Kunti knew whereabouts of Karna! | Vana Parva - Section 307 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
கங்கையில் மிதந்து வந்த பெட்டியை ராதை எடுப்பது; அதிரதன் அப்பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்தது; ராதை கர்ணனைத் தனது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டது; கர்ணன் அங்க தேசத்தில் வளர்வது; ஒற்றர்கள் மூலம் குந்தி கர்ணனைக் குறித்து அறிவது; இளைஞனானதும் கர்ணன் ஹஸ்தினாபுரம் வருவது; துரியோதனனுடன் கர்ணனுக்கு ஏற்பட்ட நட்பு; கர்ணன் பெரும் வில்லாளி என உலகம் புகழ்வது; அர்ஜுனனிடம் கர்ணனுக்கு ஏற்பட்ட போட்டி மனப்பான்மை; கர்ணனிடம் வந்த இந்திரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் என்ற பெயர் கொண்ட ஒரு சூதன், தனது மனைவியுடன் கங்கையாற்றுக்கு வர நேர்ந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த அவனது {அதிரதனின்} மனைவியின் பெயர் ராதை ஆகும். அந்த உயர்ந்த அருள் பெற்ற காரிகை {ராதை}, ஒரு மகனை அடைய பெரும் முயற்சி செய்திருந்தாலும், ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, அப்படி ஒருவனைப் {ஒரு மகனைப்} பெறுவதில் தோல்வியுற்றிருந்தாள். கங்கையாற்றுக்கு வந்த அவள் {ராதை}, நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்டாள். ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடனும், களிம்புகளுடனும் {மருந்துகளுடனும்} இருந்த அப்பெட்டியை ஜானவியின் {கங்கையின்} அலைகள் அவளிடம் {ராதையிடம்} கொண்டு வந்து சேர்த்தன. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் {ராதை}, அதைப் பிடிக்கச் செய்தாள். பிறகு அவள் தேரோட்டி சாதியைச் சேர்ந்த {தனது கணவன்} அதிரதனுக்கு அனைத்தையும் உரைத்தாள். இதைக்கேட்ட அதிரதன் நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து, {சில} கருவிகளைக் கொண்டு அதைத் திறந்தான். அவன் அதில் {அப்பெட்டியில்} காலைச் சூரியனைப் போன்ற பிள்ளையைக் கண்டான். அந்தக் குழந்தை தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்தது. அதன்பிறகு அந்தத் தேரோட்டியும், அவனது மனைவியும் {ராதையும்} இத்தகு ஆச்சரியத்தால் தாக்கப்பட்டு, அதிசயத்தால் தங்கள் கண்களை அகல விரித்தனர். அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்திக் கொண்ட அதிரதன் தனது மனைவியிடம் {ராதையிடம்}, “ஓ! அச்சமுள்ள பெண்ணே {ராதை}, நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதேயில்லை. நம்மிடம் வந்திருக்கும் இந்தக் குழந்தை தெய்வீகப் பிறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். உண்மையில், மகனற்ற எனக்குத் தேவர்களே இவனை அனுப்பி வைத்துள்ளனர்!” என்று சொல்லி, ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா} அந்தக் குழந்தையை ராதையிடம் கொடுத்தான்.
அதன்பிறகு ராதை, தேவவடிவமும், தெய்வீக பிறப்பும், தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசமும், சிறந்த அருளும் நிரம்பிய அக்குழந்தையை {கர்ணனை}, விதிப்படி {தன் மகனாக} தத்தெடுத்துக் கொண்டாள். அவளால் {ராதையால்} முறைப்படி வளர்க்கப்பட்ட அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்ட குழந்தை {கர்ணன்} வளரத் தொடங்கினான். கர்ணனைத் தத்தெடுத்த பிறகு அதிரதன், தனது மற்ற மகன்களைப் பெற்றான். பிரகாசமான கவசமும், பொன்மயமான காது குண்டலங்களும் பெற்ற அக்குழந்தைக்கு {கர்ணனுக்கு}, இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} வசுசேணன் என்று பெயரிட்டார்கள். இப்படியே பெரும் பிரகாசமும், அளவிடமுடியாத பராக்கிரமும் பெற்றவன் {கர்ணன்} தேரோட்டியின் {அதிரதனின்} மகனாகி, வசுசேணன் என்றும் விருஷன் என்றும் அறியப்பட்டான்.
தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.
திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நட்பேற்பட்ட பிறகு, அவன் {கர்ணன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் காயமேற்படுத்தும் நோக்கம் கொண்டவனானான். உயர் ஆன்மா கொண்ட பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} சண்டை போடுவதையே {போரிடுவதையே} அவன் எப்போதும் விரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் {கர்ணனும் அர்ஜுனனும்} முதன்முதலாக ஒருவருக்கொருவர் பார்த்தபோதிலிருந்தே, கர்ணன் எப்போதும் அர்ஜுனனுக்குச் சவால் விடுவான். அர்ஜுனனும் அவனது பங்குக்கு {கர்ணனிடம்} சவால் விடுவான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதுவே குந்தியிடம் தான் பெற்று, சூதர்கள் குலத்தால் வளர்க்கப்பட்ட கர்ணனைக் குறித்துச் சூரியன் அறிந்த ரகசியம் என்பதில் சந்தேகமில்லை.
காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் அவனைக் {கர்ணனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனைப் {கர்ணனைப்} போரில் கொல்ல முடியாது என்று எண்ணி, அதனால் எப்போதும் {உள்ளத்தில்} பெரும் வலி கொண்டான். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நாளின் மத்திய வேளையில், கர்ணன் நீரில் இருந்து எழுந்ததும், கரங்கள் கூப்பி பிரகாசமிக்கச் சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் {கர்ணனிடம்} செல்வம் கேட்பதை அந்தணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஒன்றைக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்கு ஏதுமில்லை. பிறகு, (இது போன்ற ஒரு சமயத்தில்) இந்திரன், அந்தண வேடம் பூண்டு அவன் {கர்ணன்} முன் தோன்றி, “எனக்குக் {பிட்சை} கொடு!” என்று கேட்டான். அதன் பிறகு ராதையின் மகன், “நீர் வரவேற்கப்படுகிறீர் {நல்வரவு}!” என்று மறுமொழி கூறினான்.
தேவி பாகவதத்தில் ஒரு இடத்தில் தச்சன் என்றும், மறுஇடத்தில் தேரோட்டி என்றும் அதிரதன் சொல்லப்படுகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.