Kunti obtained the ear-rings and the coat of mail for Karna! | Vana Parva - Section 305 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
சூரியனைச் சமாதானப்படுத்த முயன்ற குந்தி; சூரியன் அவளுக்குக் காது குண்டலங்களும், கவசமும் கொண்ட மகன் பிறப்பான் என்று சொன்னது; குந்தி சூரியனை ஏற்றது; குந்தி மயங்கி விழுந்தது; சூரியன் அவளது கன்னித்தன்மையை அழிக்காது, தன்னை அவளது கருவறையில் வைத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த உன்னதமான பெண் {குந்தி} அவனிடம் {சூரியனிடம்} இனிய வார்த்தைகளில் பேசினாலும், அவளால் ஆயிரங்கதிர் கொண்ட தெய்வத்தின் {சூரியனின்} கருத்தை மாற்ற முடியவில்லை. இருளை அகற்றுபவனின் கருத்தை மாற்றுவதில் தோல்வியுற்ற அவள் {குந்தி}, கடைசியாகச் சாபத்துக்கஞ்சி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “என் காரியமாக எனது அப்பாவி தந்தையும் {குந்திபோஜனும்}, அந்தப் அந்தணரும் {துர்வாசரும்}, கோபக்கார சூரியனின் சாபத்தில் இருந்து எப்படித் தப்புவார்கள்? சக்தியும், தவமும் பாவங்களை அழிக்கவல்லதாயினும், முதிராத வயது கொண்ட நேர்மையானவர்கள், முட்டாள்தனமாக அவற்றை அணுக முடியாது. அது போன்ற வழியில் முட்டாள் தனமாக நடந்ததால்தான் நான் இன்று இந்த அஞ்சத்தக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளேன். உண்மையில் நான் இந்தத் தெய்வத்தின் {சூரியனின்} பிடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், நானாகவே என் உடலை இவருக்கு {சூரியனுக்கு} கொடுத்து, பெரும் பாவத்தை எப்படிச் செய்ய முடியும்?” என்று நீண்ட நேரம் சிந்தித்தாள்.”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சாபம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவளுக்குள்ளாகவே நிறையச் சிந்தித்ததால் புலன்களின் முழு உணர்வு மழுக்கம் {உணர்வு தெரியாத நிலை} அவளுக்கு ஏற்பட்டது. எதைத் தீர்மானிப்பது என்று அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்தத் தெய்வத்திற்கு {சூரியனுக்குக்} கீழ்ப்படிந்தால் ஏற்படும் நண்பர்களின் நிந்தனை குறித்து ஒரு புறம் அஞ்சிய அவள் {குந்தி}, ஓ மன்னா {ஜனமேஜயா}, மறுபுறம் மறுத்தால் ஏற்படும் சாபத்தைக் குறித்தும் சிந்தித்த அந்தக் கன்னிகை கடைசியாக, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவனிடன் {சூரியனிடம்}, நடுங்கும் வார்த்தைகளின் நாணத்துடன், “ஓ! தேவரே {சூரியா}, என் தந்தை, தாய், நண்பர்கள் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நான் கடமையை மீறுதல் என்பது நடக்கக்கூடாது. ஓ! தேவரே {சூரியனே}, உம்முடன் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்தேனானால், என் நிமித்தமாக எனது குலத்தின் மதிப்பு இவ்வுலகத்தில் தியாகம் செய்யப்பட வேண்டும். எனினும், ஓ! வெப்பமளிப்பவர்களில் முதன்மையானவரே {சூரியனே}, நீர் இதைத் தகுதியுடைய செயல் என்று கருதினால், எனது உறவினர்கள் என்னை உமக்கு அளிக்கவில்லையெனினும் நான் உமது விருப்பத்தை நிறைவேற்றுவேன்! நான் உமக்கு என்னை அளித்த பிறகும் நான் கற்புடன் நீடிக்க வேண்டும்! அறம், மதிப்பு, புகழ், ஒவ்வொரு உயிரினத்தின் உயிர் ஆகியன உம்மில் நிறுவப்பட்டுள்ளன என்பது நிச்சயம்!” என்றாள் {குந்தி}.
அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உனது தந்தையோ, தாயோ அல்லது மற்ற பிற பெரியோரோ உன்னை எனக்குக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை. ஓ! அழகான காரிகையே, உனக்கு நன்மையே விளையட்டும்! எனது வார்த்தைகளைக் கேள்! ஒரு கன்னிப் பெண் அனைவரின் துணையையும் விரும்புவதாலேயே, ஆசை என்ற பொருள் கொண்ட காமம் என்ற வேரில் இருந்து {வேர்ச்சொல்லில் இருந்து} அவளுக்குக் கன்னிகை {kanya} என்ற பெயர் உண்டானது. எனவே, ஓ! சிறந்த இடைகளும், அழகிய நிறமும் கொண்டவளே, ஒரு கன்னிகை, இவ்வுலகில் இயற்கையாகவே சுதந்திரமானவளாக இருக்கிறாள். ஓ! பெண்ணே, எனது கோரிக்கைக்கு உடன்படுவதால் நீ எந்தப் பாவத்திற்கான குற்ற உணர்வையும், எந்த வகையிலும் அடைய மாட்டாய். அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விரும்பும் நான் எவ்வாறு ஒரு அநீதியான செயலைச் செய்வேன்? ஆண்கள் பெண்கள் அனைவரும் எந்தத் தடைகளாலும் கட்டுப்படக்கூடாது என்பதே இயற்கையின் நியதி. இயற்கைக்கு மாறானதே {தவறானதே} எதிர் நிலை ஆகும். எனக்கு மனநிறைவளித்த பின்னரும் நீ கன்னியாகவே நீடிப்பாய். உனது மகனும் வலிய கரங்கள் கொண்டவனாகவும் சிறப்புமிக்கவனாகவும் இருப்பான்" என்றான் {சூரியன்}.
அதற்குப் பின்னர் குந்தி {சூரியனிடம்}, “ஓ! இருளை அகற்றுபவரே {சூரியனே}, நான் உம்மிடம் இருந்து மகனை அடைந்தால், அவன் கவசத்துடனும், காது குண்டலங்களுடனும், வலிய கரங்கள் கொண்டவனாகவும், பெரும் சக்தி நிறைந்தவனாகவும் இருக்கட்டும்!” என்றாள். அவளது {குந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “ஓ மேன்மையான கன்னிகையே {குந்தி}, எனது மகன் வலிய கரங்கள் கொண்டவனாகவும், காதுகுண்டலங்கள் மற்றும் கவசம் அணிந்தவனாகவும் இருப்பான். அவனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இரண்டும் அமிர்தத்தால் ஆனவையாக இருக்கும். அவனது கவசம் துளைக்க முடியாததாக இருக்கும்" என்றான் {சூரியன்}.
பிறகு குந்தி {சூரியனிடம்}, “நீர் என்னிடம் பெறும் மகனுடைய அந்தச் சிறந்த கவசமும், காதுகுண்டலங்களும் அமிர்தத்தாலானவை என்றால், ஓ! தேவரே, ஓ! வழிபடத்தகுந்த தெய்வமே {சூரியனே}, உமது நோக்கம் நிறைவடையட்டும்! அவன் {அந்த மகன்}, உம்மைப் போலவே சக்தியுள்ளவனாகவும், வலுவானவனாகவும், ஆற்றலுடையவனாகவும், அழகானவனாகவும் இருக்கட்டும்! அவன் அறம் நிறைந்தவனாக இருக்கட்டும்!” என்றாள். பிறகு சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இளவரசி, ஓ! சிறந்த காரிகையே {குந்தி}, இந்தக் காது குண்டலங்களை அதிதி எனக்குக் கொடுத்தாள். ஓ! அச்சமுள்ள பெண்ணே {குந்தி}, நான் இவற்றையும், சிறப்பான கவசத்தையும் உனது மகனுக்கு அளிப்பேன்!” என்றான். பிறகு குந்தி, “ஓ! வழிபடத்தகுந்தவரே, ஓ! ஒளியின் தலைவரே {சூரியனே}, எனது மகன் நீர் சொல்வது போல இருப்பானாகில், நான் உம்மை மனம் நிறையச் செய்வேன்!” என்றாள்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளது வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான். சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான அந்த விண்ணதிகாரி {சூரியன்}, தனது ஆன்மாவை யோகத்தில் நிலைக்க வைத்து, குந்திக்குள் நுழைந்து அவளது தொப்புளைத் தொட்டான். இதனால், சூரியனின் சக்தியின் நிமித்தமாக அந்தக் காரிகை {குந்தி}, மயங்கி விழுந்தாள். அந்த மதிப்பிற்குரிய பெண் பிறகு தனது கட்டிலில் விழுந்து, உணர்வுகளையும் இழந்தாள். பிறகு சூரியன் அவளிடம் {குந்தியிடம்}, “ஓ! அருள்நிறைந்த இடை கொண்டவளே {குந்தி}, ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக வரும் ஒரு மகனை நீ பெறுவாய். அதே வேளையில் நீ கன்னியாகவே இருப்பாய்" என்றான் {சூரியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பெரும் பிரகாசம் கொண்ட சூரியன் செல்லத்தொடங்கிய போது, அந்தப் பெண் {குந்தி} நாணத்துடன், “அப்படியே ஆகட்டும்" என்றாள். இப்படியே மன்னன் குந்திபோஜனின் மகள் {குந்தி}, சூரியனால் தொந்தரவு செய்யப்பட்டு {importuned by Surya}, அவனிடம் {சூரியனிடம்} இருந்து ஒரு மகனை அடைந்து, உடைந்த கொடி போல அந்தச் சிறந்த படுக்கையில் மயங்கி விழுந்தாள். இப்படியே கடுங்கதிர்களைக் கொண்ட தெய்வம் {சூரியன்}, அவளை மயங்கச் செய்து, யோக சக்தியின் அறத்தால் அவளுக்குள் நுழைந்து, அவளின் {குந்தியின்} கருவறையில் தன்னையே வைத்தான். எனினும், அந்தத் தெய்வம் {சூரியன்}, சதையால் கன்னித் தன்மையழித்து அவளை {குந்தியை} மாசுபடுத்தவில்லை. சூரியன் சென்றதும், அந்தப் பெண் {குந்தி} தனது உணர்வை மீண்டும் பெற்றாள்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.