The command of Kuntibhoja to Kunti! | Vana Parva - Section 301 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
குந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன? அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை? அந்தக் கவசம் என்ன வகை? அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன்! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
பெரும் துறவுத்தகுதி கொண்ட அந்த மனிதர் மன்னன் குந்திபோஜனிடம், “ஓ கர்வமற்றவனே {குந்திபோஜா}, உணவை உன்னிடம் பிச்சையாகப் பெற்று, உனது இல்லத்தில் விருந்தினனாக வாழ விரும்புகிறேன்! உனது தொண்டர்களோ, நீயோ எப்போதும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்! ஓ! பாவமற்றவனே {குந்திபோஜா}, இதில் உனக்கு விருப்பமென்றால், நான் உனது இல்லத்தில் வாழ்வேன்! நான் விரும்பும் போது உனது இருப்பிடத்தில் இருந்து செல்வேன்; விரும்பும்போது திரும்பவும் வருவேன். ஓ! மன்னா {குந்திபோஜா}, எனது உணவிலோ, படுக்கையிலோ யாரும் எனக்குக் குற்றமிழைக்கக்கூடாது" என்றார்.
பிறகு குந்திபோஜன் அவரிடம் உற்சாகமான வார்த்தைகளால், “அப்படியே ஆகட்டும். இன்னும் சிறப்பாக ஆகட்டும்" என்றான். பிறகு அவன் அவரிடம் மீண்டும், “ஓ பெரும் ஞானியே, எனக்குப் பிருதை {குந்தி} என்ற பெயரில் சிறப்புவாய்ந்த மகளொருத்தி இருக்கிறாள். அவள், நோன்பு நோற்று, கற்பு, கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள், அற்புத குணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். அவள் உம்மைக் கவனித்துக் கொண்டு, உமக்குத் தேவையானதை மரியாதையுடன் செய்வாள். அவளது மனநிலையைக் கண்டு நீர் மகிழ்ச்சியடைவீர்!” என்றான். அந்த அந்தணரிடம் இப்படிச் சொல்லி, அவரை முறையாக விருந்தோம்பிய மன்னன் {குந்திபோஜன்}, அகன்ற கண்களுடைய தனது மகள் பிருதையிடம் சென்று, “ஓ குழந்தாய், பெரிய பக்திமானான இந்த அந்தணர் எனது இல்லத்தில் வசிக்க விரும்புகிறார். ஓ குழந்தாய், உனது தகுதி மற்றும் பணிவிடை செய்யும் திறன் ஆகியவற்றை நம்பி, அவரது கோரிக்கையை "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி நான் ஏற்றுக் கொண்டேன். எனவே எனது வார்த்தைகள் பொய்க்காதபடி நடந்து கொள்வதே உனக்குத் தகும். வேத கல்வியில் ஈடுபட்டு தவத்தகுதியைக் கொண்டிருக்கும் இந்த மரியாதைக்குரிய அந்தணர் என்ன கேட்டாலும் அதைச் சுறுசுறுப்பாகச் செய். இந்த அந்தணர் கேட்கும் எதுவும் உற்சாகத்துடன் கொடுக்கப்படட்டும். ஓர் அந்தணன் என்பவர் தலைமையான ஆற்றலுக்கு உருவகமாக உள்ளார். உயர்ந்த தவத்தகுதியின் உருவகமாகவும் அவர் உள்ளார். அந்தணர்களின் அறப்பயிற்சிகளின் தொடர்ச்சியாகவே வானத்தில் சூரியன் ஒளிர்கிறது. மரியாதைக்குத் தகுதியுடைய அந்தணர்கள் அவமதிக்கப்பட்டதாலேயே, பலமிக்க அசுரன் வாதாபியும், தாலஜங்கனும் அந்தண சாபத்தால் அழிக்கப்பட்டனர். ஓ குழந்தாய், தற்போது அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த அறம்சார்ந்தவரே உனது பராமரிப்பில் விடப்பட்டுள்ளார்.
நீ எப்போதும் இந்த அந்தணரைக் குவிந்த மனதுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓ மகளே {குந்தி}, அந்தணர்களையும், பெரியோர்களையும், உறவினர்களையும், பணியாட்களையும், நண்பர்களையும் உனது குழந்தைப்பருவத்தில் இருந்து நீ எப்படி உனது தாய்மாரைப் போலவும், என்னைப் போலவும் நினைத்துக் கவனித்து வருகிறாய் என்பதை நான் அறிவேன். உன்னை நீயே நன்று தாங்கிக் கொள்வாய் என்றும், அனைவருக்கும் சரியானதை அளிப்பாய் என்றும் நான் அறிவேன். ஓ குற்றமில்லா அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, எனது நகரத்திலும் அந்தப்புரத்திலும் உனது நடத்தையில் அதிருப்தி கொண்டோர் பணியாட்களுக்கு மத்தியில் கூட இருக்கமாட்டார்கள். எனவே, கோபக்கார அந்தணர்களுக்காகக் காத்திருப்பதற்கு நீயே தகுதியானவள் என்று நினைத்தேன்.
ஓ பிருதை, நீ ஒரு பெண். என்னால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டு வருபவள். நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவள். நீ சூரனுக்குப் பிடித்தமான மகள். ஓ பெண்ணே {குந்தி}, உன்னை உனது தந்தை எனக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தார். பிறப்பால் வசுதேவனுக்குத் தங்கையான நீ எனது குழந்தைகளில் முதன்மையானவள் ஆவாய். “எனக்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கொடுப்பேன்" என்று உறுதி கூறிய உனது தந்தை, நீ குழந்தையாக இருக்கும்போதே உன்னை என்னிடம் கொடுத்தார். அதன்காரணமாகவே நீ எனது மகளாக இருக்கிறாய். அத்தகு குலத்தில் பிறந்து, இத்தகு குலத்தில் வளர்க்கப்பட்ட நீ ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்து மறு மகிழ்ச்சியான நிலைக்கு வந்து ஒரு தாமரையில் இருந்து மறுதாமரைக்கு மாற்றப்பட்டவள் போல இருக்கிறாய்.
ஓ மங்களகரமான பெண்ணே, குறிப்பாக இழிந்த வகையில் பிறந்த பெண்களைச் சிரமத்துடன் பாதுகாத்தாலும், அவர்களது முதிராத வயதின் தொடர்ச்சியாக நடத்தை கெடுகிறார்கள். ஆனால், ஓ பிருதை, நீ அரச குலத்தில் பிறந்து, அழகால் இயல்புக்குமிக்க நிலையில் இருக்கிறாய். ஓ பெண்ணெ, மேலும் நீ அனைத்தையும் கொண்டிருக்கிறாய். எனவே, ஓ மங்கையே, பெருமை, கர்வம், சுயமுக்கியத்துவம்ஆகிய உணர்வுகளைக் கைவிட்டு, வரமளிக்கும் அந்தணரை வழிபட்டு அவருக்காகக் காத்திருந்து, அதனால், ஓ பிருதை மங்களகரமான நிலையை அடைவாயாக! ஓ மங்களகரமான பாவமற்ற பெண்ணே, அப்படி நடந்து கொண்டால், நீ நிச்சயம் மங்களகரமான நிலையை அடைவாய்! ஆனால் மாறாக, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் கோபத்தைத் தூண்டினாலோ, எனது மொத்த குலமும் அவரால் எரிக்கப்படும்!” என்றான் குந்திபோஜன்.
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.