Yaksha's questions and Yudhishthira's answers! | Vana Parva - Section 311b | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனிடம் யக்ஷன், தனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நீர் குடிக்குமாறு சொன்னது; யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்தது; யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “கடும் மொழியில் அறிக்கையிடப்பட்ட, இந்தச் சபிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {Yudhishthira}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கு நின்று கொண்டிருந்த யக்ஷனை {Yaksha }அணுகினான். பிறகு அந்தப் பாரதர்களில் காளை {யுதிஷ்டிரன்}, வழக்கத்திற்கு மாறான கண்களும், பனை மரம் போன்ற உயர்ந்த பெரிய உடலும், நெருப்பைப் போலவோ சூரியனைப் போலவோ இருப்பவனும், தாங்க முடியாத பெரும் உருவம் கொண்ட மலை போன்றவனுமான யக்ஷன், ஒரு மரத்தில் இருந்து கொண்டு, மேகங்களுக்கு ஒப்பான ஆழ்ந்த கர்ஜனையை உரக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} என்னால் திரும்பத் திரும்பத் தடுக்கப்பட்டும் உனது தம்பிகள் வலுக்கட்டாயமாக நீரை எடுக்க முயன்றனர். அதற்காகவே அவர்கள் என்னால் கொல்லப்பட்டனர்! வாழ விரும்பும் ஒருவன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த நீரைக் குடிக்கலாகாது! ஓ! பிருதையின் மகனே {{Son of Pritha - குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நீ விரும்புமளவுக்கு {நீரை} எடுத்துச் செல்!” என்றான் {யக்ஷன்}.
யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “ஓ! யக்ஷா, ஏற்கனவே உனது உடைமையாக இருக்கும் ஒன்றின் மேல் நான் ஆசை கொள்ளவில்லை! ஓ! ஆடவரில் காளையே, தன்னையே பாராட்டிக் கொள்ளும் ஒருவனை அறம் சார்ந்த மனிதர்கள் அங்கீகரிப்பதில்லை. (எனவே, தற்பெருமை பேசாமல் உனது கேள்விகளுக்கு எனது புத்திக்கூர்மையினால் பதிலளிக்கிறேன்). நீ என்னிடம் கேள்!” என்றான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது சூரியனை உதிக்கச் செய்கிறது? யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்? எது அவனை மறையச் செய்கிறது? எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது; தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்; தர்மமே அவனை மறையச் செய்கிறது; அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்" [1] என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்" என்று பதிலளித்தான். [2]
[1] {ஆதித்தியன் என்பது சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள சொல், கங்குலியில் Sun என்று குறிப்பிட்டுள்ளதால், சூரியன் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்} //கேள்வியிலும், பதிலிலும் உள்ள வார்த்தைகளில் எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரியும் பொருளைத்தவிர, அதற்கு ஆன்மிக வகைச் சார்ந்த ஆழ்ந்த கருத்தும் உண்டு. இந்த வாசகத்தை நீலகண்டர் சரியாகப் புரிந்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆதித்தியன் என்பது பொதுவாகச் சூரியன் என்று பொருள்பட்டாலும், அது சுத்திகரிக்கப்படாத ஆன்மாவைச் சுட்டுகிறது. அப்படிப் பார்த்தால்,
முதல் கேள்விக்கு “சுத்திகரிக்கப்படாத ஆன்மாவை யார் மேன்மையடையச் செய்வது?” என்ற பொருள் பொருந்தி வரும். உலகம் சார்ந்த தொடர்புகளில் இருந்து ஆன்மா எழுவதே மேன்மையான செயல் எனப்படும். இதற்கான பதில், “பிரம்மம், அதாவது வேதம் அல்லது சுய அறிவு" எனக் கொள்ளலாம். தொடர்ந்து வரும்
இரண்டாவது கேள்வியை "சுத்திகரிப்புப் பணியின் போது அந்த ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவை எவை?" என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கான பதிலை, "தேவர்களைப் போலத் தெய்வீக இயல்பு கொண்ட தன்னடக்கம் மற்றும் பிற குணங்கள்" எனக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது கேள்வியை, “ஆன்மாவை யார் ஓய்வு (நிலைக்கு) அழைத்துச் செல்கிறார்?" என்று புரிந்து கொண்டால், அதற்கான பதிலை, “அறம் {தர்மம்}, அதாவது நன்னெறி, நடத்தை {ஒழுக்கப்பண்பு}, அறநோன்புகள்" எனக் கொள்ள வேண்டும். ஓய்வுநிலை, உண்மை {சத்தியம்}, பரிசுத்தமான ஞானம் ஆகியவற்றை அடைவதற்கு முன்னர் ஒருவன் (கர்மாவை) செயல்கள் மூலம் கடக்க வேண்டும் என்று பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.
கடைசிக் கேள்வியை "எதில் ஆன்மா நிறுவப்பட்டுள்ளது?” என்று புரிந்து கொண்டு, அதற்கான பதிலாக, ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, “உண்மை {சத்தியம்}, அல்லது பரிசுத்த ஞானம்" என்று பதிலாகக் கொள்ள வேண்டும். விடுதலையின் வடிவம் ஆன்மா என்பதாலும், அனைத்து உடல் தொடர்புகளிலிருந்தும் {ஆன்மா} உயர எழ வேண்டும் என்பதாலும், அது {ஆன்மா} நோன்புகளையும் செயல்களையும் இனியும் நம்பியிருக்கவில்லை என்றும் ஆனால் அது {ஆன்மா} {ஜனனம் என்ற} உண்மை ஞானத்தில் அசைவற்று நிலைத்திருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்// என்கிறார் கங்குலி
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்" என்று பதிலளித்தான். [2]
[2] திருதி, துவிதியை ஆகிய இரண்டையும் நீலகண்டர் ஆன்ம உணர்வுடனேயே விளக்குகிறார். எனினும் இங்கே ஆன்மீக விளக்கம் தேவையில்லை. திருதி என்பது புத்திக்கூர்மை நிலைத்திருக்கும் தன்மை; துவிதியை என்பது இரண்டாவது என்பதாகும். யுதிஷ்டிரன் இங்கே சொல்வதென்னவென்றால் தடுமாறாத நிலைத்த புத்திக்கூர்மையே பயனுள்ள நோக்கங்களுக்கு உதவுகிறது. என்கிறார் கங்குலி.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது? அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது. அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது; இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை. அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன? அவர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும். பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும். அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும். {துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது? வேள்விக்கான யஜுஸ் என்பது எது? ஒரு வேள்விக்கான புகலிடம் எது? எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்; மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும். வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது. அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது" என்று பதிலளித்தான் [3]
[3] //"வேள்வி என்பது பரிசுத்தமான ஞானத்தை அடைவதற்கான ஆன்மத் தியாகம்" என்று நான் {கங்குலி} கருதுவது போல நீலகண்டர் இதைச் சரியாக விவரிக்கிறார். ஒருவன் வேள்வியைக் கொண்டாடும் நோக்கத்திற்குச் சாமம், யஜுர் மற்றும் ரிக்கு மந்திரங்கள் அனைத்தும் அவசியம். புறநிலை வேள்விக்குச் சாம யஜுர் வேத மந்திரங்கள் தேவை என்பது போல, அகநிலை வேள்வியில் உண்மை ஞானத்தை அடைய, வாழ்வு {உயிர்} மற்றும் மனம் ஆகியவை அவசியம். எந்தப் புறநிலை வேள்வியையும் ரிக்கு இல்லாமல், அதை முக்கியமாகக் கருதாமல் செய்ய முடியாதது போல, உண்மை ஞானத்தை அடையக் கருதும் அகநிலை வேள்விளையும் துதிகள் இல்லாமல் செய்ய முடியாது என்றும், ரிக்குகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன என்றும் நான் {கங்குலி} கருதுகிறேன். இந்தப் பத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள அக்னிஷ்டோமா அல்லது பிற வகை வேள்விச் சடங்குகளின் நெருக்கமான அறிமுகம் தேவை.// என்கிறார் கங்குலி.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு {அ} வைசியருக்கு} முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது? விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது? இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது? [4a] பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை; விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை; பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} [4b] " என்று பதிலளித்தான்.
[4a] இந்தக் கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் சொல்வதாக கங்குலியில் காட்டப்பட்டவில்லை. வேறு பதிப்புகளில் செழிப்படைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது பசு என்று யுதிஷ்டிரன் சொன்னதாக இருக்கிறது. "gāvaḥ" என்று பசுக்களைக் குறிக்கும் சொல் சம்ஸ்க்ருத மூலத்தில் இருக்கிறது.
[4b] சில பதிப்புகள் அபதத்தம் என்றும் உவபதம் என்றும் குறிக்கின்றன. முன்னது சரியாக இருப்பின், அதன் பொருள் "நேர்வதில் சிறந்த பொருள் எது?" என்றாகும். நீலகண்டர் அவபதம் நிவபதம் ஆகிய இரண்டையும் ஆன்ம உணர்வாக விவரிக்கிறார். முதலில் அவர் "தேவர்களுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்றும் இரண்டாவதாக "பித்ருகளுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்" என்று புரிந்து கொள்கிறார். இருப்பினும், வெளிப்படையாகப் பார்த்தால் ஆன்மிக விளக்கத்திற்கான தேவை இதற்கு இல்லை.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானது எது? சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது? காற்றைவிட வேகமானது எது? புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "பூமியை விடக் கனமானவள் தாய்; சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை; காற்றைவிட வேகமானது மனம்; புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உறங்கும்போது கண்களை மூடாதது எது? பிறந்த பிறகும் நகராதது எது? இதயம் இல்லாதது எது? தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை; பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை; இதயமற்றிருப்பது கல்; தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்? இல்லறத்தானுக்கு யார் நண்பன்? நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்? சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "நாடுகடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே [5] நண்பன்; இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே; நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்; சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்" என்று பதிலளித்தான்.
[5] சார்த்த {sārthaḥ} என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் வழிப்போக்கர் கூட்டம் என்று பொருள் என்கிறார் கங்குலி. வித்தையே நண்பன் என்றும் வேறு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்? நித்திய கடமை என்பது யாது?! ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அமிர்தம் என்பது என்ன? இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்; பசுவின் பாலே அமிர்தம்; ஹோமமே நித்திய கடமை; இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது" என்று பதிலளித்தான் [6].
[6] அண்டத்தில் வியாபித்துள்ள பூதம் காற்று {வாயுவே} என்று சொல்வதற்குச் சுருதிகளில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்கிறார் கங்குலி.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எவன் தனியாக உலவுகிறான்? பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்? குளிர்ச்சிக்கான தீர்வு என்ன? பெரிய களம் எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "சூரியன் தனியாக உலவுகிறான்; சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான். குளிருக்கான தீர்வு நெருப்பு; பூமியே பெரிய களம்" என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தின் உயர்ந்த புகலிடம் எது? புகழுக்கு எது? சொர்க்கத்திற்கு எது? மகிழ்ச்சிக்கு எது?" என்று கேட்டான். யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஈகையே {தானமளிப்பது; Liberality = தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்: புகழுக்குக் கொடை; சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்}; மகிழ்ச்சிக்கு நன்னடத்தை {ஆகியன உயர்ந்த புகலிடங்களாக இருக்கின்றன}" என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன்.
{யக்ஷனின் கேள்விகளும், யுதிஷ்டிரனின் பதில்களும் தொடரும்....}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.