Nakula as Granthika! | Virata Parva - Section 12 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 12)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : நகுலன் விராடன் சந்திப்பு; நகுலனை தனது குதிரைகளின் காப்பாளராக மன்னன் விராடன் நியமிப்பது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சிறிது நேரம் கழித்து, பாண்டுவின் மற்றொரு பலமிக்க மகன் {நகுலன்} மன்னன் விராடனிடம் விரைவாகச் சென்ற காட்சி காணப்பட்டது. அவன் {நகுலன்} அப்படி முன்னேறிச் செல்கையில் மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போல அனைவருக்கும் தெரிந்தான். அவன் {நகுலன்} சுற்றிலும் இருந்த குதிரைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} தனது தொண்டர்களிடம், “தேவனைப் போன்ற பிரகாசமிக்க அந்த மனிதன் எங்கிருந்து வந்தான், என்று அதிசயிக்கிறேன். அவன் எனது குதிரைகளைக் கவனமாக நோக்குகிறான். நிச்சயமாக அவன் குதிரை சாத்திரங்களில் கைதேர்ந்தவனாக இருக்க வேண்டும். விரைவில் அவனை எனது முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள். அவன் போர்வீரனாகவும் தேவனாகவும் தெரிகிறான்!” என்றான் {விராடன்}. அந்த எதிரிகளை அழிப்பவன் {நகுலன்} மன்னனிடம் {விராடனிடம்} சென்று, “ஓ! மன்னா {விராடரே}, வெற்றி உமதாகட்டும். நீர் அருளப்பட்டிரும். குதிரை பயிற்சியாளராக, நான் எப்போதும் மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கிறேன். நான் உமது குதிரைகளைப் புத்திசாலித்தனமாகப் பாதுகாப்பேன்" என்றான் {நகுலன்}.
விராடன் {நகுலனிடம்}, “நான் உனக்கு வாகனங்களையும், செல்வத்தையும், பரந்த இடங்களையும் கொடுப்பேன். நீ எனது குதிரைகளைப் பார்க்கும் மேலாளராவாய். ஆனால் முதலில் நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்? நீ எப்படி இங்கு வந்தாய்? என்பனவற்றைச் சொல். நீ நிபுணத்துவம் கொண்ட கலைகள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்" என்று கேட்டான் {விராடன்}. அதற்கு நகுலன் {விராடனிடம்}, “ஓ! எதிரிகளைச் சிதைப்பவரே {விராடரே}, பாண்டு மகன்கள் ஐவரில் யுதிஷ்டிரரே மூத்த அண்ணன் என்பதை அறிந்து கொள்ளும். முன்பு நான் அவரால் {யுதிஷ்டிரரால்} குதிரை பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருந்தேன். குதிரைகளின் குணங்களை நான் நன்கு அறிவேன். அவற்றை உடைக்கும் கலையை முறையாக நான் அறிவேன். தீய குதிரைகளைச் சரி செய்வது எப்படி என்பதையும், அவற்றின் நோய்களைத் தீர்க்கும் முறைகளையும் நான் அறிவேன். என் கைகளில் இருக்கும் எந்த விலங்கையும் பலவீனமோ நோயோ அண்டாது. குதிரைகளைப் பற்றிப் பேச வேண்டாம்; என் கைகளில் இருக்கும் பெண்குதிரைகள் கூடத் தீயதாக அறியப்படாது. மக்கள் என்னைக் கிரந்திகன் {Granthika}என்ற பெயரில் அழைத்தார்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரும் என்னை அப்படியே அழைத்தார்" என்றான் {நகுலன்}.
விராடன் {நகுலனிடம்}, “நான் கொண்டிருக்கும் குதிரைகள் அனைத்தும் இன்றிலிருந்து உனக்கு அளிக்கப்படுகின்றன. குதிரைகளைக் காப்பவர்கள் அனைவரும், எனது தேரோட்டிகள் அனைவரும் இன்றிலிருந்து உனக்குத் துணைவர்களாக இருப்பார்கள். இது உனக்குத் தகுந்ததாக இருந்தால், நீ என்ன ஊதியம் விரும்புகிறாய் என்பதைச் சொல். ஆனால், ஓ! தேவனைப் போன்றிருப்பவனே {கிரந்திகா}, குதிரை அதிகாரியின் அலுவல் உனக்குத் தகாது. நீ மன்னனைப் போலத் தெரிகிறாய். நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். யுதிஷ்டிரனே இங்கு இருப்பது போல உனது தோற்றம் என்னை மகிழச் செய்கிறது. இகழத்தகாத அவன் {யுதிஷ்டிரன்} பணியாட்கள் இல்லாமல் காட்டில் வசித்து எப்படி உலவிக் கொண்டிருக்கிறானோ" என்றான் {விராடன்}.
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின் தலைவர்கள் {பாண்டவர்கள்}, வருந்தத்தக்க துன்பங்கள் ஒருபுறமிருப்பினும் தங்கள் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருந்து, தங்கள் மறைநிலை நாட்களைப் பெரும் அமைதியுடன் கழித்தார்கள்.{என்றார் வைசம்பாயனர்}.
*********பாண்டவ பிரவேச பர்வம் முற்றிற்று*********
*********************************************************************************
குறிப்பு:
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின்..........
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம். வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையே அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம்.
தற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில... இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.