“Let Nakula live!” said Yudhishthira! | Vana Parva - Section 311d | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்: யுதிஷ்டிரன் அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையான பதிலைச் சொன்னதால், அவனது தம்பிகளில் யுதிஷ்டிரன் விரும்பும் ஒருவனை மட்டும் பிழைக்க வைப்பதாக யக்ஷன் சொன்னது; யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்டது; பீமனையும், அர்ஜுனனையும் கேட்காமல் ஏன் யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்கிறான் என்று யக்ஷன் கேட்டது; அதற்கான பதிலை யுதிஷ்டிரன் சொன்னது; யுதிஷ்டிரனின் பதில்களால் மனநிறைவு கொண்ட யக்ஷன் பாண்டவர்கள் அனைவரையும் பிழைப்பிப்பதாகச் சொன்னது...
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்) , “ கர்வம் {அகங்காரம்} எது? பேடிசம் {டம்பம்}{#} எது? தேவர்களின் அருள் எது? பொல்லாங்கு {தீய குணம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்), “எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்} ஆகும். {அஞ்ஞானமே அகங்காரம்}. அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும். {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}. தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும். பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்!" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, “அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்? நான் கேட்ட கேள்விக்கு விரைந்து பதிலளிப்பதே உனக்குத் தகும்!” என்று சொன்னான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான். வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ருக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும். செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர} கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}? மெய்யுறுதியுடன் எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}. ஒருவன் தனது நடத்தையைக் கெடாநிலையுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை. பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன். நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும். அக்னிஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன? எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன? நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன? அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}. தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான். பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்? அதிசயமானது எது? பாதை எது? {தினமும் நடைபெறும்} செய்தி எது? இந்த எனது நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்து, இறந்து போன உனது தம்பியரை மீட்டெடு!" என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! நிலத்திலும் நீரிலும் வாழ்பவனே {யக்ஷா}, கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான். நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்? வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை. அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியனே, நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்." என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளை அடக்குபவனே, எனது அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையில் பதிலளித்துவிட்டாய்! உண்மையில் யார் மனிதன் என்றும், அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார் என்றும் இப்போது எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.} ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, யார் மனிதன் என்பதற்கும், அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்ட மனிதன் யார் என்பதற்கும் உண்மையாகப் பதிலளித்து விட்டாய். எனவே, உனது தம்பிகளில், நீ விரும்பும் ஒருவன் மட்டும் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷன்}, “ஓ! யக்ஷா, கறுத்த நிறமும், சிவந்த கண்களும், பெரும் ஆச்சா {சால} மரம் போன்ற உயரமும், அகன்ற மார்பும், நீண்ட கைகளும் கொண்ட நகுலன் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பீமசேனன் உனக்கு அன்பானவன், இந்த அர்ஜுனனைத்தான் நீங்கள் அனைவரும் நம்பியிருக்கிறீர்கள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது மாற்றாந்தாய் மகன் ஏன் உயிருடன் எழும்ப வேண்டும் என்று விரும்புகிறாய்! பத்தாயிரம் யானைகள் பலத்திற்கு ஈடான பலம் கொண்ட பீமனைக் கைவிட்டு, நகுலன் உயிர்வாழ நீ எவ்வாறு விரும்புகிறாய்? இந்தப் பீமனே உனக்கு அன்பானவன் என்று மனிதர்கள் சொல்கிறார்களே. என்ன நோக்கத்திற்காக நீ மாற்றாந்தாய் மகனான உனது தம்பியை மீட்க விரும்புகிறாய்? பாண்டுவின் மகன்கள் அனைவராலும் வழிபடப்படும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனனைக் கைவிட்டு, நகுலனை மீட்க நீ ஏன் விரும்புகிறாய்?" என்று மீண்டும் கேட்டான்.
யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறம் தியாகம் செய்யப்பட்டால் {அறத்தைக் கைவிட்டால்}, அதைத் தியாகம் செய்பவன், தானே தொலைந்து போகிறான். அறம், தன்னைக் {அறத்தைக்} காப்பவனைக் காக்கிறது. எனவே, அறத்தைத் தியாகம் செய்து நம்மையே தொலைக்காமல் {அழிந்துவிடாமல்} இருக்கக் கவனம் கொண்டு, நான் எப்போதும் அறத்தைக் கைவிடுவதில்லை. ஊறிழைக்காமையே {அகிம்சையே} உயர்ந்த அறம் என்றும், அடையவிரும்பும் மிக உயர்ந்த சாதனையைவிட அதுவே {ஊறிழைக்காமையே} உயர்ந்தது என்றும் நான் கருதுகிறேன். நான் முனைப்புடன் அறம் பயிலவே முயல்கிறேன். எனவே, ஓ! யக்ஷா, நகுலன் புத்துயிர் பெறட்டும்! மன்னன் {நான்} எப்போதும் அறம் சார்ந்தவன் என்பதை மனிதர்கள் அறியட்டும்! நான் எப்போதும் கடமை தவறமாட்டேன். எனவே நகுலன் புத்துயிர் பெறட்டும்! என் தந்தை {பாண்டு} குந்தி, மாத்ரி என இரு மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் {தத்தமக்கு ஒரு} பிள்ளையைப் பெற்றிருக்கட்டும். இதையே நான் விரும்புகிறேன். எனக்கு எப்படிக் குந்தியோ, அப்படியே மாத்ரியும். என் கண்களில் அவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. நான் எனது தாய்மாருக்குச் சமமானவனாக நடக்க விரும்புகிறேன். எனவ, நகுலன் பிழைக்கட்டும்!” என்றான் {யுதிஷ்டிரன்}.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பொருளையும், இன்பத்தையும் விட ஊறிழைக்காமையை {அகிம்சையை} நீ உயர்வாகக் கருதுகிறாய். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா} உனது தம்பிகள் அனைவரும் பிழைக்கட்டும்!” என்றான் {யக்ஷன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.