The Salwa regained his country! | Vana Parva - Section 297 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
தியுமத்சேனின் எதிரி, அவனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்று சால்வ நாட்டு மக்கள் வந்து சொல்வது; தியுமத்சேனன், தனது மகன் சத்யவான் மருமகள் சாவித்ரி மற்றும் மனைவி சைப்பியுடம் தனது நாட்டுக்குத் திரும்புவது; பட்டமேற்பது; சாவித்ரிக்கு தான் பெற்ற வரங்கள் பலிதமாவது; சாவித்ரியின் கதையைக் கேட்பதால் விளையும் நன்மை...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இரவு கழிந்து, சூரிய உருண்டை உதித்த போது, அந்தத் துறவிகள், தங்கள் காலைச் சடங்குகளை முடித்து ஒன்றாகக் கூடினார்கள். அந்த வலிமைமிக்கத் துறவிகள் என்னதான் மீண்டும் மீண்டும் சாவித்ரியின் உயர்ந்த நற்பேறைக் குறித்துத் தியுமத்சேனனிடம் பேசினாலும் அவர்கள் மனநிறைவு கொள்ளவே இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்போது, சால்வத்திலிருந்து பெரிய மக்கள் கூட்டம் ஒன்று அந்த ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. தியுமத்சேனனின் எதிரி, தனது சொந்த அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்ற செய்தியை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். நாட்டை அபகரித்தவன் தனது நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் சேர்ந்து, தனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான், அவனது துருப்புகளும் ஓடின என்பதைக் கேள்விப்பட்ட குடிமக்கள் அனைவரும் (முறைவழியிலான தங்கள் மன்னனின் சார்பில் நின்று), “கண்ணுள்ளவனோ, அது இல்லாதவனோ {குருடனோ}, அவனே {தியுமத்சேனனே} எங்கள் மன்னனாக இருக்க வேண்டும்" என்று எப்படி ஒருமனதுடன் சொல்லினர் என்பதையும் அவர்கள் சொன்னார்கள்.
மேலும் அவர்கள், “அந்தத் தீர்மானத்தின் விளைவாகவே நாங்கள் உம்மிடம் அனுப்பப்பட்டுள்ளோம். இந்தத் தேரும், நால்வகை அணிகளைக் கொண்ட இந்தப் படையும் உமக்காகவே இங்கே வந்திருக்கின்றன! ஓ! மன்னா {தியுமத்சேனா}, உமக்கு நன்மை விளையட்டும். வருவீராக! நீரே நகரில் {மன்னனாக} அறிவிக்கப்பட்டிருக்கிறீர்! உமது தந்தைக்கும், பாட்டனுக்கும் சொந்தமான உமது நிலையை {அரியணையை} எப்போதும் நிரப்புவீராக!” என்றனர். பார்வை அடைந்து, நல்ல உடல்நிலை கொண்டிருக்கும் மன்னனைக் {தியுமத்சேனனைக்} கண்ட அவர்கள், தங்கள் சிரம் தாழ்த்தினர்; அவர்களது விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. பிறகு அந்த ஆசிரமத்தில் வசித்த முதிர்ந்தவர்களையும் அந்தணர்களையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது நகருக்குக் கிளம்பினான். சைப்யை, சாவித்ரி மற்றும் படைவீரர்களால் சூழப்பட்டு, மனிதர்களின் தோளால் தாங்கப்பட்ட, நல்ல விரிப்புகள் கொண்ட வாகனத்தில் {பல்லக்கில்} அவன் {தியுமத்சேனன்} சென்றான்.
மகிழ்ச்சி நிறைந்த இதயங்கள் கொண்ட புரோகிதர்கள் அரியணையில் தியுமத்சேனனையும், பட்டத்து இளவரசனாக அவனது {தியுமத்சேனனின்} உயரான்ம மகனையும் {சத்யவானையும்} நிறுவினர். பிறகு நீண்ட காலம் சென்றதும், சால்வ குலத்தின் புகழை மேம்படுத்தும் வகையில் போர்க்களத்தில் பின்வாங்காத போர்க்குணமிக்க நூறு மகன்களைச் சாவித்ரி பெற்றாள். மேலும் அவள் {சாவித்ரி}, {தனது தாய்} மாளவியிடம் மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான {தனது தந்தை} அஸ்வபதி மூலம் பிறந்த நூறு பலமிக்க உடன்பிறப்புகளான {தனது} சகோதரர்களையும் அடைந்தாள். இப்படியே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, சாவித்ரி, தன்னையும், தன் தந்தை மற்றும் தாயையும் தனது மாமனார் மற்றும் மாமியாரையும், தனது கணவனின் குலத்திதையும் பரிதாபகரமான அவலநிலையில் இருந்து உயர்ந்த நற்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தினாள். அந்த மென்மையான பெண்ணான சாவித்ரியைப் போலவே, அற்புத குணம் கொண்ட இந்த மங்களகரமான துருபதன் மகளும் {திரௌபதியும்}, உங்கள் அனைவரையும் மீட்பாள்" என்றார் {மார்க்கண்டேயர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} துறவியால் {மார்க்கண்டேயரால்} தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துன்பத்திலிருந்து மனம் விடுபட்டு, காம்யக வனத்தில் தொடர்ந்து வாழலானான். சாவித்ரி குறித்த இந்தச் சிறந்த கதையை மதிப்புடன் கேட்கும் ஒரு மனிதன், அனைத்திலும் வெற்றியையும், மகழ்ச்சியையும் அடைந்து, துன்பத்தை எப்போதும் சந்திக்காமல் இருப்பான்!” என்றார் {வைசம்பாயனர்}.
பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் இந்தப் பகுதியுடன் முடிந்து, அடுத்தப் பகுதியிலிருந்து குண்டலா ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் கங்குலி பதிவிரதா மஹாத்மியப் பர்வம் என்றே தொடர்கிறார். குண்டலா ஹரணம் என்ற பர்வத்தையே அவர் சுட்டவில்லை. எனவே, நாமும் கங்குலியின் வழியே செல்கிறோம்.
பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் இந்தப் பகுதியுடன் முடிந்து, அடுத்தப் பகுதியிலிருந்து குண்டலா ஹரணப் பர்வம் தொடங்க வேண்டும். ஆனால் கங்குலி பதிவிரதா மஹாத்மியப் பர்வம் என்றே தொடர்கிறார். குண்டலா ஹரணம் என்ற பர்வத்தையே அவர் சுட்டவில்லை. எனவே, நாமும் கங்குலியின் வழியே செல்கிறோம்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.