Yaksha's questions and Yudhishthira's answers! | Vana Parva - Section 311c | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “மனிதனுடைய ஆன்மா எது? தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்? மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது? அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?” என்று கேட்டான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}” என்று பதிலளித்தான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது? ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது? லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது? அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது; உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்; லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}; அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது? எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது? அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது? கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}; மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன; மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது; நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்? எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது? எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்? எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது; கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது; ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது; பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்? நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காக {கொடுக்க வேண்டும்}? பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}? மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறத்தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்; நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்; பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்; அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தை மூடியிருப்பது எது? தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது? நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது? சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “உலகம் இருளால் மூடியிருக்கிறது; ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது; பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்; உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்? ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்; மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; அந்தணர்களுக்குத் தானம் இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வழி என்பது எது? நீராகப் பேசப்படுவது எது? உணவு எது? நஞ்சு எது? சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது? என்பதையும் சொல்லி, {நீரைக்} குடித்து, நீ விரும்பிய அளவு எடுத்துச்செல்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “எது நன்மையோ அதுவே வழி [1]; வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது [2]; பசுவே உணவு [3]; வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம் {அந்தணர்களின் பொருள் விஷம் என்று வேறு பதிப்பில் இருக்கிறது}; ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம் [4]. ஓ! யக்ஷா, இவை அனைத்தையும் குறித்து நீ என்ன நினைப்பாய் என்பதை நான் அறிய மாட்டேன்" என்றான்.
[1] //இதற்கான கேள்வியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் {சம்ஸ்க்ருத மூலத்தில்} "திக்" என்பதாகும், அதன் பொருள் திசை என்பதாகும். நிச்சயமாக, இதன் தொடர்ச்சியாக வழி என்ற பொருளே வெளிப்படையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரனின் பதிலில் நன்மையான வழியில் நடப்பதே வழி என்ற பொருளே வருகிறது.// என்கிறார் கங்குலி[2] //உண்மையில் நீரை, சுருதிகள் வெளி {ஆகாயம்} என்றே பேசுகின்றன. வேதத்தில் உள்ள அண்டவுற்பத்தியியல் {Vedic cosmogony} குறித்து யுதிஷ்டிரனின் ஞானத்தைச் சோதிப்பதற்கான கேள்விகள் இவை.// என்கிறார் கங்குலி.[3] //பின்வரும் பொருளிலேயே பசுக்களே ஒரே உணவு என்று சுருதிகளில் பேசப்படுகிறது. பசுப் பால் கொடுக்கிறது. பால் நெய்யைக் கொடுக்கிறது. நெய் ஹோமத்தில் பயன்படுகிறது. ஹோமம் மேகங்களுக்குக் காரணமாகிறது. மேகங்கள் மழையைத் தருகின்றன. மழை, விதையை முளைக்கச் செய்து, உணவை உற்பத்தி செய்கிறது. நீலகண்டர் இதை ஓர் ஆன்மிக உணர்வுடன் தக்கபடி விளக்குகிறார். எனினும் அத்தகைய விளக்கம் இங்கே தேவையில்லை.// என்கிறார் கங்குலி.[4] //இங்கே யுதிஷ்டிரன் சொல்ல நினைப்பது என்னவென்றால், சிராத்தத்திற்குக் குறித்த நேரம் என்பது இல்லை. எப்போது ஒரு நல்ல, திறன்மிக்கப் புரோகிதரை அடைய முடியுமோ அப்போது {சிராத்தம்} செய்யலாம்.// என்கிறார் கங்குலி.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது? உண்மையான அடக்கம் {தமம்} எது? பொறுமை எனப்படுவது எது? வெட்கம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு}; மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது; பகையைச் சகிப்பதே பொறுமை; தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} ஞானம் என்று சொல்லப்படுவது எது? அமைதி எது? கருணை எது? எளிமை என்று அழைக்கப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்; இதய {மன} அமைதியே உண்மையான அமைதி; அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை; இதய அமைதி {மன அமைதியே} எளிமை" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வெல்லப்படமுடியாத எதிரி எது? மனிதனின் தீராத நோய் எது? எவ்வகை மனிதன் நேர்மையானவன்; எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கோபமே வெல்லப்பட முடியாத எதிரி; பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்; அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்; கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறியாமை என்பது எது? கர்வம் என்பது எது? சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது? துன்பமெனப் பேசப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை. ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும். ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும். ஒருவனது அறியாமையே துக்கமாகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது? பொறுமை எது? உண்மையான சுத்தம் என்பது எது? தானம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும். புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்; மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}. அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்? எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்? எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்? எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? ஆசையின் ஊற்றுக்கண்கள் எவை? பொறாமை எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும். ஞானமற்றவனே நாத்திகன், அது போலவே நாத்திகனே ஞானமற்றவன். உடைமைகளுக்குக் காரணமே ஆசை; இதய {மன} துக்கமே பொறாமை, வேறு எதுவுமில்லை" என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.
{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.