Karna floated in river Aswa! | Vana Parva - Section 306 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
கவசத்துடனும் காதுகுண்டலங்களுடனும் குந்திக்குக் குழந்தை பிறந்தது; குந்தி குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து அஸ்வ நதிக்கு எடுத்துச்சென்று அழுது புலம்பியது; குந்தி அப்பெட்டியை அஸ்வ நதியில் விட்டது; பெட்டி அஸ்வநதியிலிருந்து கங்கைக்கு மிதந்து சென்று சம்பா என்ற நகரத்தை அடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, வளர்பிறை முதல்நாளில் {பிரதமையில்}, வருடத்தின் பத்தாவது மாதத்தில் {தை மாதத்தில்}, {on the first day of the lighted fortnight during the tenth month of the year }, ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் தலைவன் {சூரியன்} மூலம் பிருதைக்குக் {குந்திக்கு} கருவுண்டானது. சிறந்த இடைகள் {excellent hips} கொண்ட அந்தக் காரிகை {குந்தி}, நண்பர்களிடம் கொண்ட பயத்தின் காரணமாக, யாரும் தன் நிலையை அறியாதவண்ணம் தான் கருவுற்றிருப்பதை மறைத்தாள். அந்தக் காரிகை {குந்தி}, தனது நிலையைக் கவனமாக மறைத்து, கன்னியருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிலேயே முழுவதும் வாழ்ந்த போது, அவளது {குந்தியின்} செவிலியைத் {Nurse} தவிர {வளர்ப்புத்தாயைத் தவிர என்றும் சில பதிப்புகளில் இருக்கின்றன} வேறு யாரும் அந்த உண்மையை {அவளது உண்மை நிலையை} அறியவில்லை. தெய்வத்தின் அருளால், அந்த அழகிய கன்னிகை, குறித்த நேரத்தில் தேவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
அக்குழந்தை, தனது தந்தையை {சூரியனைப்} போலவே கவசத்துடனும், பிரகாசமான காது குண்டலங்களுடனும் இருந்தான். அவன் சிங்கம் போன்ற கண்களும், காளையைப் போன்ற தோள்களும் கொண்டிருந்தான். குழந்தையைப் பெற்றவுடனேயே, அந்த அழகிய பெண், தனது செவிலியிடம் ஆலோசித்து, மென்மையான விரிப்பும், விலையுயர்ந்த தலையணையும் செடிநார் வேலைப்பாட்டுடனும் கூடிய ஒரு வசதியான {தாராளமான இடம் கொண்ட} மென்மையான பெட்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அதன் மேற்பரப்பு மெழுகால் {தேன்மெழுகால்} தீட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டியை ஒரு வளமான மூடி பொதிந்திருந்தது. கண்களில் கண்ணீருடன் அவள் {குந்தி} அந்தக் குழந்தையை அஸ்வ நதிக்குச் சுமந்து சென்று, அந்தக் கூடையை அதன் {அந்நதியின்} நீரில் அனுப்பினாள். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெறுவது முறையற்றது என்பதை அவள் {குந்தி} அறிந்திருந்தாலும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பெற்ற பாசத்தால் அவள் பரிதாபகரமாக அழுதாள். அப்படி அஸ்வ நதியின் நீரில் பெட்டியை அனுப்பிய போது அழுது கொண்டே குந்தி சொன்ன வார்த்தைகளை {ஜனமேஜயா} நீ கேட்பாயாக!”
“ஓ! குழந்தாய், நிலம், நீர், ஆகாயம் மற்றும் தெய்வீகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவர் கையாலும் உனக்கு நன்மையே நேரிடட்டும். உனது பாதைகள் அனைத்தும் மங்களகரமானவையாக இருக்கட்டும்! எந்த ஒருவரும் உன் வழியைத் தடை செய்யாதிருக்கட்டும்! ஓ! மகனே, உன்னைக் கடக்க நேரிடும் அனைவரின் இதயங்களும் உன்னிடம் பகை கொள்ளாதிருக்கட்டும்! நீர்நிலைகளின் தலைவன் வருணன், உன்னை நீரில் பாதுகாக்கட்டும்! வானத்தை அதிகாரம் செய்யும் தெய்வம் உன்னை வானத்தில் முழுவதும் பாதுகாக்கட்டும்! ஓ! மகனே, விதியால் விதிக்கப்பட்டதற்கேற்ப நான் யாரிடம் உன்னைப் பெற்றேனோ அந்த வெப்பம் வெளியிடுபவர்களில் சிறந்தவரும், உனது தந்தையுமான சூரியன், உன்னை அனைத்து இடங்களிலும் காக்கட்டும்! ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருதர்கள், திசைப்புள்ளிகளுடன் கூடிய பெரும் இந்திரன், அவர்களுக்குத் தலைமையாக ஆள்பவர்கள் ஆகியோரும், தேவர்கள் அனைவரும் உன்னை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கட்டும்! இந்த உனது கவசத்தால் நான் அந்நிய நிலங்களிலும் உன்னை அடையாளங்காண்பேன்!
ஓ! மகனே, உனது தந்தையும், பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வீகமானவருமான சூரியன், ஓடையில் சென்று கொண்டிருக்கும் உன்னைத் தனது தெய்வீகப் பார்வையால் காண்பவராக இருப்பதால் அவர் நிச்சயம் அருளப்பட்டவரே! ஓ! தேவனால் பெறப்பட்டவனே {மகனே}, நீ தாகமடையும்போது உனக்கு உறிஞ்சக் கொடுப்பவளும் {பால் கொடுப்பவளும்}, உன்னை மகனாகக் கொள்பவளுமான மங்கையும் அருளப்பட்டவளே. தெய்வீக கவசத்தாலும், தெய்வீக காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர்களைப் போன்ற அகன்ற கண்களும், மெருகிடப்பட்ட தாமிரத்தைப் போன்றோ, தாமரை இதழ்களைப் போன்ற நிறமும், அழகிய நெற்றியும், சுருள் முனை கொண்ட முடியும் கொண்ட உன்னைத் தனது மகனாக ஏற்கப் போகிறவள் எப்பேற்பட்ட நற்கனவைக் கண்டிருப்பாளோ. ஓ! மகனே, தரையில் தவழ்ந்து, புழுதி பூசி, விளங்காத இனிமையான மழலைச் சொற்களை உச்சரிக்கும் உன்னைக் காண்பவள் நிச்சயம் அருளப்பட்டவளே! ஓ! மகனே, இமயத்தின் காடுகளில் பிறந்த சிங்கத்தைப் போல உயர்ந்த இளமையை நீ அடைவதைக் காணப் போகும் அவள் நிச்சயம் அருளப்பட்டவளே!” {என்று சொல்லி அழுதாள் குந்தி}.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி நீண்ட நேரம் பரிதாபகரமாகப் புலம்பியழுத பிருதை {குந்தி}, அந்தக் கூடையை அஸ்வ நதியின் நீரில் வைத்தாள். தன் மகன் நிமித்தமாகத் துயர் கொண்டு பெரிதும் அழுத அந்தத் தாமரைக்கண் காரிகை {குந்தி}, தனது மகனை அடிக்கடி காண விரும்பினாலும், நள்ளிரவில் அந்தக் கூடையை விட்டுவிட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்ன நடந்தது என்பதைத் தனது தந்தை அறிந்து விடுவானோ என்று பயந்து கொண்டே, தனது செவிலியுடன் மீண்டும் மாளிகையை அடைந்தாள். அதே வேளையில், அந்தக் கூடை அஸ்வ நதியில் இருந்து சர்மண்வதி நதிக்கும், பிறகு சர்மண்வதியில் இருந்து யமுனைக்கும், அங்கிருந்து கங்கைக்கும் என மிதந்து கொண்டே கடந்து சென்றது. குழந்தையைக் கொண்டிருந்த அந்தக் கூடை, கங்கையின் அலைகளால் சுமந்து செல்லப்பட்டுச் சூத குலத்தவன் ஆளும் சம்பா என்ற ஒரு நகரத்தை அடைந்தது. தன் உடல் அணிந்திருந்த அந்தச் சிறந்த கவசத்தாலும், அமிர்தத்தாலான அந்தக் காது குண்டலங்களாலும், விதியால் இப்படி விதிக்கப்பட்டதாலுமே உண்மையில் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.