவளைத் தடுத்த யமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். யமன் சென்ற பிறகு, தனது கணவனின் {சத்யவானின்} சாம்பல் நிற சவம் கிடந்த இடத்திற்குச் சாவித்ரி திரும்பி, தனது தலைவன் தரையில் கிடப்பதைக் கண்டு, அவனை அணுகி, அவனைத் தூக்கி, அவனது தலையைத் தனது மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள். பிறகு தன் உணர்வுகள் மீண்ட சத்யவான், விசித்திரமான நிலத்தில் {அந்நிய தேசத்தில்} இருந்து சிறிது காலம் கழித்து வீடு திரும்பியவன் போலப் பாசத்துடன் சாவித்ரியை மீண்டும் மீண்டும் பார்த்து, அவளிடம், “ஐயோ, நீண்ட நேரம் தூங்கிவிட்டேனே! எதனால் நீ என்னை எழுப்பவில்லை? என்னை இழுத்துச் சென்ற அந்தக் கரிய மனிதன் எங்கே?” என்று கேட்டான். அவனின் {சத்யவானின்} வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “ஓ! மனிதர்களில் காளையே, நீர் நீண்ட நேரம் என் மடியில் தூங்கிவிட்டீர்! அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்துபவனான வணங்கத்தக்க யமன் சென்றுவிட்டான். ஓ! அருளப்பட்டவரே, நீர் {களைப்பாறி} புத்துணர்ச்சி அடைந்துவிட்டீர். ஓ! மன்னரின் மகனே {சத்யவானே}, உறக்கம் உம்மைக் கைவிட்டது! உம்மால் எழ இயலும் என்றால் எழுந்திரும்! இரவு ஆழ்ந்துவிட்டதைப் {இருளடர்ந்திருப்பதைப்} பாரும்!” என்றாள் {சாவித்ரி}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் நினைவை மீண்டும் அடைந்த சத்யவான், இனிய உறக்கத்தை அனுபவித்தவன் எழுவதைப் போல எழுந்து, எல்லாப்புறமும் வனத்தால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு {சத்யவான் சாவித்ரியிடம்}, “ஓ! கொடியிடை பெண்ணே {சாவித்ரியே}, பழங்களைக் கொள்வதற்காக நான் உன்னுடன் வந்தேன். பிறகு நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்தபோது, என் தலையில் வலியை உணர்ந்தேன். என் தலையில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியாதவனாக இருந்தேன். எனவே, நான் உனது மடியில் உறங்கினேன். ஓ! மங்களகரமானவளே, இவை அனைத்தும் என் நினைவில் இருக்கிறது. பிறகு நீ என்னை அணைத்த போது, உறக்கம் எனது புலன்களைக் களவாடிவிட்டது. பிறகு சுற்றிலும் இருளாக இருப்பதை நான் கண்டேன். அதற்கு மத்தியில் மிகுந்த பிரகாசத்துடன் கூடிய ஒருவனை நான் கண்டேன். ஓ! கொடியிடையாளே, நீ அனைத்தையும் அறிவாயென்றால், நான் கண்டது கனவா அல்லது நனவா என்பதைச் சொல்!” என்றான் {.
அதன்பின், சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “இரவு ஆழமாகிறது. ஓ இளவரசே {சத்யவானே}, அனைத்தையும் நான் நாளை உமக்குச் சொல்கிறேன். எழும், எழுந்திரும், உமக்கு நன்மையே விளையட்டும்! ஓ! அற்புத நோன்புகள் கொண்டவரே {சத்யவானே}, உமது பெற்றோரைப் பாரும்! வெகுநேரத்திற்கு முன்னரே கதிரவன் இறங்கிவிட்டான். இரவும் ஆழமாகிறது. அச்சந்தரும் குரல் கொண்ட இரவு உலாவிகள் {ராட்சசகர்கள்} மகிழ்ச்சியுடன் நடந்து திரிகின்றனர். காட்டில் நடந்து செல்லும் கானக வாசிகளின் {விலங்குகளின்} காலடி ஓசைகள் கேட்கின்றன. தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் வரும் நரிகளின் பயங்கர ஊளைகளும் (அச்சத்தால்) எனது இதயத்தை நடுங்க வைக்கின்றன!” என்றாள். பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஆழ்ந்த இருளால் மூடியிருக்கும் வனப்பகுதிகள் ஒரு பயங்கரத் தோற்றத்தை அணிந்திருக்கின்றன. எனவே, உன்னால் பாதையைக் கண்டுகொள்ள இயலாது. அதன் விளைவாக, {மேற்கொண்டு} செல்லவும் இயலாது!” என்றான் {சத்யவான்}.
அதற்குச் சாவித்ரி {சத்யவானிடம்}, “இன்று இந்தக் காட்டில் ஏற்பட்ட கடுந்தீயின் விளைவாக, ஓர் உலர்ந்த மரம் {விழாமல்} எரிந்து கொண்டு நிற்கிறது. காற்றினால் தூண்டப்படும் நெருப்பு, இப்போதும் அப்போதும் நின்று நிதானித்து எரிந்து கொண்டிருக்கிறது. நான் சிறிது நெருப்பைக் கொண்டு வந்து சுற்றிலும் இருக்கும் இந்த விறகுகளை எரிக்கிறேன். நீர் அனைத்துக் கவலையும் விரட்டுவீராக. உமக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் காண்கிறேன். எனவே, நீர் போகத் துணியவில்லை என்றால், (இவை) அனைத்தையும் நானே செய்வேன். இருள் சூழ்ந்த இந்தக் கானகத்தில் உம்மாலும் வழியைக் கண்டுபிடிக்க இயலாது. நீர் விரும்பினால், நாளை இந்தக் காடு காணத்தக்க வகையில் இருக்கும்போது நாம் செல்லலாம். ஓ பாவமற்றவரே, இதுவே உமது விருப்பமென்றால், நாம் இந்த இரவை இங்கேயே கழிக்கலாம்!” என்றாள் {சாவித்ரி}.
இந்த அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான் {சாவித்ரியிடம்}, “என் தலைவலி நீங்கிவிட்டது; எனது அங்கங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறேன். உனது உதவியுடன், என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன். இதற்கு முன் ஒருபோதும் நான் சரியான நேரம் கடந்த பின்னர் ஆசிரமம் திரும்பியது கிடையாது. மாலை வேளைக்கு முன்னரே என் தாய் என்னை ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லத் தடுப்பாள். காலையில் நான் வெளியே வந்தாலும், என்னைக் குறித்து எனது பெற்றோர் கவலை கொள்ளத் தொடங்குவர். பின்பு எனது தந்தை, காடுறை ஆசிரமங்களில் இருக்கும் கானகவாசிகளோடு சேர்ந்து என்னைத் தேடுவார். ஆழ்ந்த துயரத்தின் காரணமாக இதற்கு முன்னரே என் தந்தையும் தாயும், “நீ மிகவும் தாமதித்து வருகிறாய்!” என்று பல முறை என்னைக் கண்டித்துள்ளனர். என் நிமித்தம் அவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன். என்னைக் காணாத போது அவர்கள் மிகுந்த துன்பத்தை அடைவார்கள். இந்த இரவுக்கு முந்தைய இரவில், என்னிடம் அன்பு கொண்ட அவ்விருவரும் ஆழ்ந்த வருத்தத்துடன் அழுது, என்னிடம், “ஓ! மகனே {சத்யவானே}, உன்னை இழந்தால், நாங்கள் இருவரும் ஒருக்கணமேனும் வாழ மாட்டோம்! நீ வாழும் காலம் வரைதான் நிச்சயம் நாங்கள் வாழ்வோம். இந்தக் குருடர்களுக்கு நீ தான் ஊன்றுகோல்; நமது குலம் அழியாமல் இருப்பது உன் கையிலேயே இருக்கிறது. எங்கள் ஈமப் பிண்டம், எங்கள் புகழ், எங்கள் வம்சம் ஆகியன உன்னை நம்பியே இருக்கின்றன” என்றனர்.
எனது தாய் முதிர்ந்தவள்; என் தந்தையும் அப்படியே. நிச்சயம் நானே அவர்களது ஊன்றுகோல். இரவில் என்னை அவர்கள் காணவில்லையென்றால், அவர்களது நிலைமை என்னவாகும்? குற்றமற்ற என் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஆபத்தில் இருப்பதற்கும், இதயம் பிளக்கும் துயரத்தில் நான் சிக்கவும் காரணமாக இருந்த எனது தூக்கத்தை நான் வெறுக்கிறேன். என் தந்தையும், தாயுமில்லாது என்னால் உயிரைத் தாங்க இயலாது. துன்பத்தால் ஆறுதலடையாத மனம் கொண்ட எனது குருட்டுத் தந்தை, இந்நேரம், ஆசிரமவாசிகள் அனைவரிடமும் என்னைக் குறித்துக் கேட்டுக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். ஓ! அழகான பெண்ணே {சாவித்ரியே}, நான் எனது தந்தைக்காகவும், தன் தலைவருக்கு எப்போதும் கீழ்ப்படியும் எனது பலவீனமான தாய்க்காகவும் வருந்துவது போல, எனக்காக வருந்த மாட்டேன். என்னைக் குறித்த வேதனையால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்கள் வாழும் வரையே நான் எனது உயிரைப் பிடித்திருப்பேன். அவர்களை நானே பராமரிக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் செய்ய வேண்டும் என்பதையும் நான் அறிவேன்!” என்றான் {சத்யவான்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் பெற்றோரிடம் அன்பும் மதிப்பும் கொண்ட அந்த அறம் சார்ந்த இளைஞன் {சத்யவான்} இதைச் சொன்ன பிறகு, துக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தனது கரங்களை உயர்த்தி, துன்பக் குரலில் {அழுது} புலம்பத் தொடங்கினான். துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது தலைவனைக் கண்ட அறம்சார்ந்த சாவித்ரி, அவனது கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்து {சாவித்ரி சத்யவானிடம்}, “நான் நோன்புகள் நோற்றவளானால், கொடையளித்தவளானால், வேள்வி செய்தவளானால், எனது மாமனாருக்கும், மாமியாருக்கும், எனது கணவருக்கும் இந்த இரவு நன்மையானதாகட்டும்! கேலிக்காகக் கூட நான் ஒரு பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. எனது மாமனாரும், மாமியாரும் உண்மையின் அறத்தால் {சத்தியத்தால்} பிழைத்திருக்கட்டும்!” என்றாள். சத்யவான், “என் தந்தையையும், தாயையும் காண ஆவலோடு இருக்கிறேன்! எனவே, ஓ! சாவித்ரி, தாமதிக்காமல் புறப்படு. ஓ! அழகான காரிகையே, என் தந்தைக்கோ தாய்க்கோ ஏதும் தீங்கு நேர்ந்திருந்தால், நான் வாழமாட்டேன் என்று என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன். உனக்கு அறத்தின் மீது ஏதாவது மதிப்பிருந்தால், நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், எனக்கு ஏற்புடையதைச் செய்வது உனது கடமை என்றால் ஆசிரமத்திற்குப் புறப்படு!” என்றான் {சத்யவான்}.
பிறகு அந்த அழகிய சாவித்ரி எழுந்து, தனது கூந்தலை முடிந்து, தனது கணவனைக் கரங்களால் தூக்கி நிறுத்தினாள். அப்படி எழுந்த சத்யவான், தன் கைகளால் தனது அங்கங்களைத் துடைத்தான். அப்படியே அவன் சுற்றிலும் ஆய்வு செய்தபோது, அவனது கூடையில் அவனது கண்கள் விழுந்தன. பிறகு சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “நாளை நீர் பழங்களைச் சேகரிக்கலாம். உமது வசதிக்காக நான் உமது கோடரியைச் சுமந்து வருவேன்" என்றாள். பிறகு அந்தக் கூடையை ஒரு மரத்தின் கிளையில் தொங்கவிட்டு, கோடரியை எடுத்துக் கொண்ட அவள், தனது கணவனை மீண்டும் அணுகினாள். அழகிய தொடைகள் கொண்ட அந்தப் பெண், தனது கணவனின் இடது கரத்தைத் தனது இடது தோளில் வைத்து, தனது வலக்கரத்தால் அவனை அணைத்துக் கொண்டு, யானை போல நடக்கத் தொடங்கினாள்.
பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஓ! பயந்தவளே, பழக்கத்தினால் (காட்டு) வழிகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும், மரத்தினூடே வரும் நிலவின் ஒளியால் அதை நான் காண முடிகிறது. இப்போது நாம், பழங்கள் சேகரிக்கக் காலையில் வந்த அதே பாதையை அடைந்திருக்கிறோம். ஓ! மங்களகரமானவளே, நாம் வந்த வழியிலேயே செல்; இனியும் நீ நமது பாதையைக் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. பலாச மரம் அடர்ந்த இந்தப் பாதையின் அருகில் இரண்டு வழிகள் பிரிகின்றன. அதற்கு வடக்கே இருக்கும் பாதையில் நீ செல்வாயாக. நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். எனது பலத்தையும் மீண்டும் அடைந்துவிட்டேன். என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன்!” என்றான். இதைச் சொன்ன சத்யவான் ஆசிரமத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.