The joy of Dyumatsena! | Vana Parva - Section 296 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
தியுமத்சேனனுக்குப் பார்வை கிடைத்தது; மகன் சத்யவான் திரும்பாததால் அந்த முதிர்ந்த மன்னனும் அவனது மனைவியும் அவனைத் தேடிக் காடெங்கும் அலைந்தது; பிறகு ஆசிரமவாசிகள் அவர்களைத் திரும்ப ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து, சத்யவான் உயிரோடுதான் இருப்பான் என்று ஆறுதல் வார்த்தை கூறியது; சத்யவானும் சாவித்ரியும் ஆசிரமம் திரும்பியது; தியுமத்சேனன் மூன்று மடங்கு செழிப்பை அடைந்ததாக முனிவர்கள் வாழ்த்துவது; முனிவர்கள் சாவித்ரியிடம் உண்மையை விசாரித்தது; உண்மையைச் சொன்ன சாவித்ரி...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், பலமிக்கத் தியுமத்சேனன் தனது பார்வையை மீண்டும் பெற்றதால் {அவனுக்கு} அனைத்தையும் பார்க்க முடிந்தது. அவனது பார்வை தெளிவடைந்ததும், அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவனுக்குத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பிறகு தனது மனைவி சைப்பியையுடன் (அக்கம்பக்கத்து) ஆசிரமங்களில் தனது மகனை {சத்யவானைத்} தேடிய அவன் {தியுமத்சேனன்}, அவன் {தனது மகன்} நிமித்தம் மிகுந்த மன வேதனையை அடைந்தான். அந்த இரவில் அந்த முதிர்ந்த ஜோடி, ஆசிரமங்களிலும், நதிகளிலும், காடுகளிலும், தடாகங்களிலும் {தங்கள் மகன் சத்யவானைத்} தேடினர். ஏதாவது ஓர் ஒலி அவர்களுக்குக் கேட்டால், உடனே தங்கள் தலைத் தூக்கி, தன் மகன்தான் வருகிறானோ என்ற அவலில், “ஓ! அதோ சாவித்ரியோடு சத்யவான் வருகிறான்" என்றனர். அங்கேயும் இங்கேயும் பைத்தியக்காரர்களைப் போல விரைந்ததில், கிழிந்தும், உடைந்தும், காயப்பட்டும், தர்ப்பைப் புற்களாலும், முட்களால் தைக்கப்பட்டும் இருந்த அவர்களது பாதங்களில் இரத்தம் பெருகியது.
பிறகு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த அந்தணர்கள் அனைவரும் அவர்களிடம் வந்து, சுற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை அவர்களுடைய ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கே தனது மனைவியுடன் {மனைவி சைப்பியுடம்} கூடிய தியுமத்சேனன் முதிர்ந்த துறவிகளால் சூழப்பட்டு, பழங்காலத்தின் ஏகாதிபதிகளுடைய கதைகளால் மகிழ்வூட்டப்பட்டனர். தங்கள் மகனை {சத்யவானைக்} காணவிரும்பிய அந்த முதிர்ந்த ஜோடி {இதனால்} ஆறுதலடைந்தாலும், தங்கள் மகனின் இளமை நிறைந்த நாட்களை நினைத்துப் பார்த்த அவர்கள் மிகவும் வருந்த தொடங்கினர். துயரத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் பரிதாபகரமான குரலில், “ஐயோ, ஓ! மகனே {சத்யவானே}, ஐயோ!, ஓ! மருமகளே {சாவித்ரியே}, நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று புலம்பத் தொடங்கினர்.
பிறகு உண்மை நிறைந்த அந்தணரான சுவார்ச்சஸ் என்பவர் அவர்களிடம், "சாவித்ரியின் தவங்களையும், சுய ஒடுக்கத்தையும், நடத்தையையும் கருத்தில் கொண்டால், சத்யவான் வாழ்கிறான் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை!” என்றார். பிறகு கௌதமர் {மன்னன் தியுமத்சேனன் மற்றும் அவன் மனைவி சைப்பியிடம்}, “நான் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றிருக்கிறேன். மேலும் நான் பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறேன். மேலும் நான் பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பயின்று ஒரு மணமாகாதவனாகவே வாழ்ந்திருக்கிறேன். நான் அக்னியையும் பெரியவர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறேன். குவிந்த ஆன்மாவுடன் நான் பல நோன்புகளையும் நோற்றிருக்கிறேன். நான் அடிக்கடி விதிப்படி காற்றை மட்டுமே உண்டும் வாழ்ந்திருக்கிறேன். இந்தத் தவத்தகுதியின் அறத்தால், நான் மற்றவர்களின் செயல்களை அறிந்திருக்கிறேன். எனவே, சத்யவான் வாழ்கிறான் என்பதில் நீங்கள் உறுதியடையுங்கள்" என்றார்.
அதன்பின் அவரது சீடர் ஒருவர், “என் குருவின் உதடுகளில் இருந்து விழுந்த வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது. எனவே சத்யவான் நிச்சயம் உயிரோடு இருக்கிறான்" என்றார். மேலும் அந்த முனிவர் {கௌதமர்}, “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரி கொண்டிருக்கும் மங்களக் குறிகளைக் கருத்தில் கொண்டால், அவை அனைத்தும் அவள் விதவைக்கோலத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றிருக்கிறாள் என்பதைக் காட்டுகின்றன. எனவே, சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை" என்றார். பிறகு பரத்வாஜர், “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரியின் தவத்தகுதி, சுய ஒடுக்கம், மற்றும் நடத்தையைக் கருதினால், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை" என்றார். பிறகு தால்பியர், “நீ பார்வையை மீண்டும் அடைந்திருப்பதாலும், சாவித்ரி உணவருந்தாமல் தனது நோன்பை நிறைவேற்றிச் சென்றிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
பிறகு ஆபஸ்தம்பர், “அனைத்துப் புறங்களிலும் சூழ்நிலை அமைதியாக இருப்பதால் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் குரல்கள் கேட்கப்படுகின்றன. அந்த ஒலிப்பின் அமைப்பும், நீர் பார்வையை மீண்டும் பெற்றிருக்கும் காரணமும், உலகம் சார்ந்த காரியங்களுக்காக நீர் மீண்டும் ஒருமுறை பயன்படப்போகிறீர் என்பதைக் குறிக்கின்றன. சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை" என்றார். பிறகு தௌமியர், “உமது மகன் அனைத்து அறங்களையும் கொண்டிருப்பதாலும், அவன் அனைவராலும் விரும்பப்படுவதாலும், நீண்ட வாழ்நாளுக்கான குறிகளை அவன் மேனியில் தாங்கியிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி உண்மை பேச்சுக் கொண்ட அந்தத் துறவிகளால் உற்சாகமூட்டப்பட்ட தியுமத்சேனன், அந்தக் காரணங்களை ஆராய்ந்து சிறிது ஆறுதல் அடைந்தான். பிறகு, சிறிது நேரம் கழித்து, அந்த இரவில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரி தனது கணவன் சத்யவானுடன் அந்த ஆசிரமத்தை அடைந்து, அதற்குள் நுழைந்தாள். பிறகு அந்த அந்தணர்கள், “ஓ! பூமியின் தலைவா {தியுமத்சேனா}, உமது மகனுடனான இச்சந்திப்பையும், உமது கண்பார்வை மீட்பையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மை வாழ்த்துகிறோம். உமது மகனுடனான சந்திப்பும், உமது மருமகளின் காட்சியும், உமது பார்வை மீட்பும் என நீர் மூன்று மடங்கு செழிப்பை அடைந்துவிட்டீர். நாங்கள் சொன்ன அனைத்தும் நடந்தே தீரும்; அதில் சந்தேகம் இல்லை. எனவே, விரைவில் வளமையில் வளர்வீர்களாக!” என்றனர்.
பிறகு, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு பிறப்பாளர்கள் {பிராமணர்கள்} நெருப்பை மூட்டி மன்னன் தியுமத்சேனன் முன்பு அமர்ந்தார்கள். தங்கள் இதயத்தில் இருந்த துன்பங்களைக் களைந்து தனியே நின்று கொண்டிருந்த சைப்யை, சத்யவான் மற்றும் சாவித்ரி ஆகியோர் அவர்களின் {இருபிறப்பாளர்கள் மற்றும் தியுமத்சேனரின்} அனுமதியின் பேரில் கீழே அமர்ந்தனர். பிறகு ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியுடன் {தியுமத்சேனனுடன்} அமர்ந்திருந்த அந்தக் கானகவாசிகள் {இருபிறப்பாளர்கள் = அந்தணர்கள்}, ஆவலால் தூண்டப்பட்டு, மன்னனின் {தியுமத்சேனனின்} மகனிடம் {சத்யவானிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே, உனது மனைவியுடன் நீ ஏன் முன்பே வரவில்லை? இரவில் இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய்? என்ன தடை உன்னைத் தடுத்தது? ஓ! மன்னனின் மகனே {சத்யவானே}, எங்களுக்கும், உனது தந்தை மற்றும் தாய்க்கும் இத்தகு அச்சத்தை ஏன் ஏற்படுத்தினாய் என்பதை நாங்கள் அறியவில்லை. இவை அனைத்தையும் நீங்கள் எங்களுக்குச் சொல்வதே தகும்" என்று கேட்டனர்.
அதன் பிறகு சத்யவான், “எனது தந்தையின் அனுமதி பெற்ற நான், சாவித்ரியுடன் காட்டுக்குச் சென்றேன். அந்தக் காட்டில் நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்த போது, என் தலையில் வலியை உணர்ந்தேன். அந்த வலியின் விளைவாக, நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். இவையே என் ஞாபகத்தில் இருக்கின்றன. (என் நிமித்தமாக) நீங்கள் அனைவரும் துக்கப்படும்படி இரவில் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணமாக அமைந்த இவ்வளவு நீண்ட உறக்கத்தை நான் இதுவரை உறங்கியதில்லை. இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை" என்றான். பிறகு கௌதமர் {சத்யவானிடம்}, “உனது தந்தைக்குக் கிடைத்த திடீர் பார்வை மீட்பைக் குறித்து நீ அறியவில்லை. எனவே, சாவித்ரி இதை விவரிப்பதே தகும். {பிறகு கௌதமர் சாவித்ரியைப் பார்த்து}, நன்மை, தீமை ஆகியவற்றின் புதிர்களை நிச்சயம் நீ நன்கு அறிந்திருக்கிறாய். எனவே, நான் (உன்னிடமிருந்து) அதைக் கேட்க விரும்புகிறேன். மேலும், ஓ! சாவித்ரி, பிராகசத்தினால் நீ சாவித்ரி தேவியைப் போன்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இதன் காரணத்தை நீ அறிந்திருக்க வேண்டும். எனவே, உண்மையை நீ உரைப்பாயாக! அது ரகசியமாக வைக்கப்பட வேண்டியதில்லை என்றால், நீ எங்களுக்கு அதை விவரிக்கலாம்!” என்றார்.
கௌதமரின் இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “நீங்கள் கணித்தது போலத்தான் உள்ளது. உங்கள் விருப்பம் நிச்சயம் ஈடேறாமல் இருக்காது. நான் வைத்துக் கொள்வதற்கு என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. எனவே உண்மையைக் கேளுங்கள்! உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} நாரதர் எனது கணவரின் மரணத்தை முன்னுரைத்தார் {கணித்திருந்தார்}. கணிக்கப்பட்ட அந்த நாள் இன்றுதான். எனவே, எனது கணவனின் துணையில் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் உறக்கத்தில் விழுந்தது, தனது தூதர்களுடன் வந்த யமன், அவர் முன்னிலையில் தன்னைக் காட்டி, அவரைக் கட்டி, பித்ருக்கள் வசிக்கும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அதன்பேரில் நான் அந்தத் தலைசிறந்த தேவனைப் உண்மை நிறைந்த வார்த்தைகளால் புகழ்ந்தேன். அவன் {யமன்} எனக்கு ஐந்து வரங்களை அளித்தான். அவற்றை என்னிடம் இருந்து நீங்கள் கேட்பீராக!
எனது மாமனாருக்காக {தியுமத்சேனருக்காக}, அவரது பார்வை மீட்பு மற்றும் நாடு மீட்பு ஆகிய இரண்டு வரங்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது தந்தையும் {அஸ்வபதியும்} நூறு மகன்களைப் பெற்றார். {எனது மற்றொரு வரத்தால்} நானும் எனக்கு நூறு மகன்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது கணவரான சத்யவான் நானூறு வருட வாழ்வைப் பெற்றார். எனது கணவரின் உயிருக்காகவே நான் அந்த நோன்பை நோற்றேன். இப்படியே இந்த எனது பெரும் பேரிடர், பிறகு மகிழ்ச்சியாக மாறிய காரணத்தை விரிவாக உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றாள். அதற்கு முனிவர்கள், “ஓ! சிறந்த மனநிலையும், நோன்புகள் நோற்றலும், அறமும், சிறப்புமிக்கக் குலமும் கொண்ட கற்புடைய பெண்ணே {சாவித்ரியே}, பேரிடர்களில் மூழ்கி, இருள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்த மன்னர்களில் முதன்மையானவனின் குலம் உன்னால் மீட்கப்பட்டது!” என்றார்கள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பெண்களில் சிறந்தவளை {சாவித்ரியைப்} பாராட்டி வணங்கிய அந்த முனிவர் கூட்டம், அந்த மன்னர்களில் முதன்மையானவனிடமும் {தியுமத்சேனனிடமும்}, அவனது மகனிடமும் {சத்யவானிடமும்} விடைபெற்றுக் கொண்டர். அவர்களை {தியும்தசேனன் குடும்பத்தை} வணங்கிய அவர்கள் {துறவிகள்} உற்சாகமான இதயங்களோடு அமைதியாகத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.